ப்ரியங்கா சோப்ராவுக்கு இப்படி ஒரு ஹாலிவுட் என்ட்ரியா! `பேவாட்ச்' படம் எப்படி?

ஃப்ளோரிடாவில் அமைந்திருக்கும் எமரால்டு பேவை தனது டீமுடன் பாதுகாத்துவருகிறார் மிட்ச் பச்சனன். ஒருநாள் ஜாலியாக ஜாகிங் சென்றுகொண்டிருக்கும்போது அவரது கண்களில் போதைமருந்துப் பொட்டலம் ஒன்று தென்பட, அதை லீடாக வைத்து கதை நகர்கிறது. அனைவராலும் கணிக்கக்கூடிய கதைதான் `பேவாட்ச்'. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியில் ஹிட் அடித்த `பேவாட்ச்' தொடைரைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள். 

Bya watch

எமரால்டு பேவில் ஏற்கெனவே வேலைபார்க்கும் ஸ்டெஃப்னி ஹோல்டன், அனுபவமிக்க சி.ஜே.பார்கர் ஆகியோரின் உதவியுடன் தனது பாதுகாப்புத் துறைக்கு புதிதாக ஆள்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் மிட்ச் (டுவையின் ஜான்சன்). நஷ்டத்தில் சுழலும் பேவாட்சை, எப்படியும் மீட்டுவிட முயற்சிக்கிறார் அதன் உரிமையாளர் த்ரோப். வலைந்துகொடுக்கும் த்ரோப்புக்கும், 24*7 ஷோல்டர் தூக்கி நிற்கும் மிட்ச்சுக்கும் ஆரம்பம் முதலே மோதல்தான். அந்த டீமில் சி.ஜே மீது க்ரஷ்கொண்டிருக்கும் ரூனியும், சர்ஃபிங் செய்வதில் கில்லாடியான சம்மர் க்வின்னும் (அலெக்ஸாண்டிரோ டட்டாரியோ) மிட்ச் வைக்கும் சோதனையில் தேறிவிடுகிறார்கள். மறுபக்கம் ஒலிம்பிக் நீச்சல் போட்டி வீரர் மேட் ப்ரோடி. அவர் விளையாடும்போது நீச்சல்குளத்தின் உள்ளேயே வாந்தி எடுத்ததன் காரணத்தால், இந்த டீமுடன் இணைந்து சமூகசேவை செய்யுமாறு ஒப்பந்தம் போட்டுவிடுகிறார்கள். மிட்சைச் சந்தித்த முதல் நாளிலிருந்தே இருவருக்கும் முட்டிகொண்டுதான் இருக்கிறது. இதற்கிடையே விக்டோரியா லீட்ஸ் (ப்ரியங்கா சோப்ரா) செய்யும் தில்லுமுல்லு வேலைகளை எல்லாம் காட்டி, அவர்தான் வில்லி என்று பதிவுசெய்கிறார் இயக்குநர். 

Bay watch

ஆங்காங்கே சிரிக்கவைக்கும் ரூனி, மிட்ச்சின் காமெடிக் காட்சிகள் எல்லோருக்கும் பிடித்த இடமான கடலையும் கடற்கரையையும் படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை அழகாகக் காட்டியது என இவைதாம் படத்தில் எடுத்துச் சொல்லும்படியான விஷயங்களாக உள்ளன.

மற்றபடி ப்ரியங்கா சோப்ராவின் வில்லத்தனங்கள் படத்தில் எடுபடவில்லை. அவரின் ஆழ்மனதில் அவர் பெரிய வில்லி என இயக்குநர் பதியவைத்திருக்கிறார்போல. குவான்டிக்கோ தொலைக்காட்சியில் ஆக்‌ஷனில் கலக்கும் சோப்ரா, ஏன் இப்படித் தெரிகிறார் என யோசிக்கவைக்கிறார். கமர்ஷியல் படம் என்பதால் காமெடியில் சற்று அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆங்காங்கே போர் அடிக்கும் காமெடிகளுக்கு பதில் டுவையின் ஜான்சன் மற்றும் ஸாக் எஃப்ரானின் சிக்ஸ்பேக்குகளை அதிரிபுதிரி ஆக்‌ஷன் சீக்குவென்ஸ்களுக்கு இன்னும் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். தொடரில் மிட்சாக நடித்த டேவிட் ஹேஸல்ஹோஃப், படத்தில் வரும் மிட்ச் கதாபாத்திரத்துக்கு அட்வைஸ் செய்வதுபோல் ஒரு காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், `ப்ளேபாய்' புகழ் பமீலா ஆண்டர்சனின் சிறப்புத் தோற்றம் எல்லாம் `அடபோங்கப்பா!' ரகம்தான். படத்தின் கதை என்ன என்பதை படத்தில் வரும் நீச்சல் உடையிலேயே எழுதிவிடலாம் என்றால், படத்திலிருக்கும் லாஜிக் மிஸ்டேக்குகளை எல்லாம் எழுத டுவையின் ஜான்சனின் எக்ஸ்ட்ரா லார்ஜ் முதுகுகூட போதாது என்பதுதான் பெரும் சோகம். 

Bay watch

படத்தில் குறிப்பிடவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. வெண்ணிறஆடை மூர்த்தி சொல்வதுபோல், இந்திய சென்சார் போர்டு படத்தை எசகுபிசகாக வெட்டியதில் பாதிக் காட்சிகளை கமல் படம்போல் நாமே புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. `A' என சர்ட்டிஃபிகேட் கொடுத்த பிறகு, இப்படியெல்லாம் வெட்டுவது நியாயமாரே.... இதெல்லாம் பாவம் மை சன்!
 
படத்தில் இடம்பெற்ற காமெடிகளைவிட, முடிந்தவுடன் இடம்பெறும் ப்ளூப்பர்ஸ் காமெடிகள்தான் அல்ட்டிமேட் ரகம். அதை மிஸ்பண்ணாம பார்த்துட்டு வாங்க. படம் பார்த்த திருப்தியோடு வீட்டுக்குப் போகலாம். காமெடி, அதிரடி என்ற கலவையில் படம் சரியாக வராததால், வெறும் ஸ்விம்சூட்டை நம்பி களமிறங்கி இருக்கிறார்கள் (ப்ளூப்பர்ஸில் அதை நக்கலாக அலெக்ஸாண்டிரோ கேட்கவும் செய்கிறார்).

ஜாலி டைம்பாஸுக்காகப் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!