Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு ஊர்ல ரெண்டு தாதாவாம்..!? - 'சத்ரியன்' விமர்சனம்

கத்தி பிடித்தவனுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இந்த சத்ரியன் ரிட்டர்ன்ஸ்.

 

சத்ரியன்

திருச்சியையே ஆள நினைக்கும் இரண்டு நண்பர்கள் விக்ரம் பிரபு மற்றும் கதிர். இருவரும் திருச்சியைக் கலக்கும் வெவ்வேறு தாதாக்களிடம் சேர்கிறார்கள். அதில் விக்ரம் பிரபு, சமுத்திரத்திடம் (சரத்) வேலைக்கு சேர, கதிர் இவர்களின் எதிராளியான மணப்பாறை சங்கரிடம் (அருள் தாஸ்) வேலைக்கு சேர்கிறார். அமைச்சர் சொல்லியதன் பேரில் அருள்தாஸ், சரத்தைக் கொன்றுவிட திருச்சி அருள்தாஸ் கைக்கு செல்கிறது. இதற்கிடையில் சரத்தின் மகள் மஞ்சிமா மோகனுக்கு விக்ரம் பிரபு காவலனாக செல்ல நேரிடுகிறது. வழக்கம் போல ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கு காதல் வர, அதனால் பிரச்னை துவங்குகிறது. இந்த காதல் சேர்கிறதா, விக்ரம் பிரபுவை கொல்ல நினைக்கும் எதிரிகளிடமிருந்து விக்ரம் பிரபு தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் சத்ரியன் சொல்லும் கதை.

வழக்கமாக மதுரையில் ஒரு கேங்ஸ்டர் கூட்டம் என சொல்லும் கதையைக் கொஞ்சம் மாற்றி திருச்சியில் நடப்பது போல் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். வன்முறை தவறு, வன்முறையைக் கையில் எடுப்பவன் என்ன ஆவான் என்கிற சோஷியல் மெசேஜ் சொல்ல விரும்பிய இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் அதை சொன்ன விதம்தான்....

மஞ்சிமா

படத்தின் மூன்று ப்ளஸ்களைப் பற்றி முதலில் பார்த்துவிடலாம். பரபரப்பே இல்லாமல் நகரும் கதையை கொஞ்சமாவது பரபரப்பாக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. விக்ரம் பிரபு ஓடும் போதும், துரத்தும் போதும் திருச்சியின் சந்து பொந்து எங்கும் சுற்றிப் பதிவு செய்திருப்பதும், திருச்சியை வழக்கமான டோனிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாகக் காட்டிய விதத்தாலும் கவர்கிறது சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு. பறந்து பறந்து அடிக்கும் சண்டைகள் எதுவும் இல்லாமல், இயல்பாகவே ஒரு சண்டை நடந்தால் எப்படி இருக்கும் என ஓரளவு ஏற்றுக் கொள்ளும் படி அமைந்திருந்த அன்பறிவின் சண்டைக்காட்சிகள். அப்போ கதை, திரைக்கதை, வசனம்?

கதை இருக்கிறது, திரைக்கதை இருக்கிறது, தேவைக்கு அதிகமாகவே வசனமும் இருக்கிறது. ஆனால் எல்லாம் எக்ஸ்பயரி டேட் தாண்டியதாக இருப்பதுதான் பிரச்சனை. ஒரே டயலாக்தான் படம் முழுவதும் உங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ‘என்னடா சொல்ற?’, ‘அவனுக்கு நான் லைன் போடுறேன்’,’அந்த இடத்துக்கு நான்தான் வருவேன்’. படத்தில் இந்த வசனங்களை நீக்கிவிட்டால் கால் மணிநேரப் படமே காலி.   யோகிபாபுவைக் கொண்டு வந்து காமெடியைச் சேர்த்திருந்தது நன்று. ஆனால், அவரும் அரைநாள் கால்ஷீட்தான் கொடுத்திருப்பார் போல.  ஆளையே காணோம். 

 

குணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கு விக்ரம் பிரபு டீசன்டான பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கிறார். நிராயுதபாணியாக உயிருக்கு பயந்து பயந்து ஒளிந்து கொள்ளும் காட்சியில் அருமையாக நடித்திருக்கிறார். நிரஞ்ச் என்கிற நிரஞ்சனாவாக மஞ்சிமா மோகன், ரியோ, கவின், ஐஸ்வர்யா தத்தா, நரேன், அருள்தாஸ், சரத் எல்லோரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரவியாக நடித்திருகும் விஜய் முருகன், நிரஞ்சனாக நடித்திருக்கும் சௌந்தர் ஆகியோரின் நடிப்பில் அவ்வளவு செயற்கைத்தனம். (நிரஞ்சன், நிரஞ்சனா - இப்படிலாம் ஒரே படத்துல ஆண் பெண் கேரக்டருக்கு பேர் வைக்கறதெல்லாம் யப்பா! முடில சார்!)

மஞ்சிமாவுக்கு விக்ரம் பிரபு மேல் வரும் காதலுக்கு சொல்லும் காரணம், இதை வீட்டில் எதிர்ப்பதற்கான காரணம், மினிஸ்டர் சரத்தைக் கொலை செய்வதற்காக சொல்லும் காரணம் என நிறைய காரணங்கள் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.  மஞ்சிமாவின் அம்மாவாக நடித்திருக்கும் தாராவிற்கு எதற்காக இந்தி ஆக்சென்ட் நிறைந்த டப்பிங்? அப்பாவின் கொலைக்கே அமைதிகாக்கும் சௌந்தர், தங்கையின் காதலுக்கு அத்தனை வீராப்பாக எதிர்ப்பு காட்டுவது ஏன்? இப்படியாக படம் முழுக்க நிறைய ஏன்கள்.

வித்தியாசமான களத்தில் நல்ல கருத்து சொல்லும் படத்தை எடுப்பது நல்லதுதான். ஆனால், 'இந்தக் கத்தி இன்னைக்கு உன் கையில் இருக்கு நாளைக்கு வேற கைக்குப் போகும்', 'கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு', 'வன்முறைங்கறது ஒரு வழிப்பாதை, ஒத்தையடிப்பாதை' என போர் அடிக்கும் பழைய டைப் வசனங்கள் மூலம் மட்டுமே கடத்த நினைத்தது படத்தின் பெரிய மைனஸ். 

படத்தின் வசனங்கள் பழசென்றால், காட்சியமைப்புகள் அதைவிட. அப்பேர்ப்பட்ட தாதா மகள் டவுன் பஸ்டிராவல்தான் போகிறார். 70களின் ஹீரோ போல விக்ரம் ஓடிவந்து பஸ்ஸில் ஏறுகிறார். அம்மாவும் மகளும் கோவிலுக்குள் பூக்கூடை வைத்துக்கொண்டு டிஸ்கஷன் செய்கிறார்கள். பஸ் ஸ்டாப்பில், மஞ்சிமாவை விசிலடித்து ஈவ்டீசிங் செய்கிறார்கள். திருச்சியில் நடக்கும் கதையின்போது, ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்குக்காக திரையின் ஓரத்தில் ‘ஃபன் மால், கோவை’ என்று போட்டுக் காட்டுகிறார்கள். ஆடியன்ஸ் மனதில் இந்தக் கேள்வி எழுமே என்று கதாபாத்திரங்களே சில கேள்வி கேட்டு, பதில் சொல்லிக் கொள்கிறார்கள்.   1000 எபிசோட் சீரியலுக்குண்டான அத்தனை காட்சிகளும் ஒரே படத்தில் பார்த்தால் எத்தனை அயர்ச்சியைத் தருமோ அப்படி இருக்கிறது. 

நல்ல கதைக்களம். நிறைவான கதாபாத்திரங்கள். யுவன் போன்ற ஓர் இசையமைப்பாளர். இதைவைத்துக் கொண்டு, கபடிக் கபடி என்று இறங்கி ஆடியிருக்கலாம்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்