Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிச்சி ஸ்ட்ரீட் இன்ஜினீயர் Vs ரிச் அமைச்சர்... ஜெயிச்சது யாரு? - ‘இவன் தந்திரன்’ விமர்சனம்

‘நாலு வருஷம் இன்ஜினீயரிங் படிச்சிட்டு பத்தாயிரம், பன்னிரெண்டாயிரம் சம்பளத்தைத் தாண்ட முக்குவோம். நீ வெறும் மூணாவது படிச்சிட்டு கோடிக்கோடியா சுருட்டுவியா?’ ரிச்சான அமைச்சருக்கும் ரிச்சி ஸ்ட்ரீட் எலக்ட்ரானிக் கடை இளைஞனுக்குமான டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டில் வென்றது யார் என்பதே ‘இவன் தந்திரன்’. 

இவன் தந்திரன்

கௌதம் கார்த்திக்கும், ஆர்.ஜே.பாலாஜியும் இன்ஜினீயரிங் படிப்பை இடையில் விட்டுவிட்டு சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருக்கிறார்கள். பண விஷயத்தில் கௌதம் செம கறார். மத்திய கல்வி அமைச்சரின் வீட்டில் சிசிடிவி மாட்டியதற்கான தொகை 23 ஆயிரத்தை கொடுக்காமல் கௌதமை இழுத்தடிக்கிறார் அமைச்சரின் மைத்துனர் ஸ்டன்ட் சில்வா. அந்தப் பணத்தைப் பெற அலையும் கௌதம் கார்த்திக்குக்கு அமைச்சருக்கும் கல்வியை காசாக்கும் கல்வித் தந்தைகளுக்குமான சதி வலை தெரிய வருகிறது. இந்த கள்ளக் கல்வி வலையை கௌதம் அவிழ்ப்பதுதான் ‘இவன் தந்திரன்’

தொடர்ந்து நல்ல கதைகளும், நடிப்பதற்கான ஸ்கோப்பும் உள்ள படங்களுமாய் ஏறுமுகத்தில் இருக்கிறார் கௌதம் கார்த்திக். கண்ணிலேயே காதலை காட்டுவதிலும், காசு விஷயத்தில் கறாராக விறைப்பு காட்டுவதிலும் பாஸ் மார்க் வாங்குகிறார். நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், வந்து போகும் வேடமில்லாமல் சொல்லிக் கொள்ளும்படி சில காட்சிகளில் நடித்தும் இருக்கிறார். படத்தின் ஹீரோவுக்கு இணையாக, ஒரு படி அதிகமாகவே கலக்கியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. ஐடி வேலையை கலாய்ப்பதும், அவர்களையே ஆதரிப்பதும், கிடைத்த இடங்களிலெல்லாம் கவுன்டர் கொடுத்து படத்தின் முதற்பாதியை கிட்டத்தட்ட தாங்கிப்பிடிப்பவராய் ஆர்.ஜே.பாலாஜி இருக்கிறார். இரண்டாம் பாதியில் அவர் இல்லாதது அப்பட்டமாய் தெரிகிறது. வில்லனுக்கான வேலையை மிகச்சரியாக செய்து இருக்கிறார் சூப்பர் சுப்புராயன். 

ஆர்.ஜே.பாலாஜி

‘ஜெயம்கொண்டான்’ல் இயக்குநராகக் கால்பதித்த ஆர்.கண்ணனுக்கு இது, ஏழாவது படம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எடுத்துக்கொண்டவற்றில் வசனத்தில் பளீரிடுகிறார் கண்ணன். ஆர்.ஜே.பாலாஜியின் வசனங்கள் ஒவ்வொன்றும் சரவெடி. ‘உள்ள அர்னால்ட், ஜாக்கிசானே தமிழ்ல பேசறாங்க’ என்று காமெடி காட்சிகளும் சரி, ‘என்கிட்ட அக்மார்க்கா இருந்த ஒரே விஷயம் இரக்கமே இல்லாத ஒரு பிஸினஸ்மைண்ட்’ என்று சீரியஸ் காட்சிகளும் சரி வசனங்களால் கவனிக்கவைக்கிறது. மழையில் ஒதுங்கி நின்று கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் காதலைச் சொல்லும் இடம் கவிதை. அதைவிட ஒருபடி மேல், அதைத்தொடர்ந்து ஷ்ரத்தா வீட்டில் நடக்கும் காட்சியும் அசத்தல்!

படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. படம் பெரிய லேன்ட்ஸ்கேப்பில் நடந்தாலும் மொத்தமாக பத்தே பேர்தான் திரும்பத்திரும்ப வருகிறார்கள். படத்தில் வருகிற பாதி வசனத்தை ஆர்ஜே பாலாஜியேதான் பேசுகிறார்.  கௌதம் கார்த்திக்கின் வீடு சம்பந்தப்பட்ட காட்சி மற்றும் கௌதம் கார்த்திக் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவருக்குமிடையேயான காட்சிகளின் ஒளிப்பதிவிலும் ப்ரசன்னகுமார் பெயர்சொல்ல வைக்கிறார். பின்னணி இசையில் க்ளாப்ஸ் அள்ளும் எஸ்.எஸ்.தமன், பாடல்களில் சோதிக்கிறார். 

கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பீடேறும் திரைக்கதை இடைவேளையில் டாப்கியரில் பயணிக்கிறது. அதற்குப் பிறகு, தாம்பரம் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்ட புறநகர் பேருந்து போல தடுமாறுகிறது. சீக்கிரம் ஹீரோயிஸம் காட்டுங்க ப்ரோ என்று சொல்லத்தோன்றுகிறது. கல்லூரிக் கட்டணம் கட்டமுடியாமல் தவிப்பது.. இறப்பது... அதைக் கண்டு ஹீரோ பொங்குவது என்று பல படங்களில் பேசப்பட்ட விஷயம் ஒருகட்டத்தில் ‘ஆஆஅவ்வ்’ சொல்ல வைக்கிறது. பழைய படங்களில் பாம் வெடிக்காமல் இருக்க எந்த ஒயரை கட் செய்வது என்று 10க்கு 7 படங்களில் வருவது போல, இப்போதெல்லாம் டெக்னாலஜி விஷயங்களை ஒரு ஓட்டை மொபைல் வைத்திருக்கும் ஹீரோ ஜஸ்ட் லைக் தட் என எல்லாவற்றையும் டெக்னிக்கலாக டீல் செய்கிறார். காதலை அழகாகக் கையாண்டு இண்டர்வ்யூ செல்லும் நாயகி, ‘அதெப்படி... நான் தமிழ்ப்பட ஹீரோயினாச்சே’ என்று மீண்டும் வழக்கமான வேலையைச் செய்து சலிப்பூட்டுகிறார். அந்த பாத்ரூம் கண்ணாடி ஸ்லைடர்தானே.. அழகாகக் கழட்டி வைத்தாலே போதுமே.. அதை எதுக்கு யூ டர்ன்லாம் அடிச்சு ஒடைச்சுகிட்டு என்றே தெரியவில்லை. 

அருமையாக ஆரம்பித்து, காமெடியும் கதையுமாய் விறுவிறுவென நகரும் முதல்பாதி ஃபீலை, இரண்டாம் பாதிக்கும் கடத்தியிருந்தால் இந்த தந்திரன், மந்திரனாய் ஈர்த்திருப்பான். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்