21 கொலைகளைச் செய்த கொடூரனிடம் மாட்டும் காதல் ஜோடி - 'யானும் தீயவன்' படம் எப்படி?

21 கொலைகளைச் செய்த ஒரு கொடூர வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் ஒரு இளம் காதல் ஜோடியின் கதையைக் கமர்ஷியல் த்ரில்லராகச் சொல்லியிருக்கும் 'யானும் தீயவன்' படம் எப்படி?

நாயகன் அஸ்வின், நாயகி வர்ஷா இருவரும் வசதியான வாழ்க்கை வாழும் ஜென்-Z இளசுகள். இருவரும் காதலைப் பறிமாறிக்கொண்ட சில நாட்களில், வில்லன் ராஜூசுந்தரம் கோஷ்டியுடன் சிறுமோதல் வருகிறது. வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்ளும் அஸ்வின் - வர்ஷா ஜோடி வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடங்கலாம் என நினைக்கும் பொழுதில் மீண்டும் வில்லன் ராஜூசுந்தரம் பிடியில் சிக்குகிறார்கள். வில்லனுக்கும், ஹீரோவுக்குமான முதல் மோதல் சாதாரணமாகக் கடந்துவிட, இரண்டாம் சந்திப்பில் வில்லனிடம் இருந்து மீளமுடியாத சூழலுக்குச் செல்கிறார்கள். இன்னொரு பக்கம் போலீஸ், வில்லன் ராஜுசுந்தரத்தைப் பிடிக்க வலை வீசுகிறது. காதல் ஜோடி தப்பித்தார்களா, வில்லன் கதி என்ன? என்பதை வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவில் சொல்லிப் படத்தை முடிக்கிறார் இயக்குநர் பிரசாந்த் ஜி.சேகர். 

யானும் தீயவன்

ஹீரோ அஸ்வின் ஜெரோம் கச்சிதம். நன்றாக ஆடுகிறார், எதார்த்தமான் ஆக்‌ஷன் காட்சிகளில் பொருந்துகிறார். ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் சொதப்புகிறார். ஹீரோயின் வர்ஷா 'நஸ்ரியா' சாயலில் இருக்கிறார் என்பதற்காகவே, நஸ்ரியாவின் பல ரியாக்‌ஷன்களைக் கொடுத்து பரிசோதனை செய்திருக்கிறார்கள். ஆனாலும், தன்னுடைய ஒரிஜினல் நடிப்பைக் காட்டும் சில சீன்ஸ்களில், சின்னச் சின்ன மாடுலேஷன்களில் கவர்கிறார். 

ராஜூசுந்தரம் நடிப்பு மெர்சல். ஸ்டைலாக சுருட்டு பிடிப்பது, முறைப்பும் விரைப்புமான உடல்மொழியுடன் நடப்பது, கிரிமினல்களுக்கு உரிய தந்திரத்துடன் போலீஸை சுற்ற விடுவது. காதல் ஜோடியை ரசித்து டார்ச்சர் செய்வது... என நிறைவாக நடித்திருக்கிறார். ராஜூசுந்தரத்தை வில்லனாகப் பயன்படுத்திக்கொள்ளும் இயக்குநர்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கலாம். படத்திற்கு இவர் கொடுத்த உழைப்பிற்கு வலுவான வசனத்தையோ, இன்னும் வலுவான சில காட்சிகளையோ வைத்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும். 

படத்தின் பெரிய மைனஸ், டப்பிங். பல இடங்களில் ஒட்டாமல் தனித்துத் தெரிகிறது. தவிர, படத்தின் பெரும்பாலான கேரக்டர்கள் பேசும் வசனமும், அவர்களுடைய நடிப்பும் சீரியல் தரம். பாடல்களில் 'நிலா...' ஓகே ரகம். ராஜூ சுந்தரத்திற்குக் கொடுத்திருக்கும் அசத்தலான பின்ணனி இசைக்குக் காட்டிய முனைப்பை, இசையமைப்பாளர் அச்சு படம் முழுக்கக் காட்டியிருக்கலாம். ஹீரோயின் ரொமான்ஸ் செய்யவரும்போது எதுக்கு பாஸ் 'மிஸ்ட்ரி' மியூசிக்?!. 

யானும் தீயவன்

எதார்த்தமான ஆக்‌ஷன் காட்சிகள் சூப்பர். ஆக்‌ஷன் காட்சிகளிலும், வில்லன் - போலீஸ் சேசிங் காட்சிகளிலும் ஒளிப்பதிவு கவர்கிறது. எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால், காட்சிகளின் தரத்தைக் கூட்டியிருக்கலாம். வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் நாயகன், நாயகி. அதேசமயம் வில்லனதைத் துரத்திக்கொண்டிருக்கும் போலீஸ் - நார்மலான ஒன்லைனாக இருந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் காட்டி 'நச்' அனுபவத்தைக் கொடுக்கும் வாய்ப்பு உள்ள கதை. ஆனால், திரைக்கதையில் வேகம் குறைவு. அதுவும், முதல் பாதிபடம் அதரப்பழசான காதல், காமெடி காட்சிகளாய் நகர்வது செம போர். தவிர இரண்டு வருடங்களுக்கு முன்பு உருவான படம் என்பதால், அருண்ராஜா காமராஜ் செய்யும் 'ஹரஹரமஹாதேவகீ' காமெடி ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகவில்லை.  

யானும் தீயவன்

வீட்டைவிட்டு ஓடிவந்த காதல் ஜோடியின் கதையைக் கேட்கும் வி.டி.வி கணேஷ், இருவருமே பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, 'உங்க அப்பா சொன்னமாதிரி நீ ஃபாரீனுக்குப் போயிடு, நீ உன் வீட்டுக்குப் போயிடு' எனச் சொல்லும் டைமிங் காமெடி ரகளையாக இருந்தது. மற்ற காமெடிக் காட்சிகள், ஆசிட்டில் பிணத்தைக் கரைக்கும் காட்சிகள் எல்லாம் பல படங்களில் பார்த்தாச்சு பாஸ். 

அறிமுக நடிகர்கள், அறிமுக இயக்குநர், லோ-பட்ஜெட் படம்... இந்தக் காரணத்தை வைத்தே இதுபோன்ற பெரும்பாலான படங்களைக் 'ஓகே ரகம்' எனக் கடக்கவேண்டி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!