உதவி இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், படம் இயக்குகிறாரா இல்லையா? - ‘ஒரு சினிமாக்காரன்’ படம் எப்படி? | Oru Cinemakkaran movie review

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (04/07/2017)

கடைசி தொடர்பு:11:07 (04/07/2017)

உதவி இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், படம் இயக்குகிறாரா இல்லையா? - ‘ஒரு சினிமாக்காரன்’ படம் எப்படி?

உதவி இயக்குநராக இருக்கும் ஆல்பி, (வினீத் ஸ்ரீனிவாசன்) தான் இயக்கும் படத்திற்கு தயாரிப்பாளர் தேடி அலைகிறார். பல தயாரிப்பாளர்கள் சுத்தலில் விட, வீட்டினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க காதல் மனைவி செரா (ரஜிஷா விஜயன்) தரும் நம்பிக்கையோடு போராடுகிறார். அப்போது ஏற்படும் பண நெருக்கடியால் ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார் வினீத். அது என்ன, அதிலிருந்து தப்புகிறாரா, என்ன ஆனது என்பதை சொல்லும் படம்தான் இந்த "ஒரு சினிமாக்காரன்".

சினிமாக்காரன்

படத்தின் தலைப்பப் பார்த்து, ஹீரோ கஷ்டப்பட்டு எப்படி தான் விரும்பிய படத்தை எடுக்கிறான் என்பதுதான் கதை என யூகித்தால், 'கதையே வேற பாஸு' என்று இழுத்துச் செல்கிறார் இயக்குநர் லியோ தடேஸ். துவக்கத்திலேயே வினீத் - ராஜீஷா காதல் விவகாரம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சட்டென முடிந்துவிடும், தயாரிப்பாளரே கிடைக்காமல் அலைவதையும் இயல்பாக எடுத்துக் கொள்வார் வினீத். ஆரம்பத்திலிருந்து படு ஜாலியாக நகரும் கதை பின்பு இடைவேளை திருப்பத்திற்குப் பிறகு சீரியஸாக ஆரம்பிக்கிறது. அதன் பின்பும் காமெடி, குடும்ப சென்டிமென்டையும் சேர்த்திருந்ததும், என்ன நடந்தது என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும்படியாக கதை நகர்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். 

Vineeth

வாய்ப்பு தேடி அலையும் இயக்குநராக, கோபித்துக் கொள்ளும் மனைவியை "முத்தே... முத்தே" எனக் கொஞ்சி சமாதானப்படுத்து, அப்பார்ட்மென்ட் நபர்களை சமாளிப்பது, அந்த சம்பவத்திற்குப் பிறகு நடுக்கத்துடனேயே இருப்பது என தன் இயல்பான நடிப்பால் கவர்கிறார் வினீத் ஸ்ரீனிவாசன். ரஜிஷா விஜயன் பற்றி என்ன சொல்வது, 'அனுராக கரிகின் வெள்ளம்' துவங்கி தனது மூன்றாவது படத்திலும் அசத்தியிருக்கிறார். கர்ப்பமாக இருப்பதை சின்ன வெட்கத்துடன் சொல்லும் இடம், வினீத் தன் பிரச்சனையைப் பற்றி சொன்னதும் கலங்கிப் போவது என தனது எக்ஸ்பிரஷன்களால் கவர்கிறார். நஸ்ரியா போல அழுத்தமாக தடம் பதிப்பார் என நம்பலாம்.

Ranji Panicker

வினீத்தின் தந்தையாக ரெஞ்சி பணிக்கர், ரஜிஷாவின் தந்தையாக லால், எதிர்வீட்டுப் தம்பதி அனுஸ்ரீ - விஜய் பாபு, ஹரீஷ் கர்ணன், நோபி, சசி கலிங்கா என அத்தனை பேரும் படத்தின் இயல்புக்குப் பொருந்திப் போகும் நடிப்பை வழங்குகிறார்கள். காமெடி, ரொமான்ஸ் எல்லாம் ரசிக்கும் படி இருக்கிறது என்றாலும் அது வழக்கமாக எல்லாப்படங்களிலும் பார்த்து பார்த்து பழகியது என்பது சலிப்பு. இதில் வழக்கத்துக்கு மாறான கதாபாத்திர வடிவமைப்பு போலீஸாக வரும் பிரஷாந்த் நாராயணனுடையது. முக்கியமான கொலைவழக்குப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, "வரும் போது ஹல்வா வாங்கிட்டுவாங்க" என சொல்லும் மனைவியை சமாளிப்பது, விசாரணைக்குச் சென்ற இடத்தில் "ஓ நீங்களும் மும்பையா, நான் அங்கதான் 7 வருஷம் இருந்தேன்" என நலம் விசாரிப்பது போன்று வித்தியாசமான அவரின் நடிப்பு புதிதாக இருந்தது. கெஸ்ட்ரோலில் வந்த 'மலையாள பவர் ஸ்டார்' சந்தோஷ் பண்டிட் எப்பிசோடும், அவர் ஆங்கிலத்தில் பேசும் டரியல் வசனங்களும் கலகலப்பு. 

 

 

பிஜி பால் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. வினீத் ஒரு உதவி இயக்குநர். அதைப் பிரதிபலிக்கும் படி, அவரின் வீட்டு இன்டீரியரை, சினிமாவில் உபயோகித்த மேஜை, விளக்கு, சோஃபா, அலமாரி எல்லாவற்றையும் வைத்து அமைத்திருந்த கலை இயக்குநர் ஜோசபின் ஐடியா சூப்பர். 

 

 

படத்தைப் பார்க்கும் போது 'த்ரிஷ்யம்' படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. வசன காமெடிகள் மூலம் ஜாலியாக படத்தை நகர்த்தியது போது சரளமாக நகரும் கதை, வினீத் பிரச்னைக்குள் சிக்கிக் கொண்ட பிறகு தடுமாறுகிறது. கூடவே கொஞ்சம் சீரியல் தொனியும் சேருவதால் களைப்பை ஏற்படுத்துகிறது. க்ளைமாக்ஸ் திருப்பத்தைப் பற்றிய காட்சிகள் விரியும் போது, அந்தப் பிரச்னைக்கான காரணம் தெரிந்ததும் இவ்வளவுதானா என்ற ரியாக்‌ஷன் வரவைக்கிறது. அதுவே பெரிய மைனஸ். ஜாலியான பொழுதுபோக்குத் திரைப்படமாக கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும். ஆனால், வழக்கத்துக்கு மாறான களங்களில் மலையாள சினிமாக்கள் கதகளி ஆடிக்கொண்டிருக்க, இந்த  வழக்கமான படம் ஏமாற்றமே. இன்னும் சுவாரஸ்யமான, வித்தியாசமான விஷயங்கள் இருந்திருந்தால் நிறைவைத் தந்திருப்பான் 'ஒரு சினிமாக்காரன்'.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close