Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

 ‘மேஜிகல்’ ஏ.ஆர்.ரஹ்மான், ‘சபாஷ்’ சாஜல் அலி, ‘க்ளாஸ்’ ஸ்ரீதேவி - ‘மாம்’ படம் எப்படி? #Mom

அறிமுக இயக்குநர் ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்க, பெரும் எதிர்பார்ப்பில் வந்திருக்கும் படம் ‘மாம்’ (Mom). 

Mom

பள்ளி ஆசிரியை ஸ்ரீதேவி, கணவனுக்கு இரண்டாம் தாரம். முதல் தாரத்தின் மகள் சாஜல் அலி, இன்னமும் ஸ்ரீதேவியை நேசிக்காமல் தனது தாயின் நினைவிலேயே இருக்கிறார். 18 வயதாகும் அவர், வேலண்டைன் டே பார்ட்டிக்குச் செல்ல, அங்கே நிகழ்கிறது ஓர் அசம்பாவிதம். அதிலிருந்து தப்பி, உயிர் மட்டும் எஞ்சிய நிலையில் பித்துப் பிடித்து வாழும் மகளுக்காக, அவள் வாழ்வை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை ஸ்ரீதேவி திட்டமிட்டுப் பழிவாங்கும் கதைதான் ‘மாம்’.

நடிப்பில் ஸ்ரீதேவி அசத்துகிறார். படம் முழுக்க மகள் சாஜல் அலி, தன்னை - தன் அன்பை - நிராகரிக்கும்போதெல்லாம் உள்ளுக்குள் அத்தனை ஏமாற்றம் இருப்பதை உடல்மொழியில் காட்டிக்கொண்டு, முகத்தில் லேசான புன்னகையுடன் அதைக் கடந்து செல்கிறார். மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அந்த ஆஸ்பத்திரி சீன். சிறுநீர் கழிக்க மகள் 'BedPan' வைக்கச் சொல்கிறாள். வைத்ததும், அருகிலேயே ஸ்ரீதேவி நின்றுகொண்டிருக்க, அந்த முடியாத நிலையிலும் ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்காத மகள், ப்ரைவசிக்காக ஒற்றைக்கையில் படுக்கை அருகே இருக்கும் ஸ்கிரீனை மூடுகிறார். ஒட்டுமொத்தமாக ஸ்ரீதேவி உடைந்து போகும் அந்தக் காட்சி, நடிப்புக்காக ஸ்ரீதேவிக்கும், காட்சியமைப்புக்காக  இயக்குநருக்கும் கைதட்டல்களை அள்ளித் தருகிறது.

nawazuddin siddiqui and Akshaye Khanna in Mom Movie

ப்ரைவேட் டிடக்டிவ் ‘DK' யாக நவாசுதீன் சித்திக். முன்வழுக்கைத் தலையும், கொஞ்சம் முன் எத்திய பற்களுமாக, அவர் நடிப்புக்குத் தீனிபோடுகிற காஸ்டிங். போலீஸ் அதிகாரியாக அக்‌ஷய் கன்னா. குற்றவாளிக்கு தண்டனை வாங்கித்தர முடியாதபோது ஒரு முகபாவம் வெளிப்படுத்துகிறார்.. அது க்ளாஸ் என்றால், ‘என் வேலையை இன்னொருத்தர் செஞ்சா எனக்கு பிடிக்காது’ என்று கோபமாக ஸ்ரீதேவியிடம் சொல்லும் காட்சியும், வில்லன் முன் அவருக்கும் ஸ்ரீதேவிக்குமான அந்த க்ளைமாக்ஸ் காட்சியும்.. மாஸ்! 

படத்தில் எல்லாரையும் விட, நடிப்பில் ஒரு படி அதிகம் - சாஜல் அலிக்கு. அந்த வயதுக்கே உரிய துறுதுறுப்பு, அப்பாவுடன் பாசம், அம்மாவுடன் ஒட்டுதல் இல்லாமல் இருத்தல், பித்துப் பிடித்த நிலை என்று எல்லா காட்சிகளிலும் நிறைவான நடிப்பு. சபாஷ் பொண்ணே! 

சந்தேகமே இல்லாமல், படத்தின் இன்னொரு ஹீரோ ஏ.ஆர்.ரஹ்மான். பின்னணி இசையில் அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் மனுஷன்.  ஒரு காட்சி.  பார்ட்டியில் இருந்து சாஜல் அலியைக் காரில் ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள். எந்த விளக்கமும் தேவையில்லாமல் மிகச்சரியாக படமாக்கப்பட்ட காட்சி அது. அந்தப் பெரிய எஸ்.யூ.வி கார் சாலையில் செல்வதை பறவைப் பார்வையில் காட்டுகிறார்கள். சில நிமிடங்களுக்குத் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறது கார். பிறகு கார் நிறுத்தப்பட்டு...  படம் பாருங்கள். அந்தக் காட்சியின் தீவிரத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உணர்த்தியிருப்பார். அந்த இசையோடு சேர்ந்து உங்கள் நெஞ்சமும் படபடவென்று இசைக்கும். அவரது கரங்களுக்கு அழுத்தமான கைகுலுக்கல்கள்.

’அவளுக்குப் புரிய வைக்கணும்னு இல்ல. நாம அவளைப் புரிஞ்சுக்கணும்’, ‘அம்மா வாழ்க்கைல புதிய மகள் வரலாம். மகள் வாழ்க்கைல புதுஅம்மா வரமாட்டாங்க’ என்று பல இடங்களில் வசனங்கள் நேர்த்தி.

Sajal Ali

‘பாபநாசம்’ போன்று பல படங்களில் நாம் பார்த்த கதைதான்.  3 பேரைப் பழிவாங்க ஸ்ரீதேவி எடுக்கும் முயற்சிகளும், அவற்றில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க நவாசுதீன் சித்திக்கின் துணையும் சரிதான். ஆனால் இன்னும் அழுத்தமாக அவர்கள்   சந்திக்கும் காட்சிகள் இருந்திருக்கலாம். அந்த ஆர்ட் கேலரியில் அவர்கள் சந்திக்கும் காட்சி மட்டும் கொஞ்சம் ஓகே. அதிலும் யாருக்கும் தெரியாமல் பென் டிரைவை மாற்றிக் கொள்வதெல்லாம் செயற்கைதான்.   நவாசுதீன் சித்திக் கதாபாத்திரத்தின் முடிவும் சினிமாத்தனம்.  அதுவும் அந்தக் கடைசி வில்லன் வந்து செய்யும் வேலைகள் எல்லாம் எண்பதுகளை ஞாபகப்படுத்துகின்றன.

 முதல் பகுதியில் கொஞ்சம் தொய்வாகும் திரைக்கதையைப் பொறுத்துக் கொள்ளத் தயாரானால், ‘மாம்’ உங்களை நிச்சயம் கவரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்