Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

திண்டாட்டத்தைக் கொண்டாட்டமாக்கிய கேங்ஸ்டர் சினிமா... பண்டிகை விமர்சனம்

வேலுவுக்கு (கிருஷ்ணா) தனது பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு வேலைக்காக நிறைய பணம் தேவை, சூதாட்டத்தால் இழந்த பணத்தையும், வீட்டையும் மீட்க முனிக்கு (சரவணன்) நிறைய நிறைய பணம் தேவைப்படுகிறது. கிருஷ்ணாவின் சண்டைத் திறனைப் பார்க்கும் சரவணன், அவரைப் ‘பண்டிகை’யில் கலந்து கொள்ள வைத்து பணம் பார்க்க நினைக்கிறார். திறமையான சண்டைக்காரர்கள் இருவரை மோதவிட்டு, யார் ஜெயிப்பார் என பந்தயம் கட்டி விளையாடும் "ஃபைட் க்ளப்" ஆட்டமே பண்டிகை. இழந்ததை மீட்க நினைத்து இருப்பதையும் இழந்து போகும் சரவணன், மீண்டும் ஒரு திட்டமிடுகிறார். அது என்ன திட்டம், பணம் கிடைக்கிறதா என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க காட்டியிருக்கிறது பண்டிகை.

பண்டிகை விமர்சனம்

புதிய களத்தைக்  கையில் எடுத்தது, பரபரப்பும் விறுவிறுப்புடன் கதையைக் கொண்டு சென்றது என்றவகையில் கவனிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் ஃபெரோஸ். வன்முறை கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் வாழ்க்கைக்கு அறத்தின் தேவையை வலியுறுத்தும் க்ளைமாக்ஸ் ட்விஸ்டுக்கு லைக் போடலாம்.

கிருஷ்ணாவுக்கு இந்தப் பாத்திரம் பக்காவாகப் பொருந்திப் போகிறது. முதலில் பண்டிகையில் கலந்து கொள்ள மறுப்பதும், பின்பு விருப்பமே இல்லாமல் பணத்தேவைக்காக கலந்து கொள்வதுமாக ஒவ்வொரு உணர்வையும் கவனமாகக் காட்டியிருக்கிறார். கிருஷ்ணாவின் போன் உடைந்ததற்கு ‘ப்ளாக்’ பாண்டி டென்ஷனாகி ‘உன்னை நம்பித்தானேடா நான் தனியா போன் வாங்காம இருந்தேன்" என்று கோபப்படுவது,  கருணாஸின்  தந்திரம் உட்பட படத்தோடு ஒன்றிய காமெடி ரசிக்கவைக்கிறது. "ஹேர்வாஷுக்காக ஊத்தினப்போ பீர் கொஞ்சம் வாய்க்குள்ள போயிடுச்சு" என்று போதையில் சலம்பும் ஆனந்தி பாத்திரம் ரசிக்கவைக்கிறது. ஆனால் அநியாயத்துக்குக் குட்டியூண்டு கேரக்டர். 

பண்டிகை சரவணன்

 பருத்திவீரன், தம்பி வெட்டோத்தி சுந்தரம் தொடர்ந்து இதிலும் க்ரைம் பார்டனர் வேடம் சரவணனுக்கு. படம் முழுவதும் ஹீரோவுக்கு இணையாக வந்து, கலக்குகிறார்.  "எத்தனையோ முறை தோத்திருக்கேன், இன்னைக்குதான்டா ஏமாறுறேன்" என்று புலம்பி விரக்தியில் அலைவதும், முதன்முறை ஏமாறும்போதும் கர்ப்பிணி மனைவி வீட்டைவிட்டுப் போகும்போதும் அதிர்ச்சியும் சோகமும் கலந்த ரியாக்‌ஷன்களில் நீ கலக்கு சித்தப்பு!

நிதின் சத்யா பண்டிகை

'சலங்கை ஒலி' கமல்ஹாசனை நினைவுபடுத்தும் தோற்றத்தில் நிதின் சத்யாவுக்கு வித்தியாசமான வேடம். கடகடவென பெட்டிங் நம்பர்களைச் சொல்வதும், செம்பட்டத்தைத் தலையோடு சரவணன், கிருஷ்ணாவுக்கு ஐடியாக்கள் சொல்வதுமாக க்ளாப்ஸ் அள்ளுகிறார். வில்லனாக மதுசூதனன் ராவ் பலமுறை நடித்த வேடம்தான் என்பதால் மீண்டும் ஒருமுறை சர்வசாதாரணமாய் செய்துமுடித்திருக்கிறார். உப வில்லன்களாக வரும் அருள்தாஸ், அர்ஜெய், ட்வின்ஸாக நடித்திருக்கும் சபரீஷ், 'ஆத்மா' பேட்ரிக் என எல்லோரும் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

பண்டிகை வில்லன் மதுசூதன் ராவ்

ஹீரோதான் ஜெயிப்பான் என்ற டெம்ப்ளேட்டை ஓங்கி அடித்து  உடைத்திருந்த விதமும் சபாஷ். இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் இரண்டிலுமே எதிராளியை ஜெயித்தாலும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வதும், பின்பு அதிலிருந்து வெளியேவர முயல்வதுமாக காட்டி செம ப்ளே அமைத்திருக்கிறார் இயக்குநர் ஃபெரோஸ். கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பில் அவரின் மெனக்கெடலுக்கு உதாரணமாக இதைச் சொல்லலாம். கிருஷ்ணாவாகட்டும், சரவணனாகட்டும் இருவருக்குமே பணம் தேவை. ஆனால் இருவருமே பணத்தை இழந்து கொண்டேதான் இருப்பார்கள். கிருஷ்ணா தனக்கு முதன் முதலில் கிடைக்கும் ஆயிரம் ரூபாயை டொனேஷன் பாக்ஸில் போடுவார், பிறகு முதல் போட்டியில் ஜெயித்த பணத்தை மருத்துவ செலவுக்காக கொடுப்பது... சரவணன் பந்தயம், சூதாட்டம் என இருக்கும் பணத்தை இழந்து கொண்டே இருப்பார். க்ளைமாக்ஸ் வரையிலுமே அந்த கேரக்டர் ஸ்கெட்சை சாதுர்யமாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.

"புத்திசாலிங்க, முட்டாள ஏமாத்தறதுக்குக் கண்டுபிடிச்சதுதாண்டா அதிர்ஷ்டம்",, "விதி வெட்டியா இருந்தா எப்ப வேணா வந்து விளையாடிட்டு போகும்", "எல்லாத்துக்கும் சாதாரணமா கெடைக்கற விஷயம் எனக்கு அடிச்சதுக்கப்பறம்தான் கெடச்சது" எனப் பல இடங்களில் நறுக் வசனங்கள். 

படம் முழுவதும் நம்மை ஒரு படபடப்பிலேயே வைக்கிறது ஆர்.ஹெச்.விக்ரமின் பின்னணி இசை. கிருஷ்ணா சண்டைக்கு களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் ஒலிக்கும் அந்தப் பின்னணி இசை சூப்பர். பாடல்கள் நினைவில் நிற்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும். 

கயல் ஆனந்தி கிருஷ்ணா பண்டிகை

இடையில் காவ்யாவுடன் (ஆனந்தி) காதல், ஃபியர் காமெடி, ஐட்டம் சாங் என வலிந்து திணிக்கப்படும் சில விஷயங்களால் படம் அலைக்கழிக்கப்பட்டது சின்ன மைனஸ். கதையின் மையத்தோடு ஒன்றாமல் நெருடலாக நிற்கின்றன காதல் காட்சிகள். ஆனந்தியுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே கிருஷ்ணாவின் போன் கீழே விழுந்து உடைவது சரி, ஆனால் அடுத்து அவர் பத்தாயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தான் ஆனந்தியிடம் பேசவேண்டுமா என்ன? இப்படி சில காட்சிகளில் லாஜிக் சறுக்கல்கள்.  

கொஞ்சம் விட்டால் வெள்ளித்திரை சிவப்புத்திரையாக மாறிவிடும் அளவுக்கு ரத்தம் தெறிக்கும் வன்முறை. படத்தின் கதைப்படி அது தேவைதான் என்றாலும் கொஞ்சம் குறைத்திருக்கலாமே பாஸ்!

மிக சில குறைகள் இருந்தாலும் வித்தியாசமான களம், சுவாரஸ்யமான மேக்கிங் என பல ப்ளஸ்கள் இருப்பதால் 'பண்டிகை'யில் கொண்டாட்டம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement