வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (19/07/2017)

கடைசி தொடர்பு:19:35 (19/07/2017)

5 கோடி ரூபாய் மதிப்புள்ள சமந்தகமணி என்ன ஆனது? - `சமந்தகமணி' படம் எப்படி?

தெலுங்கில் திடீரென ஒரு பளீர் சினிமா வந்துவிடுவது உண்டு. அந்தப் படம் பற்றிப் பேசவைத்தும்விடுகிறார்கள். அப்படி வெளியாகி, அதிகம் பேசப்படும் சினிமாவாக மாறியிருக்கிறது `சமந்தகமணி'. ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள வின்டேஜ் ரோல்ஸ் ராயல்ஸ் (AKA சமந்தகமணி) கார் தொலைந்துவிடுகிறது. அந்த கார் சிலரின் வாழ்க்கைக்குள் புகுந்து யூடர்ன் அடித்துவிட்டுச் செல்வதால், என்னென்ன நடக்கின்றன என்பதுதான் கதை. அதை மிக சுவாரஸ்யமாகக் கொடுத்து கவனிக்கவைக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யா. 

சமந்தகமணி

கிருஷ்ணாவுக்கு (சுதீர் பாபு) சிறுவயதிலிருந்தே சமந்தகமணி மேல் ஆர்வம் அதிகம். அம்மா தனக்கு வாங்கித் தருவதாகச் சொன்ன அந்த கார் பற்றி, அவர் இறந்த பிறகு மறந்தேபோயிருப்பார். அதே காரை ஏலத்தில் வாங்கி வீட்டுக்குக் கொண்டுவருகிறார் சுதீரின் தந்தை. அம்மாவின் ஞாபகப்பரிசாக அதை நினைக்கிறார். தந்தையின் எதிர்ப்பை மீறி தன் பிறந்த நாள் பார்ட்டிக்கு சமந்தகமணியை எடுத்துச் செல்கிறார். அதே பார்ட்டியில், காதல் தோல்வியில் ஊரைவிட்டு வந்த சிவா (சந்தீப்), காதலி மேல் கோபமாகிக் குடிக்க வந்திருக்கும் கார்த்திக் (ஆதி), காதலியுடன் பார்ட்டியில் கலந்துகொள்ளும் உமா மகேஷ்வர் (ராஜேந்திர பிரசாத்) ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். பார்ட்டியின் முடிவில் கார் தொலைந்துவிடுகிறது. இந்த மிஸ்ஸிங் கேசை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் (நர ரோஹித்). விசாரணைகள் மூலம் காருக்கும் இவர்களுக்குக்கும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருப்பது தெரிகிறது. கூடவே, காரை இவர்கள் யாரும் திருடவில்லை என்பதும் தெரியவருகிறது. பிறகு என்ன ஆகிறது, சமந்தகமணி கிடைத்ததா... இல்லையா?

சந்தீப்

இவ்வளவு பாராட்டுகள் வாங்கும் அளவுக்கு படம் சூப்பரா என்றால், நிச்சயமாகக் கிடையாது. ஆனால், வழக்கமாக ஊரைக் காப்பாற்றும் ஹீரோ, உலகத்தையே காப்பாற்றும் ஹீரோ என அடிதடி சினிமாக்கள் வந்து மொய்க்கும்போது, இதுபோன்ற புது முயற்சிகளைப் பாராட்டியே ஆகவேண்டும். சென்ற வருடம் வெளியான `பெல்லிசூப்புலு', `ஜோ அச்யுதானந்தா' அப்படியான முயற்சிகள்தான். சமந்தகமணிக்கே திரும்பலாம். படத்தின் கதை மிக எளிமையானது. அதை சுவாரஸ்யமான வடிவில் திரைக்கதை அமைத்து வழங்கியிருக்கும் விதம் வலு சேர்க்கிறது. நேர்கோட்டுக் கதை வளைத்து நெளித்து எடுக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திமும் செய்யும் காமெடிகள் மூலம் படம் பார்ப்பவர்களை என்கேஜ்டாகவே வைத்திருக்கிறது. மெயின் லீட் ஐந்து பேர் தவிர, சுமன், தனிகெல்ல பரணி, இந்திரஜா, சுரேகா வாணி, ஹேமா எனப் பலரை இணைத்துப் பின்னப்பட்டிருந்ததும் சுவாரஸ்யம் சேர்த்திருந்தது.

`சும்மா ஒரு டைம்பாஸ் சினிமாதானே!' என நினைக்காமல் படம் முழுக்க பரவவிட்டிருந்த மஞ்சள் நிறம், ஒரு காட்சியில் மேனிக்யூ முறையில் படமாக்கியது என ஒளிப்பதிவில் கவர்கிறார் சமீர் ரெட்டி. ஒரே ஒரு பாடல் மற்றது எல்லாமே பின்னணி இசைதான். இரண்டிலும் உற்சாகம் சேர்க்கிறார் மணிசர்மா.

 

ஈஸியாகக் கணித்துவிட முடியும் க்ளைமாக்ஸ் திருப்பம், கார் குறித்தே நகரும் காட்சிகள் கொஞ்சம் போர் அடிப்பது எனச் சின்னச் சின்னக் குறைகளைப் பூர்த்திசெய்திருந்தால், இந்த வருடத்தில் மறக்க முடியாத தெலுங்கு சினிமாவாக இருந்திருக்கும் படம். ஆனாலும், டென்ஷன் ஏற்றும் கமர்ஷியல் கச்சடா படங்களுக்கு மத்தியில் ஜாலியாகச் சிரித்துக்கொண்டே `சமந்தகமணி'யில் ஒரு ட்ரிப் போய் வரலாம்.


டிரெண்டிங் @ விகடன்