தாயின் கட்டுக்கோப்பான வளர்ப்பினால், 13 வயது பெண் ஒருத்தி தன் ஆசைகளைப் பூட்டிவைக்கிறாள். ஆனால், எல்லாம் ஒரு நாள் வெடித்தே தீரும் என்னும் போது, என்ன செய்கிறாள் அவள் என்பதை ஃபேன்டஸி சினிமாவாகச் சொல்லி அசத்தியிருக்கிறார் டோமி ஷீ.

இந்த வாரம் வெள்ளியன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கும் Turning Red படத்தின் ஒன்லைன்தான் இது. Inside Out திரைப்படத்தில் வெவ்வேறு மன எண்ண ஓட்டங்களை வைத்து ஹிட் அடித்த பிக்ஸார் இந்த முறை மீண்டும் அதே போன்றதொரு கதையம்சத்துடன் களமிறங்கியிருக்கிறது.
கனடா நாட்டில் வசிக்கும் சீன வம்சாவளியைச் சேர்ந்த 13 வயதுப் பெண் மெய்லின் லீ. குறும்புக்கார பெண்ணான மெய்லினுக்கோ அத்தனை ஆசைகள். அத்தனைக்கும் ஆசைப்படு என மனமும், நண்பர்கள் குழாமும் சொன்னாலும், எல்லாவற்றுக்கும் NO சொல்லி வளர்க்கிறார் மெய்லினின் தாயார். அம்மாக்கள் என்றாலே அப்படித்தானே. ஒரு நாள் அதிகாலை சுபவேளையில், தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் மெய்லின் மொத்தமாய் சிவப்பு பாண்டாவாய் மாறிப்போகிறாள். தீவிர மன அழுத்தமோ, அதீத சந்தோஷமோ ஏற்பட்டால் மெய்லின் பாண்டாவாகிவிடுவார். இதை எப்படி மெய்லினும், மெய்லினின் குடும்பமும் சமாளிக்கிறது; மெய்லினின் தோழிகள் இதற்கு எப்படி உதவுகிறார்கள் என்பதாக விரிகிறது Turning Redன் கதை.

பதின்ம வயதில் இருக்கும் ஒரு பெண்ணின் ஆசைகளை அழகாக ஃபேன்டஸியாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் டோமி ஷி. பிக்ஸார் நிறுவனத்துக்காக Bau என்னும் குறும்படத்தை இயக்கி ஆஸ்கார் விருது வென்றவர் டோமி ஷி. பிக்ஸார் குறும்படம் ஒன்றை இயக்கிய முதல் பெண்ணும் இவரே. ஸ்டோரிபோர்டு வல்லுநரான இவர் பல பிக்ஸார் படங்களில் உதவியிருந்தாலும், சில நிமிடங்களே இருக்கும் Bau படத்தின் மூலம் சர்வதேச அளவில் பெயர் பெற்றார். Bau குறும்படத்தில் அதீத பாதுகாப்புடன் ஒரு தாய் தன் குழந்தையை எப்படிப் பிரியாமல் இருக்கிறார் என்பதை அழகான உருவகத்துடன் விளக்கியிருப்பார். தான் சமைத்த கொழுக்கட்டைக்கு (சீன bau தான், தமிழுக்கு கொழுக்கட்டை என வைத்துக்கொள்ளலாம்) உயிர் வந்துவிட அதைச் சீராட்டி வளர்க்கிறார் ஒரு சீனப்பெண். ஒரு கட்டத்துக்கு மேல் பிற குழந்தைகளுடன் சேர்வது, தனியாகச் செல்வது என அந்தக் குழந்தை முடிவு செய்ய, அதை எதிர்த்து சண்டையிடுகிறார் தாய். இதே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த குறும்படத்தை நீங்கள் கண்டு மகிழலாம்.
Turning Redலும் அதீத பாதுகாப்புடன் வளர்க்கும் தாய்க்கும், மகளுக்குமான பாசப் போராட்டம்தான் கதை. அதீத கோபமோ, மகிழ்ச்சியோ, மன அழுத்தமோ உண்டானால் உள்ளிருக்கும் மிருகம் வெளியே வந்துவிடும் என்பதைச் சொல்ல சிவப்பு பாண்டா என்னும் அழகிய உவமையைத் தேர்ந்தெடுக்கிறார். குழந்தையாக இருக்கும் நாம், வளர வளர மிருகமாகிப் போகிறோம் என்பதாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நம் ஆசைகளைத் துறந்து மிருகத்தை மொத்தமாக நம்மைவிட்டு விலக்கப் போகிறோமா அல்லது மிருகத்தை உடன்வைத்துக்கொள்ளப் போகிறோமா என்னும் கேள்வியை நம்மிடம் விட்டுச் செல்கிறது இந்த Turning Red.

படத்தில் நமக்கு நன்கு அறிமுகமான குரல் என்றால் பிரியாவாக வரும் மைத்ரேயி ராமகிருஷ்ணனின் குரல்தான் (நெட்பிளிக்ஸ் தொடரான 'Never have I ever' மூலன் பிரபலமானவர்). பிளாக் பேந்தர், டெனெட் போன்ற படங்களுக்கு இசையமைத்த லுட்விக் கொரான்சன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
இனி கோபப்படும் போதோ, வெட்கப்படும்போதோ நம் முகம் சிவந்தால், Turning Red பாண்டாவும் உங்கள் நினைவுக்கு வரக்கூடும்.