Published:Updated:

`அட்வைஸால எதுவும் மாறிடாது!’ - பெண்ணாகப் பிழைத்திருப்பதன் பாடுகளைச் சொல்லும் துயர்மொழி ‘கார்கி’

சாய் பல்லவி

`ஒரு பொண்ணுக்கு எங்கெங்க வலிக்கும்னும் எனக்குத் தெரியும். ஆணுக்கு எங்கெங்க திமிரு இருக்கும்னும் தெரியும்‘ என்கிற பதிலை நீதிபதி சொல்லும்போது ஆடிப்போகிறார் அந்த வழக்கறிஞர். இங்கே நீதிபதியாக இருப்பவர், ஒரு திருநங்கை.

`அட்வைஸால எதுவும் மாறிடாது!’ - பெண்ணாகப் பிழைத்திருப்பதன் பாடுகளைச் சொல்லும் துயர்மொழி ‘கார்கி’

`ஒரு பொண்ணுக்கு எங்கெங்க வலிக்கும்னும் எனக்குத் தெரியும். ஆணுக்கு எங்கெங்க திமிரு இருக்கும்னும் தெரியும்‘ என்கிற பதிலை நீதிபதி சொல்லும்போது ஆடிப்போகிறார் அந்த வழக்கறிஞர். இங்கே நீதிபதியாக இருப்பவர், ஒரு திருநங்கை.

Published:Updated:
சாய் பல்லவி

பெற்ற தந்தையைக்கூட நம்ப முடியாத சூழலில், யாரை நம்பித்தான் பெண் குழந்தைகளை வெளியில் அனுப்புவது? ‘காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த காதலன்; மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்; மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை’ இப்படி ஏகப்பட்ட கொடுமைகள், தினந்தினம் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்து, மனதைப் பதற வைக்கிறது.

பாலியல் கொடுமை
பாலியல் கொடுமை

பள்ளிக்கூடம், கல்லூரி, வீடு, மருத்துவமனை என்று எல்லா இடங்களிலும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆசிரியர், மாமா, சித்தப்பா, அண்ணன், பக்கத்து வீட்டுப் பையன் என இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானவர்கள், குழந்தைளுக்கு நன்கு அறிமுகமானவர்களே. ‘இவர் என்னை இப்படிச் செய்கிறார்’ என்று வெளியில் சொன்னால் ஏற்படும் பின்விளைவு என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பயந்தே எதையும் சொல்லாமல் தொடர்ந்து தொல்லைகளுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கிறார்கள், குழந்தைகள். தன் வீட்டு ஆண்களால் ஒரு குழந்தை இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கும்போது, மூடி மறைக்கும் பெண்கள்தானே இங்கே அதிகம்.
சமூகம் இப்படி கல்லாகிக் கிடக்கும் சூழலில்தான், ‘சைல்டு அப்யூஸ்’ கதைக் களத்தை கருவாகத் தாங்கி வந்திருக்கிறது சாய் பல்லவி நடித்திருக்கும் ‘கார்கி’ திரைப்படம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை, அயனாவரத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், கடந்த 2018-ம் ஆண்டு 12 வயது சிறுமி, தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்கமுடியாது. செக்யூரிட்டி, தண்ணீர் கேன் போடுபவர், லிஃப்ட் மேன் என்று ஆரம்பித்து பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் கூட்டாகச் சேர்ந்து நாள் கணக்கில் அந்தப் பிஞ்சை வன்முறைக்கு உள்ளாக்கிய கொடூரம், கொடுமையின் உச்சம். அந்தச் சம்பவத்தைக் கருவாக எடுத்துக் கொண்டு, திரைக்காக பல்வேறு மாற்றங்களுடன் தந்திருக்கிறார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன். ‘கார்கி’யாகவே மாறியிருக்கும் சாய்பல்லவி, எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்கிறார், தன்னுடைய இயல்பான நடிப்பால்.

சாய் பல்லவி
சாய் பல்லவி

அப்பார்ட்மென்ட்டில் ஒன்பது வயது மாணவி, நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், பலரையும் உறைய வைக்கிறது. இதில், ஐந்தாவது நபராக அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி கைநீட்டப்படுகிறார்... கைது செய்யப்படுகிறார். அவர், தனியார் பள்ளியின் ஆசிரியையாக வேலை பார்க்கும் கார்கியின் அப்பா. பள்ளியில் படிக்கும் தங்கை, சுயசம்பாத்திய அம்மா என சின்னஞ்சிறு குடும்பம்.
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தை கைதாகியிருக்கும் செய்தி, கார்கியை உலுக்கிப் போடுகிறது. சிறுவயதில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூஷன் ஆசிரியரை தலையில் ஓங்கி அடித்து, ‘இந்த மாதிரி மனுஷங்களை பாக்கும்போது அப்பாவை நினைச்சுக்க; தைரியம் தன்னால வரும்‘ என்று சொன்ன அப்பா, எப்போதுமே கார்கியின் மனதில் ஹீரோ. அத்தகைய அப்பாவுக்கு இப்படியொரு பிரச்னை என்றால், விட்டுவிட முடியுமா? தனியொருத்தியாய் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்.

கேமராவும் மைக்குமாக மீடியாக்கள் ஓயாமல் துரத்துகின்றன. ஊரே காரித் துப்புகிறது. ஆசிரியை வேலையும் பறிக்கப்படுகிறது. அம்மா நடத்தி வந்த இட்லி மாவு பிசினஸ் முடங்கிப்போகிறது. பெரிய வக்கீல் கைவிரிக்க, அரைகுறையான ஒரு ஜூனியர் வக்கீலை நம்பி அலைந்துதிரிகிறார் கார்கி. அரைகுறை என்றாலும், ஒரு கட்டத்தில் சரியான ஒரு 'பாய்ன்ட்'டை முன்வைக்கிறார் அந்த ஜூனியர் வக்கீல். ஜாமீனில் வெளியில் வருகிறார் அப்பா.

ஏதுமறியா பிஞ்சு சிதைக்கப்பட்டிருக்கும் வழக்கு. மீடியாக்கள் ஒயாமல் துரத்திக் கொண்டே இருக்கும் வழக்கு. மிகமிக சீரியஸான வழக்கு. ஆனாலும், கார்கி தரப்பு எடுத்து வைத்த வாதத்திலிருக்கும் அழுத்தத்தை உணர்ந்து, ஜாமீன் தருகிறார் நீதிபதி. உடனே, ‘சாதாரண நீதிபதியா இருந்திருந்தா கேஸோட சீரியஸ் புரிஞ்சிருக்கும்’ என அரசுத் தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றத்துக்குள்ளேயே குத்திக்காட்ட, கூடுதல் நிதானத்துடன், அதேசமயம் குறையாத வேகத்துடன் நீதிபதி தரும் பதில், அற்புதம். ‘ஒரு பொண்ணுக்கு எங்கெங்க வலிக்கும்னும் எனக்குத் தெரியும். ஆணுக்கு எங்கெங்க திமிரு இருக்கும்னும் தெரியும்‘ என்கிற பதிலை நீதிபதி சொல்லும்போது ஆடிப்போகிறார் அந்த வழக்கறிஞர். இங்கே நீதிபதியாக இருப்பவர், ஒரு திருநங்கை.

 நீதிபதி
நீதிபதி

சரி, கார்கியின் அப்பா, அந்த ஐந்தாவது நபர் இல்லையென்றால், அவர் யார்? அவரா... இவரா... என்று நீள்கிறது சஸ்பென்ஸ். ஒவ்வொருவரையும் நம்மை சந்தேகிக்க வைப்பதன் மூலம், எதிரி தொலைதூரத்தில் இல்லை... ஒவ்வொரு குழந்தையைச் சுற்றியுமே இருக்கிறார் என்பதை உணர வைக்கிறார் இயக்குநர். கடைசியில் இவர்தான் என்று கைநீட்டப்படும்போது, பேரதிர்ச்சி!
க்ளைமாக்ஸ் முடிந்துவிட்டது என்று பார்த்தால்... அப்போதுதான் கார்கி தங்கையின் தங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. அத்தனையையும் முன்னின்று நடத்தும் கார்கி, அப்பாவுக்காக அலைந்து திரிந்த காலத்தில் கிடைத்த அத்தனை நட்புகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டாடுகிறார். சொல்லப்போனால், ஆரம்பத்தில் தன் தந்தையை இந்த வழக்கில் ஐந்தாவது நபராகச் சிக்கவைத்த, தொலைக்காட்சி நிருபர் அகல்யாவையும் (ஐஸ்வர்ய லட்சுமி) அழைக்கிறார்.
காதுகுத்து, வயதுக்கு வருவது, தாலி, மெட்டி என்று பெண்களைச் சுற்றிச் சுற்றிக் காலகாலமாகப் போடப்பட்டிருக்கும் முடிச்சுகள் ஆயிரமாயிரம். அந்த வகையில், இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் நேரத்தில், வயதுக்கு வரும் வைபவத்தை வைத்திருப்பதன் மூலமாக அழுத்தமான மெசேஜ் சொல்கிறார் இயக்குநர்.

நேரில் வராத அகல்யா, அலைபேசி மூலமாக கார்கியின் தங்கையிடம் நடத்தும் உரையாடல், அத்தனை உயிர்ப்பாக இருக்கிறது.
‘அக்கா அட்வைஸ் மழையா பொழிய ஆரம்பிச்சிருப்பாளே?’
‘இல்லக்கா இப்பல்லாம் அது குறைஞ்சுடுச்சு!’
‘ஓ... அட்வைஸ் பண்றதால எதுவும் மாறிடாதுங்கறத புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கா போல!'
ஆம், இந்தச் சமூகம் பெண்களுக்குத்தான் அறிவுரைகளை அள்ளித் தெளிக்கிறது. சொல்லப்போனால், 'அவன் ஆம்பள புள்ள... அப்படித்தான் இருப்பான்' என்று மகன்கள் தவறு செய்தாலும், பெருமையாகப் பேசும் அம்மாக்கள் நிறைந்திருக்கும் பூமியாகத்தான் இருக்கிறது நம் நாடு.

‘எதுக்கு இவ்ளோ டைட்டா டிரஸ் பண்ற?’
‘ராத்திரி நேரத்துல எதுக்கு வெளிய போற?’
‘துப்பட்டா போட மாட்டியா?’

இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை கேட்கவும், அறிவுரைகளை அள்ளித்தெளிக்கவும் மட்டுமே பழக்கப்பட்டிருக்கிறது இந்த இந்தியச் சமூகம். '

சாய் பல்லவி
சாய் பல்லவி

’பெண்களின் ஆடைகளைக் குறை சொல்பவர்கள், பாலியல் வன்முறைகள் நடப்பதற்கு பெண்களின் செயல்பாடுகளும் காரணம் என்றெல்லாம் வாதத்துடன் வருபவர்கள், பாலுறுப்புகள்கூட சரியாக வளர்ச்சி அடையாத குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும்போது என்ன பதில் சொல்வீர்கள்?' என்ற கேள்விக்கு, இந்தச் சமூகத்தின் பதில்?
பள்ளிச் சீருடையில் செல்லும் குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இத்தகைய நிலையிலும், 'பெண்களின் ஆடைகள்தான் பிரச்னைக்குக் காரணம்' என்கிற வியாக்கியானங்களை விலக்கிக் கொள்ள மறுக்கிறது சமூகம்!

கேடுகெட்ட சமூகமே... பெண்களின் ஆடையில் திருத்தம் செய்வதை நிறுத்து; சதைப் பிண்டமும் பெண்குறியும் மட்டுமே தேவைப்படும் காம வெறியர்களை திருத்து என்றுதான் உரக்கக் கத்தத் தோன்றுகிறது. ’கார்கி’ அதைத்தான் செய்திருக்கிறாள் திரைமொழியில்

Gargi | கார்கி
Gargi | கார்கி

இத்தகைய கதையைத் தேர்ந்தெடுத்ததில் இருந்து அதன் ஆன்மாவாகி அதை சுமந்திருப்பது வரை... சாய் பல்லவி ஒரு கலைஞரின் பணியாக மட்டுமல்லாது, சமூகப் பொறுப்புள்ள மனுஷியாகவும் இதற்குப் பங்களித்துள்ளதை உணர முடிகிறது. வெல்டன் கௌதம் ராமச்சந்திரன், சாய் பல்லவி அண்ட் டீம்!