வடகிழக்கு மாநிலம் ஒன்றுக்கு அண்டர்கவர் ஆபரேஷனுக்காகச் செல்லும் காவல் அதிகாரி ஒருவர் சந்திக்கும் அரசியல் மனமாற்றமும், அது தொடங்கி வைக்கும் உரையாடல்களும்தான் இந்த `ANEK' (அநேகம் பேர்).
காவல் அதிகாரி அமன், 'ஜோஷ்வா' என்ற பெயரில் வடகிழக்கு பகுதியில் அண்டர்கவர் ஆபரேஷனில் ஈடுபடச் செல்கிறார். நீண்ட காலமாக அங்கே கிளர்ச்சியை ஏற்படுத்திவரும் ஓர் இனக்குழுவைச் சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துக்கொள்ள வைக்க அவர் காய்களை நகர்த்த வேண்டும். தன் மிஷனில் அவர் ஈடுபடும்போது அங்கு வாழும் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளும், போராட்டம் நிறைந்த அவர்களின் வாழ்க்கையும் அவருக்குள் மனமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதே சமயம், அங்கிருக்கும் பாக்சிங் வீராங்கனையான ஐடோவின் நட்பு அவருக்குக் கிடைக்கிறது. வட கிழக்கிலிருந்து வருவதாலேயே டெல்லியில் இருக்கும் மற்றவர்களால் ஒதுக்கப்படும் ஐடோ, இந்தியாவுக்காக விளையாடிவிடப் போராடுகிறார். அவர் தன் கனவினை நனவாக்கினாரா? அதன் பின்னாலிருக்கும் அரசியல் என்ன? உண்மையை உடைத்துப் பேசுகிறது இந்த 'அநேக்'.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'Ra One', 'Tum Bin 2' படம் வரை சாதாரண ஜனரஞ்சக இயக்குநராக மட்டுமே அறியப்பட்ட அனுபவ் சின்ஹா, அதன் பிறகு 'Mulk', 'Article 15', 'Thappad' என சமூகமும் அது சார்ந்த அரசியலையும் பேசும் படங்களை எடுக்கத் தொடங்கினார். ஆயுஷ்மான் குரானாவுடன் அவர் கொடுத்த 'Article 15' படம்தான் தமிழில் 'நெஞ்சுக்கு நீதி'யாக உருவானது. இந்து - முஸ்லிம் பிரச்னை, தலித்துகளின் மீது நடக்கும் வன்கொடுமை அரசியல், வீட்டுக்குள் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை எனப் பல விஷயங்களைத் தொட்டவர், இந்த முறை வடகிழக்கு மாநிலங்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பேசியிருக்கிறார். வடகிழக்கு குறித்த படம்தான் என்றாலும், இதைக் காஷ்மீர் உட்பட, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள் சந்திக்கும் அரசியல் தீண்டாமைகளுடனும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவட கிழக்கிலிருந்து வரும் மக்களை, மைய மாநிலங்களில் இருப்பவர்கள் வெறுத்து ஒதுக்குவதும், அவர்களும் இந்தியர்களே என்பதை நீருபிக்குமாறு தொடர்ந்து பரீட்சைகள் வைப்பதும் எனச் சம காலத்தில் நிகழும் சமூக அவலங்களைச் சமரசமின்றி காட்சிப்படுத்துகிறது படம். கிளர்ச்சிக் குழுக்கள் என்றாலே அவர்கள் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள் என்று பொதுமைப்படுத்தி அவர்களை ஒடுக்கும் அரசியல் தலைவர்களையும் தயக்கமின்றி தோலுரிக்கிறது படம். உச்ச அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் கலவர பூமியில் சென்று மோமோ சாப்பிடுவது, ஃபுட்பால் ஆடுவது போன்றவற்றுடன், சமாதான பேச்சுவார்த்தையில் பெரியதொரு சிலை அமைத்துக் கொடுப்பதாக வாக்குக் கொடுப்பது, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கைப் படமாக்குவது எனத் தற்போதைய அரசியல் எபிசோடுகளையும் ஆங்காங்கே சீண்டிச் செல்கிறது படம்.

நாயகனாக ஆயுஷ்மான் குரானா. 'ஆர்டிகள் 15' படம் போல, கதையின் மையமாக இவரின் பாத்திரம் புலப்படாவிட்டாலும், அவரின் மனமாற்றமும், அவர் எடுக்கும் முயற்சிகளுமே படத்தின் மையக்கரு. தாடியுடன் அண்டர்கவர் அதிகாரியாக மூக்கை உறிஞ்சிக்கொண்டு அசால்ட்டாக நடித்திருக்கிறார். அவருக்குப் பிறகு படத்தின் முக்கியப் பாத்திரம், பாக்ஸர் ஐடோவாக வரும் ஆண்ட்ரியா (Andrea Kevichüsa). தனக்குரிய அடையாளத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்படும் அவர், தனக்குத் தெரிந்த ஸ்போர்ட்ஸின் மூலம் எல்லோரும் ஆராதிக்கும் ஓர் அடையாளத்தைப் பெறப் போராடுகிறார். மறுபுறம், அவளின் தந்தை கிளர்ச்சி மற்றும் தற்சார்பு பொருளாதாரம் உள்ளிட்ட பாதைகளில் தன் போராட்டங்களை முன்னெடுக்கிறார்.
இப்படியான இரண்டு முரண்களையும் அற்புதமாக இணைக்கிறது திரைக்கதை. அதிலும் க்ளைமாக்ஸில் ஐடோவின் தந்தை மீது நடத்தப்படும் ராணுவத் தாக்குதலையும், ஐடோவின் பாக்ஸிங் மேட்சையும் ஒப்புமைப்படுத்திக் காட்டியிருப்பது படம் பேசும் முக்கியமானதொரு அரசியல்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குமுத் மிஸ்ரா, மனோஜ் பஹ்வா, தெலுங்கானாவிலிருந்து வந்திருக்கும் காவல்துறை அதிகாரியாக சில காட்சிகளில் வரும் ஜே.டி.சக்கரவர்த்தி ஆகியோர் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர். குறிப்பாக மனோஜ் பஹ்வா பேசும் வசனங்கள் டாப் கிளாஸ் 'அரசியல்வாதிகள்' முன்வைக்கும் வாதங்கள்.
வடகிழக்கு மாநிலங்களில் பயணிக்கும் படத்தின் எல்லா வாகனங்களிலும் NE என்றே பொறிக்கப்பட்டிருப்பது, தொடக்கத்தில் டைட்டில் கார்டில்கூட படத்தின் பெயரைப் போடும்போது, 'NE' என்ற எழுத்துகளே முன்னுரிமை பெறுவது, தாக்குதலால் ஏற்படும் இடிபாடுகளில்கூட வடகிழக்கின் வரைபடத் தோற்றம் உருவாவது எனப் படம் நெடுக குறியீடுகள்.

வட இந்தியா, தென் இந்தியா குறித்து ஆயுஷ்மானும், ஜே.டி.சக்கரவர்த்தியும் பேசும் வசனங்களும், வட கிழக்கு எப்படி இந்தியாவாகப் பார்க்கப்படுவதில்லை என்ற அரசியலைத் துணிந்து விமர்சிக்கும் வசனங்களும் நெஞ்சில் தைக்கின்றன.
"உங்களுக்குச் சமாதானம் வேணுமா, சமாதான உடன்படிக்கை வேணுமா?", "நாங்க இந்தியர்கள் இல்லைன்னு அப்பா சொல்றார். அதனாலதான் நான் இந்தியாவுக்காக பாக்ஸிங் விளையாடணும்னு நினைக்கிறேன்", "மக்களோட குரல்கள் அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும்தான் கேட்குது", "யார் வட இந்தியன், யார் தென் இந்தியன்னு அவங்க இந்தி பேசற விதம்தான் முடிவு பண்ணுமா?", "விதவிதமான கலாசாரங்கள், மொழிகள் கொண்ட பகுதிகளை இணைத்தே நம் நாடு உருவானது. அப்படியிருக்கையில் ஏன் நாட்டின் ஒரு சில பகுதிகளைப் பிரித்துவைத்து பாகுபாடு காட்டுகிறார்கள்?", "இந்திய மேப்ல வட கிழக்கு மாநில பெயர்களை நீக்கிட்டு கண்டுபிடிக்கச் சொன்னா, பலராலும் சரியா சொல்ல முடியாது", "அமைதிங்கறதே ஒரு சப்ஜெக்டிவ் ஹைப்போதெஸிஸ்தானே?" என ஒவ்வொரு வசனங்களும் சாட்டையடி.
குழந்தைகள், இளைஞர்கள் எப்படிப் போராட்டப் பாதைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதைச் சிறுவன் நிக்கோவின் கதை வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நிக்கோவின் தாய் ஆயுஷ்மானிடம் விரக்தியில் பேசும் காட்சி, நிச்சயம் இதயத்தைக் கனமாக்கும். இவான் முல்லிகனின் ஒளிப்பதிவு வட கிழக்கின் அழகை மட்டுமல்லாமல், அதில் போராடிப் புதையும் போராளிகளின் ரணங்களையும் சமரசமின்றி காட்சிப்படுத்துகிறது. மங்கேஷ் தாக்டேவின் பின்னணி இசைதான் பல இடங்களில் படம் டாக்குமென்ட்ரியாக மாறுவதைத் தடுத்திருக்கிறது.

இத்தனைத் தெளிவான அரசியல் புரிதல்களுடன் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், ஒரு முழுப்படமாக இதைக் கொடுப்பதில் நிறையத் தடுமாற்றங்கள் புலப்படுகின்றன. நிறையக் கதை மாந்தர்கள், அவர்களின் அரசியல், அவர்களின் லட்சியங்கள் என எல்லாவற்றையும் வடகிழக்கு - டெல்லி என்ற இரண்டு இடங்களின் புவிசார் அரசியலை அடிப்படையாக வைத்து உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அவை ஆரோக்கியமான முறையில் படத்தின் கதையோடு பயணிக்காமல், வலிந்து திணிக்கப்பட்டதாய் துருத்திக் கொண்டு வெளிப்படுகின்றன. நிறைய இடங்களில் ஆயுஷ்மான் கதாபாத்திரம் பேசும் வசனங்கள், இயக்குநர் பேச நினைத்தது என்றாலும், அவை கதையில் இடம்பெறுவதற்கான காரணங்கள் இன்னமும் வலுவானதாக இருந்திருக்கலாம். சிறுவன் நிக்கோவின் எபிசோடு உருக்கம் என்றாலும், அந்தக் கதையைச் சொல்லக் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக்கொண்டது 'நீண்ட சீரியல்'களை நினைவூட்டுகிறது.
இடைவேளை நோக்கி நகரும் காட்சிகள் வசனங்களை மட்டுமே மையப்படுத்தி நகர்வதால், அங்கே படம் செல்ஃப் எடுக்கத் திணறுகிறது. நிறைய விளக்கங்கள் கொடுக்கிறேன், நம்பகத்தன்மையைக் கூட்டுகிறேன் என்று முதல் பாதியில் நிறைய காட்சிகளை, நிறைய பாத்திரங்களைக் கூட்டியிருக்கிறார்கள். இரண்டாவது பாதியில்தான் படம் வேகமே எடுக்கிறது. இப்படி ஒரு படமாக நிறைய சிக்கல்களைச் சந்திக்கிறது 'அநேக்'.

'முல்க்' படத்தைப் போலவே, இதிலும் ஒருவர் தங்களின் விருப்பு வெறுப்புகளை விடுத்து, இந்திய ஒருமைப்பாட்டின் வழியே சிந்திக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு முன்வைக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் இருப்பவர்கள் இந்தியாவின் மத்தியில் இருப்பவர்கள் விரும்புவதைத்தான் செய்ய வேண்டும் என்கிற சராசரி தேசியவாத புரிதலைத்தான் இந்தப் படமும் பிரதிபலிக்கிறதோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை. பல கலாசாரங்கள், பல மொழிகள் இணைந்த நாடு என்று சொல்லிவிட்டு, அவர்கள் அனைவரும் ஒன்றுபோலவே சிந்திக்க வேண்டும் என்ற கருத்தைக் கட்டாய நியதியாக முன்வைப்பது முரணான அரசியல்.
அனுபவ் சின்ஹாவின் `ஆர்டிகள் 15', `முல்க்' படங்கள் வரிசையில் இதுவும் துணிச்சலான அரசியலைப் பேசும் ஒரு படம்தான் என்றாலும், அவற்றின் கிளாசிக் அந்தஸ்த்தை இது அசைத்துப் பார்க்கவேயில்லை. இருந்தும், அநேகம் பேரின் அநியாய அரசியலை அலசி ஆராய்ந்து யோசிக்க வைக்கிறது இந்த `அநேக்'.