Published:Updated:

பீஷ்ம பர்வம் விமர்சனம்: `காட்ஃபாதர்' கதைதான்... ஆனால் இது கிளாஸாக எடுக்கப்பட்ட ஒரு மாஸ் சினிமா!

Bheeshma Parvam | பீஷ்ம பர்வம்

பீஷ்ம பர்வத்தின் கதையை சுற்றிச் சுற்றி எழுதாமல், சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால் அதுவொரு 'காட்ஃபாதர்' கதைதான். மைக்கேல் அஞ்சூட்டிக்காரனாக மம்மூட்டி. கடந்த சில வருடங்களில் வெளியான மம்முட்டி படங்களில் ஆகச்சிறந்த படம் இதுதான்.

பீஷ்ம பர்வம் விமர்சனம்: `காட்ஃபாதர்' கதைதான்... ஆனால் இது கிளாஸாக எடுக்கப்பட்ட ஒரு மாஸ் சினிமா!

பீஷ்ம பர்வத்தின் கதையை சுற்றிச் சுற்றி எழுதாமல், சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால் அதுவொரு 'காட்ஃபாதர்' கதைதான். மைக்கேல் அஞ்சூட்டிக்காரனாக மம்மூட்டி. கடந்த சில வருடங்களில் வெளியான மம்முட்டி படங்களில் ஆகச்சிறந்த படம் இதுதான்.

Published:Updated:
Bheeshma Parvam | பீஷ்ம பர்வம்
கொச்சியில் இருக்கும் தன் குடும்பத்தினைக் கட்டிக்காக்கும் பொறுப்பு அக்குடும்பத்தின் மூத்த தலைமுறை சகோதரர்களில் ஒருவரான மைக்கேலுக்கு இருக்கிறது. ஆனால், அவருக்கு அடுத்த தலைமுறையோ, மைக்கேலை ஒதுக்கி வைக்க முடிவு செய்கிறது. அதற்குரிய அரசியல் ஆட்டங்களையும் அரங்கேற்றுகிறது. இப்படியான நேரத்தில், மைக்கேலில் கடந்த கால கொலைகளும், அதற்காக பழிவாங்கத் துடிப்பவர்களும் ஒன்று சேர்ந்து துரத்த, மைக்கேல் என்ன செய்கிறார் என்பதை பிரமாண்டமாகச் சொல்கிறது 'பீஷ்ம பர்வம்'.
Bheeshma Parvam
Bheeshma Parvam

அஞ்சூட்டிக்காரனின் குடும்பத்தில் மூத்த மகனாக இல்லையென்றாலும் எல்லா பொறுப்புகளும் மைக்கேலிடம்தான் வருகின்றன. குடும்பத்துக்கான பழி பாவங்களைச் சுமப்பவனிடம்தானே எல்லாமும் வரும். பெரிய குடும்பமும், அது தரும் பணிச்சுமையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பெரிய குடும்பத்திலிருந்து பிரிந்து போனவர்களும், பிரித்தெடுக்கப்பட்டவர்களும் குடும்பத்தைச் சுற்றியே இருக்கிறார்கள். குடும்பத்தின் நேரடி வாரிசுகளுக்கே மைக்கேல் ஒவ்வாமை என்னும் போது, பிரிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் அவரைப் பிடித்துவிடுமா என்ன? பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்ட பகை வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. எல்லாப்பக்கமும் புகைய ஆரம்பிக்கிறது. கொலைகளும் அதற்கான பிராய்ச்சித்தங்களும் தொடர்கின்றன. கட்டிவைத்த கோட்டை கண் முன்னே சிதையத் துவங்க, மீண்டும் விஸ்வரூபமெடுக்கிறார் மைக்கேல். தர்மத்தின் பக்கம் நிற்பதா, குடும்பத்தின் பக்கம் நிற்பதா என்கிற குழப்பங்களுடன் அவர் எடுக்கும் முடிவுகள்தான் இந்த 'பீஷ்ம பர்வம்'.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பீஷ்ம பர்வத்தின் கதையை சுற்றிச் சுற்றி எழுதாமல், சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால் அதுவொரு 'காட்ஃபாதர்' கதைதான். இந்திய சினிமாக்களிலேயே 'காட்ஃபாதர்' திரைப்படத்தைப் பலமுறை வெவ்வேறு விதமாக பார்த்துவிட்டோம். 'நாயகன்', 'தேவர் மகன்', 'சர்க்கார்' (இந்தி), 'தலைவா' எனக் கடந்த காலங்களில் எத்தனையோ முறை காட்ஃபாதரைப் பார்த்திருக்கிறோம். இவையனைத்தும் காப்பி அல்ல என்றாலும் காட்ஃபாதரின் பாதிப்புகள் இந்தப் படங்களில் இருக்கும். சமீபத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான 'மாலிக்'கில் காட்ஃபாதரின் பாதிப்பைவிட, நாயகனின் பாதிப்பு அதீதமாக இருந்தது. ஆனால், இத்தனை முறை பார்த்து பார்த்து சலித்த ஒன்லைனை மீண்டும் சொல்லப்போகிறோம் என்று தெரிந்தேதான் எழுதியிருக்கிறார் அமல் நீரத்.

பீஷ்ம பர்வம்
பீஷ்ம பர்வம்

படத்தின் முதல் காட்சியாக ஒரு வயது முதிர்ந்த பெண்ணும், சற்றே இளம் பெண்ணும் ஒரு ஆட்டோவில் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்னை. ஆட்டோக்காரர் அஞ்சூட்டிக்காரன் குடும்பம் குறித்தும் மைக்கேல் அஞ்சூட்டிக்காரனின் பராக்கிரமங்கள் குறித்தும் பேசிக்கொண்டு வருகிறார். எப்படியும் நியாயம் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது. சிற்சில தடங்கலுக்குப் பின்னர், அவர்களுக்கான நியாயம் வழங்கப்படுகிறது. இந்தக் காட்சியின் வெவ்வேறு வடிவங்களை மேலே சொன்ன படங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். இதைப் பார்த்தவுடனேயே, இதுவும் ஒரு வழக்கமான கேங்ஸ்டர் படமாக விரியுமோ என நினைக்கையில்தான் பங்குகொண்ட நடிகர்களின் தேர்ந்த நடிப்பாலும், பின்னணி இசையாலும், ஒளிப்பதிவாலும் நாம் ஏற்கெனவே பார்த்த கதையினைக்கூட தொய்வில்லாமல் சிறப்பாகச் சொல்ல முடியும் என நிரூபித்திருக்கிறார் அமல் நீரத்.

பீஷ்ம பர்வத்தின் தலைப்பே ஒரு குறியீடுதான். மகாபாரத குருஷேத்ரப்போரின் முதல் பத்து தினங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே பீஷ்ம பருவம். இரு குடும்பங்களுக்குமான இணைப்புப்பாலமாக இருக்கும் பீஷ்மர், பாவக்கணக்குகளை ஆராய்ந்து ஒரு குடும்பத்தின் பக்கம் நிற்க வேண்டியதாகிறது. இனியும் போரிட முடியாத சூழலில், பீஷ்மர் என்ன செய்கிறார் என்பதாக கதை நகரும். மம்முட்டியின் பீஷ்ம பருவத்தில் இதற்கு ஒப்பான காட்சியமைப்புகள் உண்டு. அதே சமயம், விவிலிய ஒப்புமைகளும் படம் முழுக்க விரவிக்கிடக்கின்றன.
பீஷ்ம பர்வம்
பீஷ்ம பர்வம்

மைக்கேல் அஞ்சூட்டிக்காரனாக மம்மூட்டி. கடந்த சில வருடங்களில் வெளியான மம்முட்டி படங்களில் ஆகச்சிறந்த படம் இதுதான். அந்த வீட்டில் இருக்கும் எந்தவொரு ஆணுக்கும் மம்மூட்டியைப் பிடிக்காது. உள்ளுக்குள்ளே பொருமிக்கொண்டு இருந்தாலும், மம்மூட்டியைப் பார்த்ததும் யாரும் எதுவும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுவதில்லை. தாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம் என்பதை மறந்துவிட்டு அப்படியே நின்றுவிடுகிறார்கள். இப்படியான காட்சிகளில் மம்மூட்டிக்குப் பெரிதாக வசனங்கள் கூட இல்லை. ஆனாலும், மனிதர் திரையை ஆக்கிரமித்து கம்பீரமாக நிற்கிறார். தன் காலம் கடந்து, நோய் வாய்ப்பட்டு நின்றாலும், காட்டில் சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடு இணை கிடையாது. அதுமாதிரித்தான் படத்தில் வருகிறார் மம்மூட்டி. படத்தில் மம்மூட்டிக்கு அடுத்து பெரிய வேடம் சௌபின் சஹீருடையது. சாந்தமாகி நின்று தேவைப்படும் பொழுது வீறு கொண்டு எழும் கதாபாத்திரம். சௌபினின் சகோதரராக ஸ்ரீநாத் பஸி. படத்தின் திருப்புமுனை பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

படத்தில் உதவாக்கரை வில்லனாக எல்லோரின் மனதிலும் நிற்பது பீட்டர் அஞ்சூட்டிக்காரனாக வரும் சைன் டாம் சாக்கோதான். பிரமாதப்படுத்தியிருக்கிறார். சிங்கக் கூடாரத்தில் வளரும் பூனை. ஆனாலும் தன்னை சிங்கமென நினைத்துக்கொள்ளும் கதாபாத்திரம். ஒவ்வொரு காட்சியிலும் கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். கருணையற்று நிற்க வேண்டும். அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் சாக்கோ. நதியா, திலீஷ் போத்தன், ஃபர்கான் ஃபாசில், அனசுயா, ஜினு ஜோசஃப், ஹரிஷ் உத்தமன், அனகா என படம் நெடுக பல தெரிந்த முகங்கள். ஆனால், எல்லா பாத்திரங்களுக்கும் அழுத்தமான காட்சியமைப்புகளைச் சேர்த்திருப்பது திரைக்கதையின் பலம்.

பீஷ்ம பர்வம்
பீஷ்ம பர்வம்

மம்முட்டியைப் கொல்ல திட்டம் தீட்டும் எல்லோரும் ஓர் அறையில் இருக்க, அதை ஒரே ஃபிரேமுக்குள் ஓவியம் போல் அமைத்ததில் இருக்கிறது அனந்த் சி சந்திரனின் திறமை. நிறைய லாங் ஷாட்டுகள். ஆனால், அவை நம் பொறுமையை சோதிக்காத வண்ணம் எடிட் செய்திருக்கிறார் விவேக் ஹர்ஷன். படத்தின் இன்னொரு பலம் சுஷின் ஷியாமின் பின்னணி இசை. பாடல்களே தேவையில்லாத படத்துக்கு, ஏனோதானோவென்றே வந்து விழுகின்றன பாடல்கள். ஆனால், அதற்கும் சேர்த்து பின்னணில் மிரட்டியிருக்கிறார் மனிதர். சண்டைக் காட்சிகளில் அதிரும் இசைக் கருவிகளில் கூட நிச்சயம் குருதி படர்ந்திருக்கும்.

இவ்வளவு பாராட்டுக்களைக் கடந்தும், படம் அதன் உச்சக்கட்டத்தை (final act) நெருங்கும் போது சுவாரஸ்யமான காட்சிகளுக்குப் பதிலாக எப்படியும் இவர்தான் வெல்வார் டைப் கதையாக படம் மாறிவிடுகிறது. 'காட்ஃபாதர்' ஒப்பீடுகளையெல்லாம் விடவும் படத்தின் மிகப்பெரிய குறை அதுதான். மைக்கேல் எப்படி டானாகிறார் என்பதற்காக இயற்றப்பட்ட காட்சியைப் போல் இருக்கிறது படத்தின் கிளைமேக்ஸ். காட்ஃபாதர்களுக்கே உண்டான குற்ற அழுத்தமோ, பிரச்னைகளோ எதுவுமே இல்லாமல் சூரசம்ஹாரம் போல் எடுக்கப்பட்டிருக்கின்றன படத்தின் இறுதி காட்சிகள். கண்முன்னே மோகன்லாலின் 'லூசிபர்' படமும் வந்து போகிறது.

முடிவுறையை இன்னும் சிரத்தையுடன் எழுதியிருந்து, தொடரும் போட்டிருந்தால் 'பீஷ்ம பருவம்' அதன் பெயரைப் போல இன்னும் கம்பீரமாய் இருந்திருக்கும். மற்றபடி, இது கிளாஸாக எடுக்கப்பட்ட ஒரு மாஸ் சினிமா!