அப்பாவை மேலும் கஷ்டப்படுத்திவிடக்கூடாது என நினைக்கும் மகன், அதற்காக தன் வாழ்க்கையையும் தொலைக்க துணிந்தால் என்ன ஆகும் என்பதுதான் 'பிக் பாஸ்' புகழ் முகேன் ராவ் நடித்திருக்கும் 'வேலன்' திரைப்படத்தின் ஒன்லைன். காதலியா தந்தையா என முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் வேலன் யார் பக்கம் நிற்கிறார், வேலனுக்காக அவனின் தந்தை என்ன செய்கிறார் என்பதே கதை.

பள்ளியில் பல ஆண்டுகள் படித்து கல்லூரியில் கால்வைக்கும் அதிரடி ஆசாமியாக முகேன். அவரைவிடவும் சில ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்து கல்லூரியில் கால் வைக்கிறார் 'பிராங்ஸ்டர்' ராகுல். இருவருக்கும் பார்த்ததும் நட்பு. அதே கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மலையாள மாணவி மீனாட்சியைப் பார்த்ததும் முகேனுக்குக் காதல். ஆசையாய் ஆசையாய் காதல் கடிதம் எழுத, அது கைமீறி கைமாறிப் போக ஒரு பக்கம் எல்லாம் திசை மாறுகிறது. இன்னொரு பக்கம், பரம்பரைப் பகையைத் தூக்கிச் சுமக்கிறார் எம்.எல்.ஏ ஹரிஷ் பேரடி. அவர் ஏன் முகேனின் அப்பா பிரபு மீது இவ்வளவு வன்மத்தைத் தூக்கிச் சுமக்கிறார்; கடிதக் குளறுபடிகள் என்ன ஆனது என்பதாக நீள்கிறது வேலனின் திரைக்கதை.
காமெடி, காதல் என ஜாலியாக நடித்திருக்கிறார் பிக் பாஸ் முகேன். பிற நடிகர்களின் சாயல் பல இடங்களில் தெரிவதை மட்டும் அடுத்தடுத்த படங்களில் குறைத்துக்கொள்ளலாம். எமோஷனல் காட்சிகள், அதிரடி சண்டைகள் என எல்லாவற்றிலும் பக்கபலமாக நிற்கிறார் பிரபு. பாடல்களில் மட்டுமே தென்பட்டாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் சிறப்பாகவே நடித்திருக்கிறார் நாயகி மீனாட்சி. கதைக்களம் பொள்ளாச்சி, பாலக்காடு சுற்றுவட்டாரம் என்பதால், சில காட்சிகளை மலையாளத்தில் எடுக்க நினைத்தது ஸ்மார்ட்டான ஒரு மூவ்தான்.

ஆனால், அதற்காக தம்பி ராமையா மலையாளியாக வேஷம் கட்டியதுதான் முடியவில்லை. அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அவர் நடிக்கும் காட்சிகள் படத்துக்கு ஆகப்பெரும் ஓவர்டோஸ். அவரின் மலையாள பேச்சுவழக்கும் சுத்தமாக ஒட்டவில்லை. சூரி காமெடிகளுக்குக்கூட சிரித்துவிடுகிறோம், பிராங்ஸ்டர் ராகுல் காமெடி செய்வதைத் தவிர்க்கலாமே என்கிற அளவுக்கு அவரும் ஜோக் சொல்லி கொல்கிறார். வலுவான காரணம் கொண்ட வில்லன், கதைக்கு வெளியே இருக்க, வலுவே இல்லாத காரணத்தை வைத்து பல நிமிடங்கள் காமெடி என இழுத்ததுதான் படத்தின் பிரதான பிரச்னை.
அதிலும், பாலியல் வன்கொடுமை என்ற பெருங்குற்றத்தை இன்னமும் எத்தனை காலத்துக்கு காமெடியில் புகுத்தி அதை வைத்து ஜாலி, கேலி செய்வார்களோ?! அடுத்தடுத்த படங்களில் இயக்குநரும், நடிகரும் இதைத் தவிர்ப்பார்கள் என்று நம்புவோம்.
ஏற்கெனவே ஹிட் அடித்த முகேனின் பாடலை படத்தில் பயன்படுத்தியது, ரசிகர்களைக் கவர எடுத்த ஒரு நல்ல முடிவுதான். அதற்காக இரண்டாம் பாதியில் எங்கு நோக்கினும் பாடல்களால் நிரப்பி வைத்திருப்பது கண்ணைக் கட்டுகிறது. வாய் திறந்து இரண்டு வார்த்தைகள் சொன்னாலே தீர்ந்துவிடக்கூடிய பிரச்னையை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காரணமே இல்லாமல் இழுத்து, தொய்வான திரைக்கதையை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கவின்.

பிளாஷ்பேக் காட்சிகளில் இருக்கும் அழுத்தமான காட்சிகளைப் போல, இரண்டாம் பாதியின் நிகழ்கால காட்சிகளிலும் சில அழுத்தமான காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.
காமெடியும், எமோஷனும் இன்னும் கலக்கலாக வந்திருந்தால், 'வேலன்' இன்னமுமே ரகளையாக ஈர்த்திருப்பான்.