ஒரு ரயிலில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களும் அதற்கான காரணங்களும்தான் இந்த `புல்லட் டிரெயின்' (Bullet Train).
டிஸ்கி: படம் ஒரு முரட்டு காமெடி படம் என்றாலும், வன்முறையும் ரத்தங்களும் எல்லா மூலைகளிலும் தெறிக்கும் என்பதால் இது எல்லோருக்குமான படமல்ல!
டோக்கியோவிலிருந்து க்யோட்டோவுக்குச் செல்லும் புல்லட் ரயிலிலிருந்து பெட்டி ஒன்றை எடுக்கும் அசைன்மென்ட் லேடிபக்கிற்கு வருகிறது. வழக்கமான ஏஜென்ட் அன்று வர இயலாமல் போக, மாற்று நபராக உள்ளே நுழைகிறார் லேடிபக். உள்ளே சென்று ஒரு பெட்டியை எடுத்துவிட்டு வெளியேற வேண்டும். அதே சமயம், லேடிபக்கிற்குத் தெரியாமல் இன்னும் சில கொடூர கொலைகாரர்களும், அந்த ரயிலினுள் இருக்கிறார்கள். குற்றங்களின் ஒட்டுமொத்த சிண்டிகேட்டின் தலைவரான ஒயிட் டெத் டேஞ்சரின், லெமன் இரு ஹிட்மேன்களை ரயிலுக்குள் அனுப்பியிருக்கிறார். இது இல்லாமல், அப்பாவி வேடத்தில் இருக்கும் ஒரு கொலைகார சிறுமியும் உள்ளே இருக்கிறாள். இவர்கள் போக, சரி சரி... இன்னும் சிலரும் இருக்கிறார்கள்.

10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட பெட்டியையும், ஒயிட் டெத்தின் மகனையும் க்யோட்டோவில் இருக்கும் கும்பலிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதான் அசைன்மென்ட். ஆனால், இந்த ரயில் சில இடங்களில் மட்டும்தான் நிற்கும். அதுவும் சில நொடிகள் மட்டுமே நிற்கக்கூடிய புல்லட் டிரெயின். புல்லட் டிரெயினின் வேகத்தில் செல்லும் திரைக்கதையில், இந்த நபர்கள் கடந்து வந்த பாதை, எப்படி இங்குச் சங்கமித்தார்கள், அடுத்து என்ன நடக்கிறது எனப் பலவற்றைச் சொல்லிக்கொண்டே சீறிப் பாய்கிறது இந்த 'புல்லட் டிரெயின்'.
இனி எந்த அளவிலும் பெரிய குற்றங்களைச் செய்துவிடக்கூடாது என்கிற உயரிய எண்ணத்துடன் முழுக்க முழுக்க பாசிட்டிவ் வைபுடன் இருக்கும் பிராட் பிட்தான் லேடிபக். முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் காமெடி செய்து அப்ளாஸ் அள்ளுகிறார். லெமன், டேஞ்சரின் சகோதரர்களாக ஆரோன் டெய்லர் ஜான்சன், ப்ரைன் டைரி ஹென்ரி இருவரும் காமெடியில் பட்டாசு கிளப்புகிறார்கள். கௌரவத் தோற்றத்தில் வரும் சாண்டிரா புல்லக், ரியான் ரெய்னால்ட்ஸ் கூட ரகளைச் செய்திருக்கிறார்கள். ரயிலில் வரும் கன்செசன் கேர்ள் யார் என உற்று நோக்கினால், 'தி பாய்ஸ்' தொடரில் வரும் கிமிகோ. அதிலும், 'பார்க்க அப்பாவி போல் இருக்கும் இவர்தான்' வாய்ஸ் டோனில் பள்ளிச் சிறுமி வேடத்தில் வருகிறார் ஜோ கிங். 'இருக்குற கொலைகார பசங்களுக்கு மத்தியில நீ வேற ஏன்மா..?' எனக் கேட்கும் வைக்கும் அளவுக்கு இவரும் பக்காவான ஜாலி கேடி கில்லாடி.

'டெட்பூல் 2' இயக்கிய டேவிட் லீச்தான் இந்தப் படத்துக்கும் இயக்குநர் என்பதால், காட்சிகள் எடுக்கப்பட்ட விதம், முன்னுக்குப் பின் நகரும் கதை, என யூகிக்க முடியாத திரைக்கதை கொண்டு திரையில் புதியதொரு மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார். கய் ரிட்சியின் ஆரம்பக்கால படங்களான 'ஸ்நேட்ச்', 'லாக் ஸ்டாக் & டூ ஸ்மோக்கிங் பேரல்ஸ்' பாணியிலான திரைக்கதை யுக்திதான் என்றாலும் திரையில் இப்படியான படங்களைப் பார்க்கும் பொழுது ஏன் இன்னும் நிறைய இயக்குநர்கள் பழைய பாணியிலேயே படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது.
ட்விஸ்ட், ட்விஸ்ட், ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் எனக் கதை புல்லட் டிரெயின் வேகத்தில் செல்வதால், ஆங்காங்கே லாஜிக் எல்லாம் ஸ்டாக் இல்லைப்பா ரேஞ்சில் டீல் செய்திருக்கிறார்கள். ஆனால், அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் திரையரங்குகளில் பார்க்க ரகளையானதொரு ஆக்ஷன் காமெடி படம் இந்த 'புல்லட் டிரெயின்'. தாராளமாக இந்த டிரெயினுக்கு ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்யலாம்!