Published:Updated:

தவறானவரா... கெட்டவரா... என்ன சொல்கிறார் சஞ்சு? #Sanju

கார்த்தி
தவறானவரா... கெட்டவரா... என்ன சொல்கிறார் சஞ்சு? #Sanju
தவறானவரா... கெட்டவரா... என்ன சொல்கிறார் சஞ்சு? #Sanju

சிறைக்குச் செல்லவிருக்கும் நடிகர், அவரின் வாழ்க்கையைப் புத்தகமாக்க நினைக்கிறார். சர்ச்சைகள் சூழ்ந்த அந்த நடிகரின் ஆசை நிறைவேறியதா என்பதை 160 நிமிட பையோபிக்காக (கொஞ்சம் கற்பனை கலந்துதான் பாஸ்!) சொல்கிறது ராஜ்குமார் ஹிரானியின் `சஞ்சு ' #Sanju.  

தீவிரவாதி, RDX வெடிபொருள்கள் நிறைந்த வண்டியை வீட்டில் வைத்திருந்தவர், போதை மருந்துக்கு அடிமையானவர், சட்டத்துக்குப் புறம்பாகத் துப்பாக்கி வைத்திருந்தவர், பெண் பித்தர், தொழிலை மதிக்காதவர் என பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிம்பம் இப்படியாகத்தான் மீடியாக்களில் இதுவரை வந்திருக்கிறது. அதில் எதையெல்லாம் சஞ்சய் தத் ஆமோதிக்கிறார், எதையெல்லாம் மறுக்கிறார் எனச் சொல்கிறது சஞ்சு. 

சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை இருவரின் பார்வையில் சொல்கிறது கதை. முதல் பாதியில் சஞ்சய் தத் ஒரு கதை சொல்கிறார். இரண்டாம் பாதியில் சஞ்சய் தத்தின் நண்பர் காம்லி (விக்கி கௌஷல்) மீதிக் கதையைச் சொல்கிறார். தன் முதல் படமான ராக்கியில் நடிக்கச் சொதப்பியதில் ஆரம்பித்து, சிறைக்குள் அமர்ந்து ரேடியோவில் கதை சொல்லும் வரை சஞ்சய் தத்தின் வாழ்வில் நடந்த சர்ச்சையான சம்பவங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பேசுகிறது படம். அவரின் சினிமா வாழ்க்கை? அது தேவையில்லை என டீலில் விட்டிருக்கிறார்கள்.

டீன் ஏஜ் நபர், போதை மருந்துக்கு அடிமையான ஒரு நபர், சிறைக்குள் வயதான தோற்றம், 30 வயது மதிக்கத்த ஒரு நபர், என சஞ்சய் தத்தின் வாழ்க்கையின் 38 ஆண்டுகளை கண்முன் நிறுத்துகிறது சஞ்சு. அவை அனைத்துக்கும் தன் முழு உழைப்பையும் கொடுத்து நடித்திருக்கிறார் ரன்பீர் கபூர். ராக்ஸ்டார், பர்ஃபி படங்களைத் தொடர்ந்து இது அவருக்கு அடுத்த லெவல் மைல்கல். மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். சஞ்சய் தத்தின் மேனரிஸங்களை நகலெடுத்து, அப்படியே திரைக்குக் கொண்டு வந்து அதிசயிக்க வைக்கிறார். ஒரு காதல் நாயகனாக ரன்பீர் பலரின் ஃபேவரைட். ஆனால், அந்த நடிப்பை இதில் பிரதிபலித்துவிடக் கூடாது. அதே சமயம் ரொமான்ட்டிக்காகவும் இருக்க வேண்டும் என்று சற்று கடினமான கம்பியின் மேல் வெற்றிகரமாக நடந்திருக்கிறார். சாய்ந்து சாய்ந்து நடப்பதாகட்டும், மூர்க்கத் தன்மையுடன் கோபப்படுவதாகட்டும், உடல்வாகை மாற்றியதாகட்டும் ஹேட்ஸ் ஆஃப் ரன்பீர்! விருதுகள் காத்திருக்கின்றன.

ஒரு பெர்பெக்ட் டீமை தேர்வு செய்ததிலேயே, படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி பாதி வென்றுவிட்டார். சஞ்சய் தத்தின் தாய், நர்கிஸ் தத்தாக மனிஷா கொய்ராலா, தந்தை சுனில் தத்தாக பரேஷ் ராவல், நண்பர்களாக விக்கி கௌஷல், ஜிம் சார்ப் என அட்டகாசமான டீம். தந்தை மகனுக்குமான பிணைப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பரேஷ் ராவல். நண்பர் காம்லியின் கதாபாத்திரம் சற்று சினிமாத்தனமாக இருந்தாலும், அந்த நட்பு அழகாக இருக்கிறது. 

சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதவரும் அனுஷ்கா ஷர்மா மட்டும் கொஞ்சம் உறுத்தல். யாரிடம் கதை கேட்டாலும், ஒற்றைக் கண்ணிலிருந்து மட்டும் கண்ணீர் சிந்தும் வேடம் அனுஷ்காவுக்கு. லண்டன் எழுத்தாளர் என்பதால் அப்படி ஒரு ஹேர் ஸ்டைல் போல, ஏனோ, `3 இடியட்ஸ் ' படத்தின் பொம்மன் இரானியின் `விக்'கை நினைவுபடுத்தியது.  

ராஜ்குமார் ஹிரானியின் படங்களில் பேசப்படும் மனிதம் இதிலும் பேசப்பட்டிருக்கிறது. நல்லவர்களின் மூலம் பேசப்பட்டு வந்த அது, முதல் முறையாக ஒரு தவறானவருக்காகக் (?) கண்ணீர் சிந்த வைக்கிறது, விசில் அடிக்க வைக்கிறது. சஞ்சய் தத் தவறானவர்தான், ஆனால் சற்று அதிகமாகவே அவர் TRP தீனிக்கு இரையாக்கிவிட்டரோ என எண்ண வைக்கிறார் ராஜ்குமார் ஹிரானி. அதுதான் படத்தின் வெற்றியும்கூட!

இந்தியாவில் இதற்கு முன்னர் வெளிவந்த பயோபிக் திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி நாயகர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. `சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' ஆகட்டும், தோனி :அன்டோல்ட் ஸ்டோரி ஆகட்டும், இந்தியத் தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றைச் சொன்ன `பாக் மில்க்கா பாக்' ஆகட்டும் அவையனைத்தும் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம். சினிமாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மலையாளத்தின் `செல்லுலாய்டு' , தெலுங்கின் `மகாநடி' கூட வெற்றி பெற்றவர்களின் கதைதான். சாவித்திரியைப் போலவே, சஞ்சய் தத்தையும் சூழ்நிலைக்கைதியாகக் காட்ட முயற்சி செய்தாலும், சஞ்சய் தத் தவறானவர் என்பதை படம் சமரசமின்றி காட்சிப்படுத்துகிறது. 

தன் வாழ்க்கை முழுவதிலும் சர்ச்சைகள் சூழ்ந்த ஒரு நபரின் வாழ்க்கை எப்படியிருக்கும்? சட்டங்கள் சாதாரண மனிதருக்கு ஒரு மாதிரியும், பிரபலங்களுக்கு வேறுமாதிரியும் வளையும் என்பதுதான் ஆண்டாண்டு காலமாய் நாம் பார்த்து வரும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துபவை. ஆனால், மீடியா வெளிச்சம் நிறைந்த பிரபலங்களின் வாழ்வில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட ஊதிப் பெரிதாக்கப்படும். அவர்களின் வாழ்வை எப்போதும் அதிக மசாலாக்கள் சேர்த்தே சொல்லும், அவர்களைப் பற்றிய செய்திகள், விற்பனை பண்டங்களாக மாற்றப்படும் என்பதை நினைவுறுத்துகிறது சஞ்சு. 

படத்தில் குறைகளே இல்லையா என்றால் அதெல்லாம் ஏகத்துக்கும் இருக்கிறது. சஞ்சய் தத் எதுவுமே தெரியாத பப்பூ, ஊரார்தான் அவரை இப்படி மாற்றிவிட்டனர் என்பது போன்ற சில காட்சிகளும், அவர் ஏன் பாதுகாப்புக்காக AK 56 போன்ற உயர் ரக துப்பாக்கிகள் வைத்திருந்தார் என்பதும் இன்னும் தெளிவாகக் காட்டியிருக்கலாம். சஞ்சய் தத்துடன் அதிகம் மீடியாக்களீல் கிசுகிசுக்கப்பட்ட தாவூத்  இப்ராஹிம் பற்றி எந்தப் பதிவும் இல்லை, அவருடைய கூட்டாளி டைகர் மேமன் பற்றி மட்டுமே இருக்கிறது. பயோபிக் என்று சொல்லிவிட்டு அவரின் சினிமா வாழ்க்கை பற்றி பெரிதும் பேசாதது சற்று நெருடல். படம் முடிந்து கிரெடிட்ஸில் பார்க்கும் போதுதான் கேமரா ரவிவர்மன் என்றே தெரிகிறது. அதற்கான எந்தச் சுவடும் படத்தில் இல்லை. படத்தின் இசை சரியாக இல்லை என நினைத்த தயாரிப்பாளர், இரண்டு பாடல்களுக்கு மட்டும் ரஹ்மானை ஒப்பந்தம் செய்திருந்தாராம். ஆனால், எந்த வகையிலும் அது படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக படத்தில் பொம்மன் இராணி என்ற நடிகர் சஞ்சுவின் முன்னாள் காதலியின் தந்தையாக நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் பாதியில் இறந்தும் விடுகிறது. பிறகு, சஞ்சய் தத்தின் படமான முன்னாபாய் MBBS படத்தின் சில காட்சிகள் வருகின்றன. அதிலும் பொம்மன் இராணி அவர் ஏற்று நடித்த அந்தப் பழைய டீன் கேரக்டரில் தலைகாட்டுகிறார். இது என்ன லாஜிக்கோ?

20 ஆண்டுகளுக்கும் மேல் சஞ்சய் தத் இப்படிப்பட்டவர்தான் என்பதைச் செய்தித்தாள்கள் வாயிலாக நாம் அறிந்திருப்போம். சில ஆண்டுகளுக்கு முன்னர், நீதிமன்றமும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு தண்டனை ஒன்றை வழங்கியிருக்கிறது. 2016ம் ஆண்டு நல்லெண்ண அடிப்படையில், அவரையும் விடுதலையும் செய்துவிட்டனர். இப்போது 3 மணி நேர சினிமாவாக சஞ்சய் தத் தன் தரப்பு வாதத்தை வைத்திருக்கிறார். இந்த வாதம், அவருக்கு அளித்த தண்டனையை எந்தவிதத்திலும் மாற்றப்போவதில்லை. அதைப் புரிந்த வகையில், மக்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என முடிகிறது இந்த பயோபிக்.

சஞ்சய் தத்தை ஒரு மகாத்மாவாக உருவகப்படுத்துவதில் சஞ்சய் தத்துக்கே உடன்பாடில்லை என ஆரம்பிக்கும் படம், அவர் தரப்பு வாதங்களை அவரின் கண்கள் மூலம் நமக்குக் காட்டியிருக்கிறது. சஞ்சய் தத் கெட்டவரா என்றால், அவர் கெட்டவர் இல்லை, ஆனால் தவறு செய்திருக்கிறார் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்தச் சஞ்சு.