Published:Updated:

படமா, பிசிக்ஸ் கிளாஸா, எப்படி இருக்கிறது தெலுங்கின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர்? #Antariksham9000KMPH

இறந்த காலத்தை மாற்றியமைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. விண்ணை முட்டும் ரிஸ்க் எடுத்து 9000 கி.மீ., வேகத்தில் பயணித்து அதைச் சரி செய்ய முயல்வதுதான் இந்த #Antariksham9000KMPH.

படமா, பிசிக்ஸ் கிளாஸா, எப்படி இருக்கிறது தெலுங்கின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர்? #Antariksham9000KMPH
படமா, பிசிக்ஸ் கிளாஸா, எப்படி இருக்கிறது தெலுங்கின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர்? #Antariksham9000KMPH

எப்போதும் இல்லாமல், இந்த வருடம் இந்திய சினிமாவின் கவனம் சயின்ஸ் ஃபிக்ஷன் பக்கம் சற்றே திரும்பியிருக்கிறது. அதுவும் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் டிக்: டிக்: டிக், 2.0 எனப் பரிசோதனை முயற்சிகள் நடந்து இருக்கின்றன. பாலிவுட்டிலும் சில படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது, இது தெலுங்கு சினிமாவின் முறை. `தெலுங்கின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர்' என்ற டேக்லைனுடன் வெளியாகியிருக்கும் #Antariksham9000KMPH படம் எப்படி?

இந்தியாவின் ஸ்பேஸ் சென்டர் 4 வீரர்களை விண்வெளிப் பயணத்துக்குத் தயார் செய்துவருகிறது. அப்போது மித்ரா என்றொரு சாட்டிலைட் கட்டுப்பாட்டை இழந்ததால், கம்யூனிகேஷன் மொத்தமும் பாதிக்கப்பட்டு பேராபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. இது இந்தியாவுக்கு இழுக்கைக் கொண்டுவரும் என்பதற்காக 5 வருடங்களுக்கு முன் ஸ்பேஸ் சென்டரிலிருந்து ஒரு தனிப்பட்ட காரணம் மற்றும் மிஷன் தோல்விக்காக வெளியேறிய வருண் தேஜின் உதவியை மீண்டும் நாடுகிறார்கள். வருணுடன் இணைந்து விண்வெளிப் பயணம் தொடங்குகிறது. அப்போது வருணுக்கு தன் பழைய தோல்வி ஏற்படுத்திய களங்கத்தைத் துடைக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. களங்கம் துடைக்கப்பட்டதா, விண்ணுக்குச் சென்ற 4 வீரர்களும் சொந்த விருப்பு, வெறுப்பை மறந்து தேசத்தின் பெயரை நிலை நாட்டினார்களா, 140 நிமிடங்கள் காத்திருந்து விடை தெரிந்துகொள்ளலாம்.

ஹீரோவாக தெலுங்கு சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷன் வருண் தேஜ். கதாநாயகிகளாக `காற்று வெளியிடை' அதிதி ராவ் ஹைதரி மற்றும் லாவண்யா த்ரிபாதி. ஸ்பேஸ் சென்டரின் டைரக்டராக முக்கியக் கதாபாத்திரத்தில் ரகுமான். வருண் தேஜ் கடமையே கண்ணான தேசத்துக்காக உழைக்கும் கர்ம வீரர்தான். அதற்காக எமோஷனல் மற்றும் காதல் காட்சிகளில்கூட ஸ்ட்ரிக்ட் ஆபீஸராகவே இருந்தால் எப்படி பாஸு. அவரின் காதல் எபிசோடு துருத்திக்கொண்டு தெரிந்தாலும், அறிவியல் பேசும் படத்தை ஜனரஞ்சகமான ஒன்றாக அதுதான் மாற்றுகிறது. அதிலும் பிரசாந்த் விஹாரியின் இசையில் `சமயமா' பாடலும் அது காட்சிப்படுத்தப்பட்ட விதமும்... ஒரு தென்றலாக நம்மை வருடிச் செல்கிறது.

அதிதி ராவுக்கு தெலுங்கில் இது இரண்டாவது படம். அதுவும் இந்த வருடமே. இரண்டுமே கதைக்கு வெளியே டூயட் பாடும் ரோல்கள் இல்லை என்பதில் அம்மணி பெருமை கொள்ளலாம். இதில் சீரியஸான சுயமரியாதை கொண்ட சயின்டிஸ்ட் கதாபாத்திரத்துக்கு வேண்டிய நியாயம் சேர்த்திருக்கிறார். லாவண்யா த்ரிபாதிக்குப் பெரிய வேலை இல்லை. க்யூட் டீச்சராக ஸ்வீட் லவ்வராக வந்து போகிறார். மிஷனில் சாதிக்க நினைக்கும் அந்த ட்வின்ஸ் கதாபாத்திரங்கள் (டபுள் ஆக்டில் சத்யதேவ் கஞ்சரனா), மகளை விட்டு நான்கு வருடங்கள் பிரிந்திருக்கும் அந்த விண்வெளி வீரர், இறுதியில் மிஷனுக்கு அவர் மகளின் பெயரையே வருண் வைக்கும் அந்தக் காட்சி எனப் படத்தில் நிறைய `வாவ்' தருணங்கள்.

பார்க்க அனுபவசாலியாக இல்லாமல் யங்காக இருக்கிறீர்களே என்ற கிண்டல் கேள்விக்கு ``வேணா, போயிட்டு 10 வருஷம் கழிச்சு வரவா?", என்று பதில் சொல்வது... ``தனியாதான் இருக்கேன். ஆனா தனிமைல இல்ல!" என்று காதலின் வலியைக் கடத்துவது... போன்ற வசனங்கள் கவனம் ஈர்த்தாலும், விண்கலத்திலிருந்து வெளியே மிஷனுக்குக் கிளம்பும் ஹீரோ ``போனு சொல்லாத, போயிட்டு வானு சொல்லு" என்ற உருகுவதும், பின்னால் வரும் அந்தத் தேவையில்லாத ரொமான்ஸ் காட்சியும் எதுக்குங்கண்ணா?

நிஜ அறிவியலைப் பேசும் அறிவியல் படங்கள் இங்கே மிகவும் குறைவுதான். இந்த வருடம் வெளியான `டிக்:டிக்:டிக்' கூடப் பல விமர்சனங்களைச் சந்தித்து. `2.0'வுக்கு எழுந்த விமர்சனங்களில் சிலவும் படம் ஸூடோ சயின்ஸைப் பேசுகிறது என்கிற தொனியிலேயே இருந்தன. #Antariksham9000KMPH படத்தை எடுத்துள்ள சங்கல்ப் சென்ற வருடம் தன் முதல் படமான `தி காஸி அட்டாக்' மூலம் கவனம் ஈர்த்தவர். நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்படும் விதம், அதன் அறிவியல் நுணுக்கங்கள் என அனைத்தையும் ஆராய்ந்து திரைக்கதை அமைத்திருந்தார். அது வெற்றியும் பெற்றது. இந்த முறை அவரிடமிருந்தே ஸ்பேஸ் த்ரில்லர் என்றவுடன் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் `காஸி'யைப் போலவே இந்தப் படத்துக்கும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.

விண்ணில் செலுத்தப்படும் சாட்டிலைட் குறித்த அறிவியல் நுணுக்கங்கள், அதில் ஏற்படும் பிரச்னைகள், இயற்பியல் விதிகள் மற்றும் இதர டெக்னிக்கல் டீடெய்லிங்ஸ் என நம்பகத்தன்மை அதிகமுள்ள ஒரு ஸ்பேஸ் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தைக் கொடுத்து இருக்கிறார். அதற்காகவே பாராட்டுகள்! ஆனால், பிரச்னை என்னவென்றால் இந்த அறிவியல் சமாசாரங்கள் அனைத்தும் எல்லோருக்கும் புரியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஒவ்வொரு பிரச்னை ஏற்படும்போதும் ஒரு சொல்யூசனை முன்வைக்கிறார்கள். இத்தகைய காட்சிகளில் ``அட, இது செம ஐடியால?" எனப் படம் பார்ப்பவர்கள் நினைக்க வேண்டும். அதில்தான் இத்தகைய த்ரில்லர் படங்களின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஆனால், இங்கே நமக்கு அந்தப் பிரச்னை என்னவென்றே விளங்க நிறைய யோசிக்க வேண்டும். தியேட்டரில் வீடியோ பாஸ் செய்யும் ஆப்ஷன் இருந்திருந்தால், நிச்சயம் பாஸ் செய்து கூகுள் செய்து விளக்கவுரை, தெளிவுரை தேடியிருப்போம்.

இதனாலேயே படத்தின் பல இடங்களில் எமோஷனலாக நம்மால் ஒன்றிப்போக முடியவில்லை. சென்டிமென்ட் காட்சிகள் இருந்துமே அதில் நம் மனம் செல்ல மறுக்கிறது. அதேபோல பதைபதைக்க வைக்கும் தருணங்களிலும் அறிவியலே தூக்கலாக இருப்பதால் நமக்கு அந்தப் படபடப்பு வருவதே கடினமான ஒன்றாகிவிடுகிறது. கொஞ்சம் எல்லோருக்கும் புரியும்படி, எல்லோரும் உள்வாங்கிக்கொள்ளும்படி விளக்கி எடுத்திருக்கலாமே டைரக்டர் சார். அதிலும் என்னதான் `இந்தியா, இந்தியா' என மிஷனில் ஹீரோ டைலாக் பேசினாலும், ஜஸ்ட் லைக்தட் விண்வெளியில் வந்த வேலையை விட்டுவிட்டு மற்றொன்றைச் செய்ய அனைவரும் முற்படுவார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதற்கு பேஸ் ஸ்டேஷனில் இருக்கும் காமேண்டர் ரகுமான் அண்டு கோவும் தலையாட்டுவது எல்லாம் தெலுங்கு மசாலா. ஆனால், அதுதான் கதைக்கரு என்றானவுடன் குறைசொல்ல ஒன்றுமில்லை.

ஸ்பேஸ் படம் என்றாலே VFX காட்சிகளையும் தராசில் வைக்க வேண்டியது அவசியமாகிறது. குறைந்த பட்ஜெட்டில் நிறைவாகவே எல்லாவற்றையும் கட்டமைத்து இருக்கிறார்கள். விண்கலக் காட்சிகளின் ஒலி அமைப்பில் மட்டும் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் ஸ்பேஸ் பயணத்தின் நம்பகத்தன்மை இன்னமும் கூடியிருக்கும். படம் 140 நிமிடமும் பரபரப்பாகத்தான் ஓடுகிறது. ஆனாலும் இது எல்லோருக்குமான சினிமாவா எனக் கேள்வி எழுப்பவேண்டிய நிலை. பி.ஹெச்.டி அளவு பிசிக்ஸ் கிளாஸை கொஞ்சமே கொஞ்சம் ஒரு டிகிரி குறைத்திருந்தால், இந்த 9000 கிமீ வேகப்பயணத்தில், அந்த விண்கலத்தில் நாமும் ஒரு சீட் போட்டிருப்போம். இப்படிக் கீழே `பேஸ் ஸ்டேஷனே போதும்பா!' என ஒதுங்கியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.