Published:Updated:

“நான் புலியா இல்லையானு நீங்கதான் சொல்லணும்!” - ‘பைசா வசூல்’ படம் எப்படி?

கார்க்கிபவா
பா.ஜான்ஸன்
“நான் புலியா இல்லையானு நீங்கதான் சொல்லணும்!” - ‘பைசா வசூல்’ படம் எப்படி?
“நான் புலியா இல்லையானு நீங்கதான் சொல்லணும்!” - ‘பைசா வசூல்’ படம் எப்படி?

“தம்பி... இதுவரைக்கும் நான் `ஜங்கிள் புக்' படம் பார்க்கலை. அதுல வர்ற புலி என்னை மாதிரியே இருக்கும்னு சொல்றாங்க. அது நிஜமா இல்லையானு நீங்கதான் சொல்லணும்."

`பைசா வசூல்' ட்ரெய்லரில் நம்ம பாலைய்யா சொன்ன வசனம் இது. பாலகிருஷ்ணா படம் என்றாலே, ரசிகர்களுக்கு தனி குஷிதான். படம் எப்படியோ, கதை இருக்கோ இல்லையோ...  படம் முழுக்க நிறைந்திருக்கும் இந்த மாதிரியான வசனங்கள், தொடை தட்டி ரயில் நிறுத்துவது, ஒரே அடியிலேயே எதிராளிகள் செட்தோசைபோல பறப்பது, துப்பாக்கியை வைத்து விமானத்தின் லேண்டிங் சக்கரத்தைத் துண்டாக்குவது என, என்டர்டெய்ன்மென்ட்டுக்குக் குறைவே இருக்காது. இந்த ஆந்திர வடைகறிக்கு இதுவரை இட்லியோ தோசையோதான் இயக்குநர்கள் தந்திருக்கிறார்கள். ஆனால், பூரிஜெகன்நாத் பீட்சா மாஸ்டர். `இந்த காம்பினேஷனே செமயா இருக்கே!' என ஆல் லாங்வேஜிலும் ஆர்வம் அதிகரித்தது. `பாலகிருஷ்ணாவின் 101-வது படம்' என்ற டைட்டிலுடன் ஆரம்பித்தது படம். 

தேசத்தையே ஆட்டிப்படைக்கும் மாஃபியா தலைவன் பாப் மார்லி (என்னடா பாப் மார்லிக்கு வந்த சோதனை!). அவனின் ஆட்டத்தை அடக்க, திணறிக்கொண்டிருக்கிறது காவல் துறை. அந்த நேரம் என்ட்ரியாகிறார் தேடா... தேடா சிங் (பாலகிருஷ்ணா). ஏரியாவில் இருப்பவர்களைக் கலவரமாக்கும் பாலகிருஷ்ணாவைக் கண்காணித்து, அவருக்கு பயம் இல்லை, எவரையும் எதிர்த்து நிற்பவர் எனத் தெரிந்துகொள்கிறது காவல்துறை. எனவே, அவரை வைத்தே பாப் மார்லியை அழிக்கத் திட்டமிடுகிறது (கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்). இதற்கிடையில் பாலகிருஷ்ணாவின் எதிர் வீட்டில் இருக்கும் ஹரிகா (முஷ்கன் சேதி), தன் அக்கா சரிகாவைக் (ஸ்ரேயா சரண்) காணவில்லை என காவல் நிலையத்துக்கு வருகிறார். இவை எல்லாம் சண்டைகளுக்கும் பாடல்களுக்கும் இடையே அவ்வப்போது வரும் சின்னச் சின்னக் காட்சிகளின் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. பாப் மார்லியை அழிக்கிறாரா தேடா சிங், ஸ்ரேயா சரண் யார் என்பதை இன்னும் சில பாடல்கள் மற்றும் சண்டைகளுக்குப் பிறகு சொல்கிறது படம். 

பாலகிருஷ்னாவுக்கு வில்லன், ஹீரோயின், காமெடியன் என்ற வித்தியாசமே கிடையாது. எல்லோருக்கும் ஒரே மாடுலேஷன், ஒரே எக்ஸ்பிரஷன். நடிப்பைப் பொறுத்தவரை... நடிப்பா? பாஸ்... இது பாலகிருஷ்ணா படம். காட்சிக்கு சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒன்றை செய்துகொண்டிருக்கிறார் (சரி, இதென்ன புதுசா). ஆனால், அவரது ட்ரேட்மார்க் ஜாலி என்டெர்டெயின்மென்ட்டும் இதில் மிஸ்ஸிங். ரகசிய போலீஸாக நடித்த கைரா தத், எதிர் வீட்டுப் பெண்ணாக நடித்த முஷ்கன், ஹீரோயினாக நடித்திருக்கும் ஸ்ரேயா என எல்லோருக்கும் நடிப்பதுபோல் நடிக்கும் பாத்திரங்கள். கூடவே வில்லன் பாப் மார்லியாக விக்ரம்ஜீத், பாலகிருஷ்ணாவுக்கு பில்டப்கொடுக்கும் கபீர் பேடி என நடித்த அத்தனை பேரும் ஒருவரோடு ஒருவர் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள், யார் சுமாராக நடிப்பது என்பதில். 

ஒரே டெம்ப்ளேட்டில் இரண்டு மீமைப் பார்த்தாலே போரடித்துவிடும் காலத்தில், போக்கிரி கதையை வைத்தே இன்னும் எத்தனை படங்கள் எடுப்பார் இந்த பூரிஜெகன்னாத்? மிகப் பழங்காலத்துக் கதையை ஒப்பேத்துவதற்கு வைத்திருக்கும் ட்விஸ்டுகளும் திரைக்கதையும் எந்தவிதத்திலும் உதவவில்லை. போர்சுக்கல் காட்சிகளிலும், அங்கு நடக்கும் சேஸிங்குகளில் மட்டும் ஃப்ரெஷ்ஷான ஃப்ரேம்கள் கொடுக்கிறார் ஒளிப்பதிவாளர் முகேஷ். 

இரண்டாம் பாகத்துக்கு லீட் எடுப்பது போன்ற க்ளைமாக்ஸ் வேறு. `அர்ஜுன் ரெட்டி', `வெள்ளிபோமாக்கே' என புது இயக்குநர்கள் தெலுங்கு சினிமாவின் வளர்ச்சியில் காட்டும் ஆர்வம், பூரிஜெகன்நாத் போன்ற அனுபவம் வாய்ந்த இயக்குநர்களுக்கும் வந்தால், தெலுங்கு சினிமாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

பாலகிருஷ்ணா இமேஜை வைத்து நைசா வசூல் செய்தால்தான் உண்டு.