Published:Updated:

ஹாய்... இது ஆண்களுக்கு அவசியம்! - மகளிர் மட்டும் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
ஹாய்... இது ஆண்களுக்கு அவசியம்! - மகளிர் மட்டும் விமர்சனம்
ஹாய்... இது ஆண்களுக்கு அவசியம்! - மகளிர் மட்டும் விமர்சனம்

`பெண்களை, தெய்வங்களாகக் கொண்டாட வேண்டாம்; மனுஷிகளாக மதியுங்கள்' என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது `மகளிர் மட்டும்'. 

கோமாதா (ஊர்வசி), ராணி அமிர்தகுமாரி (பானுப்ரியா), சுப்புலட்சுமி (சரண்யா) என மூன்று தோழிகள். 1978-ம் ஆண்டு தீபாவளியன்று பள்ளி விடுதியிலிருந்து சினிமாவுக்குப் போன காரணத்தால், பள்ளி நிர்வாகம் அவர்களை நீக்கிவிடுகிறது. அதற்குப் பிறகு, 30 ஆண்டுகாலம் அவர்களுக்குள் எந்தத் தொடர்புமில்லை. கோமாதாவின் மகனைக் காதலிக்கும் பிரபா (ஜோதிகா), ஓர் ஆவணப்பட இயக்குநர். பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளில் ஆர்வம்கொண்ட முற்போக்காளர். 

பிரிந்த மூன்று தோழிகளையும் சந்திக்கவைத்து, ஒரு பயணத்துக்கும் ஏற்பாடு செய்கிறார் பிரபா. மீண்டும் சந்திக்கும் மூன்று தோழிகளின் கொண்டாட்டங்களும், பழைய நினைவுகளை மீட்டெடுத்தலும், வாழ்வில் நிகழும் மாற்றங்களுமாக நீள்கிறது இந்த ‘மகளிர் மட்டும்’ பயணம். 

அலுத்துப்போன ஆணாதிக்க நச்சுக் கருத்துகளால் மூச்சு முட்டும் தமிழ் சினிமாவில், பெண்களின் சுயம் குறித்தத் தேடலாகக் கதையை உருவாக்கியதற்கும், சமகாலக் கொடூரச் சம்பவத்தின் பின்னணியில் சாதியம் குறித்த விமர்சனத்தை வைத்ததற்கும் வாழ்த்துகள் இயக்குநர் பிரம்மா!

“கல்யாணம்கிறது ஒரு மாயாஜால ஜெயில். எட்டி உதைக்கணும். உதைக்கிற உதையில ஒண்ணு திறக்கணும்; இல்லை ஜெயில் கதவு உடையணும்”, “யார் கேட்டாலும் சும்மா வீட்டுல இருக்கானு சொல்றியே... நாங்க வீட்டைக் கவனிச்சுக்கிறதுக்கு நீ என்ன சம்பளமா குடுக்கிற?”, “நடுராத்திரி ரோட்ல தனியா பாதுகாப்பா போறதில்லை சுதந்திரம். மனசுக்குப் பிடிச்சதைச் செய்யணும். பிடிச்சவனோட மட்டும்தான் வாழணும். இதுதான் சுதந்திரம்” என்ற அடர்த்தியான வசனங்கள், ஆணாதிக்கத்தின் வேர்களை ஆழமாகவும் அகலமாகவும் அலசுகின்றன.

ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, ஜோதிகா ஆகியோரைச் சுற்றியே நகரும் கதைக்கு, நால்வரும் சரியான நியாயம் செய்திருக்கிறார்கள். மகன் செல்லும் விமானம் டேக் ஆஃப் ஆகையில் டாட்டா காட்டிவிட்டு கண் கலங்குவது, ட்யூஷன் மாணவர்களைச் சமாளிப்பது, ஜோதிகாவின் திடீர் திட்டங்களுக்கெல்லாம் கொடுக்கும் முகபாவங்கள் என வழக்கம்போல் அசத்தல் ஊர்வசி. சில இடங்களில் மிகையான நடிப்பு வெளிப்பட்டாலும், தோழிகள் பற்றி பேசும் ஒவ்வொரு காட்சியிலும் முகத்தில் கொண்டுவரும் குழந்தையின் பூரிப்பு அட்டகாசம். கணவருக்குப் பயந்து நடுங்கும் பானுப்ரியா, குடித்துவிட்டு வரும் கணவரையும், திட்டித்தீர்க்கும் மாமியாரையும் இறுக்கமான முகத்துடன் எதிர்கொண்டு சிரித்த முகத்துடன் அழகுக் குறிப்பு நிகழ்ச்சிக்கு நிற்கும் சரண்யா என வெவ்வேறு வகையான குடும்பப் பெண்களை கண்முன் நிறுத்துகிறார்கள்.

இவர்களுக்கு அப்படியே நேர்மாறாக, எந்தக் குழப்பமும் இல்லாத சுதந்திரமான பெண்ணாக ஜோதிகா. தோழிகளைச் சந்திக்கவைக்க அவர் போடும் திட்டங்கள், ஒவ்வொருவரை கையாளும்விதம், குழப்பத்தில் இருக்கும் மூவருக்கு வழங்கும் ஆலோசனைகளுமாக அவரின் கதாபாத்திர வடிவமைப்பு அழகு. ‘மொழி’, ‘36 வயதினிலே' வரிசையில் ஜோதிகாவுக்கு மிகவும் முக்கியமான படம் ‘மகளிர் மட்டும்’.

முக்கியக் கதாபாத்திரங்கள் தவிர, துணை கதாபாத்திரமாக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன் நடிப்பில் அத்தனை இயல்பு. ஜாம் பாட்டிலில் இருக்கும் மதுவைக் குடித்துவிட்டு கிட்டார் வாசித்துக்கொண்டு `மீனம்மா மீனம்மா...' எனப் பாடுவது ரணகள ரகளை. முரட்டுத்தனமான ஆளாக வரும் பாவேல் கதாபாத்திரத்தின் நடிப்பும் உடல்மொழியும் கவனிக்கவைக்கிறது. பள்ளி வயது பானுப்ரியாவாகவும் பானுப்ரியாவின் மகளாகவும் நடித்திருக்கும் ஷோபனா நல்ல அறிமுகம். ஃப்ளாஷ்பேக்கில் பெரிய கண்களை இன்னும் பெரிதாக்கி மிரட்டுவதும், நிகழ்காலத்தில் பயந்து நடுங்கும் மகளாகவும் நன்றாக நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய `மகளிர் மட்டும்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக மிரட்டியிருந்த நாசருக்கு, இந்தப் படத்தில் அவ்வளவு வேலையில்லை.

நான்கு பெண்களும் செல்லும் பயணம், பன்ச் பேக்கை வைத்து தங்களின் கோபங்களை வெளிக்காட்டும் இடம், மூவரின் காதல் கதையையும் குட்டிக் குட்டி பாடல்களாகக் காட்டியது எனப் படத்தில் நிறைய சுவாரஸ்யத் தருணங்கள். சிறப்புத் தோற்றத்தில் வரும் ‘அந்த’ நடிகர் வந்ததும் படத்தின் ஃப்ளேவர் இன்னும் சிறப்பாக மாறுவதும், மூவரையும் சந்திக்கவைத்ததற்கான காரணத்தைச் சொல்லும் இடமும் சிறப்பு.

ஜிப்ரான் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் மிக அழகு. காந்தாரி யாரோ, மூவரின் காதல் ஃப்ளாஷ்பேக்குக்கு வரும் பாடலும் படத்துக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது. வெல்டன் ஜிப்ரான். ஃபீல் குட் படத்துக்குத் தகுந்த ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் மணிகண்டன். ஃப்ளாஷ்பேக்கில் 1970-களின் உணர்வைக் கொடுப்பதற்குத் தந்திருக்கும் நிறமும், நிகழ்காலத்துக்கு ஏற்ற மாதிரி கலர் ஃபுல்லான காட்சியமைப்புகளும் என நிறைவாக உழைத்திருக்கிறார். 

படத்தின் தலைப்புபோலவே படத்தில் நிறைய `மகளிர் மட்டும்' வகை வசனங்கள் உண்டு. சில நேரம் அது காட்சியோடு ஒன்றியிருக்கிறது. பல நேரங்களில் கதைக்கு வெளியே இருப்பதால் உறுத்தலாக இருக்கிறது. குறிப்பாக, மலைவாழ் மக்களின் திருமணக் காட்சியும், அதைத் தொடர்ந்து வரும் சில வசனங்களும் படத்துடன் சேராமல் தனித்து நிற்கின்றன. குறிப்பிட்ட ஒரு காட்சியில் சில மாற்றங்கள் நடப்பது பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தாலும், அது எப்படி ஸ்விட்ச் போட்டது மாதிரி சடசடவென இது நடக்கிறது என்ற எண்ணம் வருகிறது. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் ஆண்கள் சடசடவெனத் திருந்துவதில் நாடகத்தனம் கொஞ்சம் அதிகம்.

இப்படி சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும், பெண்களுக்கான உணர்வுகளை அரசியல் தெளிவோடு பேசியிருப்பதும் ஆணவக்கொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த வகையில் ‘மகளிர் மட்டும்’ படத்தை மனம்திறந்து பாராட்டலாம்.