Published:Updated:

கோர்ட், கேஸ், சர்ச்சைகளை தாண்டி திலீப் எப்படி தப்பிக்கிறார்? ‘ராமலீலா’ படம் எப்படி?

பா.ஜான்ஸன்

ரிவெஞ்ச்-பொலிட்டிகல்-காமெடி படமாக களமிறங்கியிருக்கிறது ‘ராமலீலா’. சர்ச்சைகள், சிறை தண்டனை... இப்படி திலீப் சந்தித்த பல பிரச்னைகளால் தாமதமான ‘ராமலீலா’ இந்த வாரம் வெளியாகிவிட்டது. 

முன்னாள் எம்.எல்.ஏ ராமன்உன்னி (திலீப்) தந்தையின் மறைவிற்குப் பிறகு, தான் இருந்த கட்சியிலிருந்து விலகி, எதிர் கட்சியில் இணைகிறார்.  இதனால் தனக்கு ஏதாவது ஆபத்து வர நேரும் என்பதால் தற்காப்பிற்காக துப்பாக்கி பெற்றுக் கொள்கிறார். அந்த கட்சியின் சார்பாக இடைத் தேர்தலில் எம்.எல்.ஏ பதவிக்கு திலீபை நிறுத்த முடிவு செய்கிறார் கட்சியின் தலைவர். ஆனால், சென்றமுறை அதே தொகுதியில் போட்டியிட்டு திலீபிடம் தோற்றுப்போன உதயபானு (சித்திக்) திலீபை சரியான நேரம் பார்த்து அழிக்க திட்டமிடுகிறார்.

கூடவே திலீப்புக்கும், அவரது பழைய கட்சிக்காரர் மோகனுக்கும் (விஜயராகவன்) இடையில் முட்டல் மோதலும் நடந்து வருகிறது. அதனாலேயே திலீபின் அம்மா ராகிணியை (ராதிகா) திலீப்புக்கு எதிராக தேர்தலில் நிறுத்துகிறார் மோகன். இதனிடையில் ஒரு கால்பந்து மைதானத்தில் மோகன் சுட்டு கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலைப்பழி திலீபின் மேல் விழுகிறது. சுட்டது யார்? என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பும் காமெடியும் கலந்து சொல்கிறது படம்.

`வெள்ளிமூங்கா' போன்று இதே பொலிடிகல் ஜானர் படம் இதற்கு முன்பு நிறைய வந்திருந்தாலும், அந்த படங்களை எங்கும் நினைவுபடுத்தாதபடி, ஸ்க்ரிப்ட்டில் முழுக்கவனம் செலுத்தியிருக்கிறார் எழுத்தாளர் சச்சிதானந்தன். எழுத்தில் உள்ள பரபரப்பை படத்திலும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் அருண் கோபி. 

ராமன்உன்னியாக திலீப் பக்கா பொருத்தம். ஒவ்வொரு காட்சியையும் தான் வெளிப்படுத்தும் ரியாக்‌ஷன்களுக்கு ஏற்ப காமெடியாகவோ, பகையாகவோ, சண்டைக் களமாகவோ சுலபமாக மாற்றிவிடுகிறார். படத்தின் ஆரம்பத்தில் படு சீரியஸாக வரும் திலீப்பை பார்த்து, படம் முழுக்க இப்படியே போய்விடுமோ என நினைக்கையில் கலாபவன் ஷாஜோன் உடன் இணைந்து செய்யும் காமெடிகள் எல்லாம் அல்டிமேட்.

சித்திக், விஜயராகவன் இருவருக்கும் பிரதான எதிர்மறை கதாபாத்திரங்கள். படம் முழுக்க கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு, சதி திட்டங்கள் தீட்டுவது, பத்திரிகையாளர்கள் முன், "நாங்க பிறந்ததே இந்த உலகத்தைக் காப்பாத்ததான்" என்று நடித்து ஏமாற்றுவது என நிறைவாக செய்திருக்கிறார்கள். மற்ற உறுதுணைக் கதாபாத்திரங்களாக வரும் பிரயாகா மார்டின், ராதிகா, முகேஷ், சுரேஷ் கிருஷ்ணா, ரெஞ்சி பணிக்கர், லீனா ஆகியோர் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

படத்தில் திலீபுக்கு அடுத்து நம்மை கவனிக்கச் செய்வது, திலீபின் உதவியாளராக தாமஸ் சாக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலாபவன் ஷாஜோன். குடித்துவிட்டு இவர் செய்யும் அலப்பரைகள், திலீப்பிடம் செம்ம அடி வாங்கி கதறுவது என படத்தின் காமெடி காட்சிகளுக்கு ஒற்றை ஆளாக "நான் கேரண்டி" என்று தம்ப்ஸ் அப் காட்டுகிறார். 

"இது அரசியல். இங்க, மனசில் உள்ளது எல்லாம் முகத்தில் காட்டணும்னு அவசியம் இல்ல. ஆனா, மனசில் இல்லாத நிறைய விஷயத்தை முகத்தில் காட்டணும்" என சில இடங்களில் கூர்மையான வசனங்களும் கவனிக்க வைக்கிறது. சஸ்பென்ஸைத் தக்கவைக்க திருப்பங்களும், நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் நடிப்பும் நிறையவே உதவுகிறது.

படத்தின் முடிவில் உடையும் அந்த ட்விஸ்ட் `அட' போட வைத்தாலும், இதுக்குத்தானா என சலிப்பையும் கொடுக்கிறது. கொலை நடப்பதற்கு முன்புவரை சுவாரஸ்யத்துடன் நகரும் கதை, அதன்பின் அந்த சுவாரஸ்யங்கள் குறைந்து மெதுவாக நகரத் துவங்குகிறது. பிக்பாஸ் இன்ஸ்பிரேஷன் போல அப்படி ஒரு செட்டப்பை படத்தில் வைத்தது நல்ல ஐடியா. ஆனால், இவ்வளவு எளிமையாக எல்லாம் நடந்துவிடுமா என்ன?

அவ்வளவு பெரிய அரசியல் சதுரங்கத்தில் செக்மேட் வைக்க திலீபின் இத்தனை பலவீனமான ஐடியா உதவுகிறது என்பது காதுல சுற்றப்படும் டிஜிட்டல் பூ. முக்கியமில்லாத சில காட்சிகள்கூட வைத்து இழுக்கப்பட்டிருக்கிறது. இரண்டரை மணிநேரத்துக்கும் அதிகமாக நீள்கிறது படம். இத்தனைக்கும் படத்தில் ஒரே ஒரு மான்டேஜ் பாடல்தான். பின்னணி இசையில் பல இடங்களில் மாஸ் ஏற்றுகிறது கோபி சுந்தரின் இசை. படம் முழுக்கவே சீரியஸ் டோனை படரவிட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார். 

கோர்ட், கேஸ், சர்ச்சைகள் அனைத்தையும் தாண்டி எப்படி திலீப் தப்பிக்கிறார் என்கிற ரீல், ரியல் இரண்டுக்கும் பொருந்தும்படியான கதை என்பதால், திலீபின் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக இருக்கும். சினிமா விரும்பிகளுக்கு ஜாலியான டைம்பாஸ் சினிமாவாக நிற்கும் இந்த ராமலீலா.