Published:Updated:

பார்வதியின் முதல் பாலிவுட் படம் ஈர்க்கிறதா? - `கரிப் கரிப் சிங்கிள்' படம் எப்படி?

பா.ஜான்ஸன்
பார்வதியின் முதல் பாலிவுட் படம் ஈர்க்கிறதா? - `கரிப் கரிப் சிங்கிள்' படம் எப்படி?
பார்வதியின் முதல் பாலிவுட் படம் ஈர்க்கிறதா? - `கரிப் கரிப் சிங்கிள்' படம் எப்படி?

ஒருவருக்கொருவர் எதிர் எதிர் குணங்கள் கொண்ட ஜோடி எதிர்பாராத பயணத்தில் இணைந்தால் எப்படி இருக்கும்? என காமெடி கலந்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் தனுஜா சந்திரா. 

காதல் கதை, அதுவும் பாலிவுட் பார்க்காத டைப்பில் காதல் கதை வேற்று கிரகத்தில் கூட கிடைக்காது. ஆனால், இந்த இருவருக்குமான கதையில் காதல் வேறு. இருவருக்குள்ளும் சில சிக்கல்கள், ரகசியங்கள், பழைய காதலின் மிச்சம் எல்லாம் உண்டு. கூடவே வெளியில் இர்ஃபான் மீது இருக்கும் ஈர்ப்பைக் காட்டிக் கொள்ள மறுக்கும் பார்வதி, பார்வதியைக் கவர இர்ஃபான் செய்யும் செயல்கள், அடிக்கும் ஜோக்குகள், சில சொதப்பல்கள் என இரண்டு சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களுடன் ஒரு பயணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் இயக்குநர் தனுஜா சந்திரா. கணவரை இழந்த ஜெயா (பார்வதி),  ஜாலி, கலாய் என ரகளையாக வாழும் யோகி (இர்ஃபான் கான்) இருவரையும் இணைக்கிறது `அப் தக் சிங்கிள்' டேட்டிங் வெப் சைட். பார்வதியுடன் நண்பராக இர்ஃபான் செய்யும் வேலைகள், இர்ஃபானின் செயல்களால் எரிச்சலாகும் பார்வதி, இதனுடன் எதிர்பாராமல் நிகழும் ஒரு பயணம் இந்த இரண்டு சிங்கிள்களுக்குள் என்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதுதான் `கரிப் கரிப் சிங்கிள்'.

பார்வதிக்கு இது பாலிவுட்டில் அறிமுகப்படம். `டேக் ஆஃப்' படத்திற்குப் பிறகான இடைவெளிக்கு நியாயம் செய்வது போன்ற ஒரு நடிப்பு. தான் நடித்திருக்கும் ஜெயா கதாபாத்திரத்துக்கான எல்லா நியாயங்களையும் செய்திருக்கிறார். அலுவலகத்தில் டேட்டிங் வெப் சைட் பார்க்கும் உதவியாளரிடம் சிடுசிடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்து அதே வெப் சைட்டில் தனக்கொரு அக்கவுண்ட் உருவாக்கி யாராவது மெசேஜ் அனுப்புவார்களா எனக் காத்திருப்பது, இர்ஃபான் கானை டீல் செய்வது, போதையில் ரகளை செய்வது, "வேக... எறங்கு எறங்கு கழுதே" வரை ஒவ்வொரு செய்கையும், முகத்தில் காண்பிக்கும் உணர்வுகளும் என அசத்துகிறார் பார்வதி. வழக்கமாக மெய்ன் கதாபாத்திரத்தை பளிச் எனக் காட்ட செய்யப்படும் ஜிகினா வேலைகளும் இதில் கிடையாது. அந்த ஜெயா கதாபாத்திரம் பார்வையாளர்களால் மிக நெருக்கமாக உணர வைக்க செய்திருந்த விதம் நன்று. மிக சாதாரணமாக தட்டி விளையாடும் ரோல்தான் இர்ஃபானுக்கு. மனம் போகும் போக்கில் செல்லும் கேர்ஃப்ரீ டைப் `யோகி'யாக கவர்கிறார். தனது காதலிகளை சந்திக்க செல்லும் பயணம், அங்கு பார்வதி செய்யும் அலப்பரைகளை கட்டுப்படுத்திக் கொண்டே பேசுவது, பார்வதிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக கொடுக்கும் சமோசா என அவரது கதாபாத்திரம் படத்தின் சிரிப்பு காட்சிகளுக்கு சிறப்பாக உதவுகிறது. 

பார்வதி - இர்ஃபானுக்கு இடையில் நடக்கும் உரையாடலோ, சண்டையோ, கவிதையோ அத்தனையும் ரசிக்கும் படி அமைந்திருப்பது, படத்தின் பலம். இர்ஃபான் பார்வதியுடன் இணைந்து கொள்ள தயாராக இருப்பது, ஆனால் பார்வதி தயக்கத்திலேயே இருப்பதுமான கான்ட்ராஸ்டை காட்டிய அழகு. கூடவே எங்கேயும் தலையை சொரிந்து கொண்டு மொபைலைப் பார்க்க வைக்கும் படி இல்லாமல், சுவாரஸ்யமாகவே கதை நகர்த்திய விதமும், அதற்காக உள்ளே வைத்திருந்த விஷயங்களும் கூடுதல் பலம். நரைனின் ஒளிப்பதிவில் பல காட்சிகள் அழகு. விமானம், ரயில், கார் என மாறிக் கொண்டே இருக்கும் பயணத்தில் நம்மையும் அழைத்துச் செல்கிறார். பார்வதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திர டீட்டெய்லிங், இர்ஃபான்னின் யோகி பாத்திரத்தில் குறைவு. கடைசி வரை அவர் யார் எங்கிருந்து வந்தார் என முழுமை கிடையாது. அதனாலோ என்னவோ படத்தில் காட்ட முயற்சிக்கும் சில உணர்வுகள் பார்வையாளர்களுக்கு கனெக்ட்டாகாமல் இருக்கிறது. 

சுவாரஸ்யமான களம் போல, அழுத்தமான உணர்வுகளையும் சேர்த்திருந்தால், மறக்க முடியாத பயணமாகியிருக்கும் `கரிப் கரிப் சிங்கிள்'.