Published:Updated:

டுட்டுடு... டுட்டுடு... டுட்டுடுடுடுடு..! - ‘சென்னை டு சிங்கப்பூர்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
டுட்டுடு... டுட்டுடு... டுட்டுடுடுடுடு..! - ‘சென்னை டு சிங்கப்பூர்’ விமர்சனம்
டுட்டுடு... டுட்டுடு... டுட்டுடுடுடுடு..! - ‘சென்னை டு சிங்கப்பூர்’ விமர்சனம்

ஹீரோவின், சினிமா கனவு டூ சிங்கப்பூர், சிங்கப்பூர் டூ காதல், காதல் டூ கொள்ளை... எனப் பல டூ... டூ... டுட்டுடூக்களைச் சொல்கிறது ‘சென்னை டு சிங்கப்பூர்’.கவுண்டமணி சொல்வதுபோல் டு இண்ட் டு, டுட்டுடுடுடுடு.

சினிமா இயக்குநர் ஆகும் முயற்சியில் இருப்பவர் ஹரீஷ் (கோகுல் ஆனந்த்). ஒருதயாரிப்பாளரை நம்பி ஏமாந்து போய் நம்பிக்கை இழந்து நிற்கும்போது, நண்பர் மூலம் சிங்கப்பூர் தயாரிப்பாளர் கிடைக்கிறார். அவரைச் சந்திக்க சிங்கப்பூர் போக அங்கேயும் ஏமாற்றம். தான் கொண்டுவந்த பணம் மற்றும் பாஸ்போர்டை இழந்து நிற்கும் போது வானம்பாடியை (ராஜேஷ் பாலசந்திரன்) சந்திக்கிறார். ஹரீஷின் நிலையைக் கேட்டு அவரின் சினிமாக் கனவை நிறைவேற்ற சிங்கப்பூரில் இருக்கும் இன்னொரு தயாரிப்பாளரான ஷிவ் கேசவை அறிமுகப்படுத்துகிறார் வானம்பாடி. பாஸ்போர்ட்டுக்காக ஹைகமிஷன் செல்லும் இடத்தில் ரோஷினியை (அஞ்சு குரியன்) பார்த்ததும் காதல்வருகிறது. சினிமா ஒரு பக்கம், காதல் ஒரு பக்கம் என ஓடும் போது பிரச்னை ஒன்றில்மாட்டிக் கொள்கிறார். அது என்ன பிரச்னை, சினிமா கனவு ஆகிறது, காதல் கைகூடுகிறதா இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம்.

டார்க் ஹூமர் ஜானரில் காதல், ஆக்‌ஷன் கலந்து கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் அப்பாஸ் அக்பர். ஆனால், காமெடி ரொம்ப டார்க்காகிவிட்டதால் நமக்கு ஒன்னும் புரியாமல் மலங்க மலங்க முழிக்க வேண்டியதாய் இருக்கிறது.

ஹரீஷ் கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் கோகுல் ஆனந்துக்குப் பெரிய வாய்ப்பு. முடிந்த வரை படத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார். கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடியாக இருப்பதால் டயர்டாகி புலம்புவதும், அஞ்சுகுரியனுக்கு ஆறுதல் சொல்ல நினைத்து சொதப்பலாக பிலாசபி பேசுவது, ஆக்‌ஷன் எல்லாத்திலும் நல்ல நடிப்பையே வெளிப்படுத்துகிறார். அஞ்சு குரியனுக்குப் பெரிய கதாபாத்திரம் இல்லை என்பதால் பாடல்கள், சில காட்சிகள் வந்துவிட்டு நம்மை க்ளைமாக்ஸில் சந்திக்கிறார். இரண்டு மூன்று இடங்களில் மட்டும் சிரிக்கவைக்கிறார் ராஜேஷ். ஆனால், காமெடியில் புகுந்து விளையாடி, அடித்து நொறுக்க வேண்டிய வாய்ப்பு அவருக்கு. ஆனால், அதை லெஃப்ட் காலால் எட்டி உதைத்துவிட்டு, கத்திக் கத்தி டயலாக் பேசி வெறுப்பாக்குகிறார்.

ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு, கொழ கொழவென தமிழ்ப் பேசிய படி வருகிறார் ஷிவ் கேசவ். அதை இயக்குநர் கவனித்துவிட்டு பகுதி நேரமாக, ஆஆஆஆ... ஊஊஊஊஊ எனக் கத்திவிட்டு தமிழ்ப் பழக வைத்திருக்கிறார், அதையும் படத்தில் இணைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. வில்லனா, காமெடியனா, கேரக்டர் ஆர்டிஸ்ட்டா என அவரும் குழம்பி நம்மையும் குழப்பும் வேடம் எம்ஸி ஜெஸுக்கு. இப்படி படத்தில் இருக்கும் எல்லா கதாபாத்திரங்களையும் எப்படி மோசமாக கையாள வேண்டுமோ அப்படியே செய்திருக்கிறார் இயக்குநர்.

ஹீரோவின் அலாரம் கான்செப்ட், காட்டுக்கு நடுவே செக்மேட்டின் கெஸ்ட்ஹவுஸ் போல கலை இயக்கத்தில் சுவாரஸ்யமான ஐடியாக்களைக் கொடுத்திருக்கிறார் செந்தில் ராகவன். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு சிங்கப்பூரின் புதிய லொக்கேஷன்களை அள்ளி வந்திருக்கிறது. கூடவே வாடி வாடி பாடலில் ரிச்னெஸ் சேர்த்திருக்கிறது. அலாரமாக, ஹீரோ காதலியின் வீட்டில் செட் செய்யும் அந்தக் காட்சி அழகு. ஆனால், தன் வீட்டில் இப்படி தினமும் செட் செய்வதெல்லாம்... தொலைந்த பாஸ்போர்ட் திரும்பக் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் கண்காணிப்பிலேயே இருப்பார். ஆனால், ஹீரோ என்னவோ துப்பாக்கி, கொள்ளை எனச் சுற்றிக் கொண்டிருக்கிறார். படம் தொடங்கியதிலிருந்து முடிவு வரை ஒவ்வொரு கதாபாத்திரங்களாக அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறார்கள். எங்கே ரோலிங் க்ரெடிட்ஸ் முடிந்த பின்பும், "இவரை பத்தி சொல்ல மறந்துட்டோம்" எனப் படம் நீளுமோ என்ற பயமே வந்துவிட்டது. காமெடி என்கிற பெயரில் குறைந்த பட்ச லாஜிக் கூட இல்லாமல் நகரும் காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை வெகுவாக சோதிக்கிறது. 

“வாழ்க்கைக்கு தேவை நம்பிக்கை இல்ல, தன்னம்பிக்கை. மத்தவங்கள நம்பாத உன்ன முதல்ல நம்பு", வானம்பாடி சொல்லும் சில மோட்டிவேஷன் என ஒன் லைனர்களாக படத்தில் வரும் வசனங்கள் அவ்வளவு யதார்த்தம். ஆனால், அதற்கும் படத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதுதான் பெருஞ்சோகம். அதே போல சில காட்சிகளும் நன்றாக இருக்கின்றன. ஆனால், மொத்த படத்தில் ரெண்டு மூன்று நல்ல காட்சிகள் மட்டும் இருப்பது எந்த விதத்தில் படத்துக்கு உதவும்?. கூடவே ஷிவ் கேசவை, பின்னால் துப்பாக்கிவைத்து மிரட்டும் அருவருப்பான காட்சிகள் எல்லாம் வரும்போது முன்னால் பார்த்த சிற்சில நல்ல காட்சிகளும் மறந்து போய்விடுகின்றன. ஜிப்ரான் இசையில் வாடி வாடி, ரோ ரோ ரோஷினி பாடல்கள் தரம். ஆனால், படம் முழுக்க நிறைந்திருக்கும் பின்னணி இசை கொஞ்சம் டயர்ட் ஆக்குகிறது. படம் எதை நோக்கிப் போகிறது, சினிமா, காதல், கொள்ளை என ஹீரோவின் இலக்கை மாற்றிக் கொண்டே இருப்பதால் என்ன சொல்ல வர்றாங்க என்கிற குழப்பம் சுழற்றியடிக்கிறது. 

கதை, திரைக்கதை, ஏன் ஷிவ் கேஷவையே ஐட்டம் சாங் எழுதும் பாடலாசிரிய சுவாமிகளாகவும் நடிக்க வைத்தார்கள் எனப் பல புரியாத விஷயங்கள் படத்தில் இருந்தாலும் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது. வானம்பாடி, ஹரீஷுக்கு ஆறுதல் சொல்லும் போது, "இந்த உலகத்தில் நம்மள விட கஷ்டப்படறவங்க இருக்காங்க" என்பார். அது ஹரீஷுக்கு மட்டுமல்ல.