Published:Updated:

ஹேஹேய்... நல்லா இருக்கே..! - நிமிர் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
ஹேஹேய்... நல்லா இருக்கே..! - நிமிர் விமர்சனம்
ஹேஹேய்... நல்லா இருக்கே..! - நிமிர் விமர்சனம்

தமிழ் சினிமாவில் கொட்டிக்கிடக்கும் ’பழிவாங்கல்’ கதைகளின் வெர்ஷன் 2.0 இந்த ‘நிமிர்’.

நேஷனல் ஸ்டுடியோ வைத்திருக்கும் செல்வம் (உதயநிதி), தான் உண்டு... தான் வேலை உண்டு என்று வாழ்பவர். எதிர்பாராத விதமாக சந்தையில் நடக்கும் ஒரு சண்டையில் வெள்ளையப்பனிடம் (சமுத்திரக்கனி) அடிவாங்கும் செல்வம், அவரை திரும்ப அடிக்கும் வரை செருப்பு போடுவது இல்லை என சபதம் எடுக்கிறார். செல்வத்தின் சபதம் என்ன ஆனது என்பதே ‘நிமிர்’.

மலையாளத்தின் திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்  நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் தமிழ் ரீமேக்கே நிமிர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களுடன் நிமிர் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன். ஆனால் மாற்றங்கள் அனைத்தும் ஏமாற்றமாகவே இருக்கிறது. ரீமேக் செய்ய மலையாள படத்தை தேர்ந்தெடுத்த இயக்குநர் தேர்ந்தெடுத்திருக்கும் லொகேஷனும், சில நடிகர்,நடிகைகளும் மலையாளப் படங்களின் சாயலிலே இருக்கிறார்கள். சமயங்களில் உதயநிதி தான் மலையாள படத்தில் நடிக்கிறாரோ என தோன்றும் அளவுக்கு நடிகர்களும் , கதைக்களமும் 'சாரே' என்கிறது. ஆனால், இந்த குறைகள் எல்லாம் மகேஷிண்டே பிரதிகாரம் படத்தைப் பார்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அந்தப் படத்தைப் பார்க்காதவர்களுக்கு நிச்சயம் நிமிர் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.

5 பாடல்கள், காமெடி, ஆக்ஷன் என இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு  மனிதன் படத்துக்குப் பின் நிமிர்ந்து நிற்க அட்டகாசமான கதாப்பாத்திரம். தனது பள்ளிப் பருவத்து காதலிக்கு மசால் வடை வாங்கிக் கொடுத்து காதலிக்கும் தருணம், ’போட்டோகிராபினா இதுதான்’ என உணர்ந்து அதற்காக தன்னை மாற்றிக்கொள்ளும் இடம், பலர் முன் அவமானப்படும் போது காட்டும் முகபாவனை என பல இடங்களில் நெருடல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

காதலனிடம் இருந்து மசால் வடையை வாங்கிக்கொண்டு அவனுக்கு அல்வாவை கொடுக்கும் கதாபாத்திரம் பார்வதி நாயருக்கு. தனக்கு கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். மலராக வந்து மனதை வருடும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நமிதா ப்ரமோத். அவர் கொடுக்கும் சில க்யூட் ரியாக்‌ஷன்களுக்கே இன்னும் பல தமிழ்ப்படங்கள் கமிட்டாவார் என்பது தெரிகிறது. கேரளத்தில் இருந்து இன்னொரு கீர்த்தி சுரேஷ் இறக்குமதி.

உங்க மண்டைக்குள்ள ஏதோ பறக்குதாமே?" "ஆமா, பறக்குதான்னு பார்க்க போயிருந்தேன்" , கேமராவ பத்தி யாரும் கத்துக்கொடுக்க முடியாது ஆனா, நாம கத்துக்கலாம் என மகேந்திரன் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் பளிச்சிடுகிறார். இனி யதார்த்தமான முதியவர் கதாப்பாத்திரத்துக்கு பெர்ஃப்க்ட் சாய்ஸ் மகேந்திரன் தான். 

இவர்களைத் தவிர சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், துளசி, சண்முகராஜன், கஞ்சா கருப்பு என பலர் நடித்துள்ளனர். நேஷனல் செல்வத்தின் அப்பா நேஷனல் சண்முகம் கதாபாத்திரத்தில் வரும் இயக்குநர் மகேந்திரனும், ’சதா’வாக எம்.எஸ்.பாஸ்கரும்  பக்காவாக பொருந்திருக்கிறார்கள். கருணாகரனின் நடிப்பு அந்த ஒரு முக்கியமான காட்சியைத் தவிர மற்ற இடங்களில் இயல்பாகவே இருக்கிறது.படத்தின் வசனம் எழுதிய சமுத்திரக்கனிக்கு படம் முழுக்க சிரிக்கும் கதாப்பாத்திரம் மட்டுமே. ஆனால், அதிலேயே எதிராளியை நிலைகுலைய செய்துவிடுகிறார்.  வசனங்கள் டைமிங் காமெடியில் சிரிக்க வைத்ததோடு இல்லாமல் சில இடங்களில் அரசியலும் பேசியது. முதல் காதலியின் கணவரை வைத்து செய்யப்படும் காட்சி டிப்பிக்கல் பிரியதர்ஷன் ஸ்டைல். மாறுங்க ப்ரியதர்ஷன். காமெடி நடிகர்களை வைத்து சீரியஸ் காட்சிகள் முயன்றிருப்பது சற்றே பொருந்தாமல் போகிறது. அதை ஈடுசெய்ய சீனியர் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர்,சண்முகராஜன்,சமுத்திரகனி போராட வேண்டியதிருக்கிறது. நம்மூர்ல யாருடா இப்படி பொறுமையா பழிவாங்குவாங்க என யோசிக்க வைப்பது மட்டும் தான், படத்தை நம்மிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. மலையாள படத்தின் ரீமேக் என்பதாலோ, காட்சிகளில் அத்தனை குளுமை. அதை அப்படியே படம்பிடித்திருக்கிறது ஏகாம்பரத்தின் கேமரா. பாடல்களுக்கு தர்புகா சிவாவும், அஜனேஷ் லோக்நாத்தும் பின்னணி இசைக்கு ரோனி ரபேலும் அலட்டல் இல்லாத இசையை கொடுத்துள்ளனர். டெக்னிக்கல் லெவலில் படு பலமாக இருக்கிறது நிமிர்.

ரீமேக் என்றாலும் பல இடங்களில் ஒரிஜினலில் இருந்து அப்படியே தமிழுக்கு மாற்றம் செய்திருப்பது சற்று நெருடல். உதாரணத்துக்கு ஒரிஜினலில் மோகன் லால், மம்முட்டி என்றால், தமிழில் ரஜினி, கமல். அவ்வளவே. அச்சு அசலாக டிட்டோ அடிக்காமல் சில சுவாரஸ்யங்களை செய்திருந்தால் நிமிர் இன்னும் நிமிர்ந்திருப்பான்.