Published:Updated:

''தமிழ்நாட்டுப் போலீஸை மலையாளத்தில் கெத்தாக் காட்டியிருக்கிறார்கள்!’’ - `விகடகுமாரன்' படம் எப்படி?

தார்மிக் லீ

மலையாளத்தில் வெளியாகியிருக்கும் ‘விகடகுமாரன்’ படத்தின் விமர்சனம்...

''தமிழ்நாட்டுப் போலீஸை மலையாளத்தில் கெத்தாக் காட்டியிருக்கிறார்கள்!’’ - `விகடகுமாரன்' படம் எப்படி?
''தமிழ்நாட்டுப் போலீஸை மலையாளத்தில் கெத்தாக் காட்டியிருக்கிறார்கள்!’’ - `விகடகுமாரன்' படம் எப்படி?

தமிழ்நாடு - கேரளா எல்லையில் ஒரு மைனர் பெண்ணுக்கு நடக்கும் கோர சம்பவம், கேரளாவைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நேர்மையான முதியவரைக் கொன்ற வழக்கு, அதே கிராமத்தில் புகழ்பெற்ற ஒரு நடிகையின் தற்கொலைக்கான காரணம்... இந்த மூன்று அநீதிகளையும் முடிச்சுப்போட்டு, இறுதியில் கிடைக்கும் அந்த நீதியே இந்த `விகடகுமாரன்'.

கேரள எல்லையில் தமிழகத்தில் அப்பாவி மைனர் பெண்ணை மூன்றுபேர் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அந்த மூவரும் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விசாரணையை தொடரக் காவல்துறை தயங்குகிறது. 

மறுபக்கம், பினு (விஷ்ணு உன்னிக்கிருஷ்ணன்) எல்லையில் கேரள கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர். அவரின் உதவியாளர் தர்மஜன் போல்கட்டி. பினு வழக்கறிஞராக இருக்கும் அதே நீதிமன்றத்தில் கேன்டின் நடத்துபவர் சிந்து (மானசா ராதாகிருஷ்ணன்). சிறு வயதிலிருந்தே இருவருக்கும் பழக்கம். பினுவுக்கு சிந்து மீது விருப்பம் இருக்கும். ஆனால் தனது அக்கா மேகா மேத்தியூஸுக்கான ஆபரேஷனுக்கு தேவையான பணம் புரட்ட வழக்குகளைத் தேடி அலைந்துகொண்டே இருக்கும் நடுத்தர குடும்ப வாழ்க்கையில் அல்லாடிக்கொண்டு இருப்பார் பினு.

'

அதே ஊரில் பிரபல தொழிலதிபர் ரோஷி (ஜினு ஜோசப்). ஒருமுறை மருத்துவமனைக்கு அருகே நோ பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு உடன் இருக்கும் நடிகையுடன் பணம் தொடர்பாக வாக்குவாதம் செய்துகொண்டு இருப்பார். அந்த வழியே வரும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இந்திரான்ஸ் என்ற முதியவர், காரை எடுக்குமாறு உத்தரவிடுவார். `நீ யார்டா எனக்கு ஆர்டர்போட?' என்று சொல்லி அங்கிருந்து நகராமல் இருப்பார். அப்போது அவர்களை பயமுறுத்த ரோஷியையும் அந்த நடிகையையும் சேர்த்து போட்டோ எடுத்துவிட்டு, சைக்கிளில் வேகமாக சென்றுவிடுவார் அந்த பெரியவர்.

அந்த போட்டோ வெளியே வந்தால் மானம்போய்விடும் என்பதால் அவரைத் துரத்திப் பிடிக்கும் முயற்சியில் காரை அவரின்மேல் ஏற்றிக் கொன்றுவிடுவார், ரோஷி. இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வர, `ரோஷி சார்பாக நாம் வாதடலாம்' என்ற முடிவெடுப்பார் பினு. ரோஷி பணக்காரர் என்பதால் அவரை வெளியில் கொண்டுவந்தால் வரும் பணத்தை வைத்து செட்டில் ஆகிவிடலாம் என்று நினைப்பார். இதற்கிடையில் அந்த நடிகை ஏதோ ஒரு காரணத்தால் தற்கொலை செய்துகொள்வார்.

பெரியவரை கொன்ற வழக்கிலிருந்து ரோஷி வெளியே வந்தாரா, நடிகையின் தற்கொலைக்கான காரணம் என்ன, அந்த முதியவருக்கு நீதி கிடைத்ததா...இந்த கேள்விகளுக்கும் கேரள எல்லையில் நடந்த கொடுர சம்பவத்துககுமான தீர்வு என்ன... இவை அனைத்தையும் முடிச்சுப்போட்டு, ஒரு சுவாரஸ்யமான க்ளைமாக்ஸை கொடுத்துள்ளார் இயக்குநர் போபன் சாமுவேல். 

முதலில் தமிழக காவல்துறையின் சிறப்பை சொல்லியதற்காக இயக்குநருக்கு நன்றியும், பாராட்டுகளும். கேரளாவில் அதுவரை நடக்காத ஒரு வன்முறை, தமிழ்நாட்டுக்குள் நுழைந்ததும நிகழும். அது என்ன என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் மக்களே.

வில்லனாக நடித்த ஜினு ஜோசப் சூப்பரான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். ஹீரோ பினுவின் வீட்டில் வெளிக்காட்டிய வில்லத்தனங்கள், சுற்றியிருப்பவர்கள் தனக்கு துரோகம் செய்தாலும் `கடைசிவரை நான் கெத்தாதான் இருப்பேன்' என்று அவர் கொடுக்கும் ரியாக்ஷன்கள்... அனைத்தும் சிறப்பு. அதைத்தவிர ஹீரோ விஷ்ணு உன்னிக்கிருஷ்ணனில் ஆரம்பித்து ஹீரோயின் மானசா ராதாகிருஷ்ணன்வரை எல்லோரும் அளவான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர நிழல்கள் ரவியும் அருள் தாஸும் கெஸ்ட் ரோலில் வந்துபோகிறார்கள். ராகுல் ராஜின் இசையமைப்பும் படத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. முக்கியமாக வில்லனுக்குப்போட்ட பி.ஜி.எம் செம. படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் என டெக்னிக்கலான விஷயங்கள் எல்லாமே படத்திற்கு தகுந்த மாதிரி அமைந்து இருந்தன. 

கதைக்குள்வர, இயக்குநர் எடுத்துக்கொண்ட நேரம்தான் ரொம்பவே அதிகம். அதுவரை படத்தைத் தாங்கிப் பிடித்தது தர்மஜன் போல்கட்டியின் காமெடிகள். அவரைத்தவிர நீதிபதியாக இடம்பெற்ற ரஃபி, காமெடி வழக்கறிஞராக இடம்பெற்ற அருண் கோஷ் என அவர்கள் பங்கிற்கும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் அந்த காமெடிகள் கொடுத்த சிரிப்பு, படம் நகர நகர கடுப்பைக் கிளப்புகிறது.

இரண்டாம் பாதியில் படம் பரபரப்பாக நகர்ந்தது பிளஸ். ஆனால், அந்த சமயத்தில் தேவையில்லாமல் பல இடங்களில் இடம்பெற்ற காமெடிகள் மைனஸ். இயக்குநருக்கு ஹியூமர் சென்ஸ் ஜாஸ்திதான், அதற்காக அதை கதையில் இருந்து விலகி படம் முழுவதும் பயன்படுத்தியிருக்க வேண்டுமா பாஸ்? க்ளைமாக்ஸில் இயக்குநர் வெளிக்காட்டிய அடத்தியை படம் முழுவதுமே வெளிப்படுத்தியிருககலாம். அப்படி இருந்திருந்தால் படம் வேற லெவலில் வந்திருக்கும்.

ஆங்காங்கே இடம்பெற்ற `கடுப்பு' காமெடிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்த விகடகுமாரன் ஒரு த்ரில்லிங்கான பயணத்தைக் கொடுப்பான்.