Published:Updated:

"ஐ.பி.எல். பஞ்சாயத்துல ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கொண்டாட்டத்தை மறந்துடாதீங்க!" - Sudani From Nigeria படம் எப்படி?

தார்மிக் லீ
"ஐ.பி.எல். பஞ்சாயத்துல ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கொண்டாட்டத்தை மறந்துடாதீங்க!" - Sudani From Nigeria படம் எப்படி?
"ஐ.பி.எல். பஞ்சாயத்துல ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கொண்டாட்டத்தை மறந்துடாதீங்க!" - Sudani From Nigeria படம் எப்படி?

`தன் குடும்பம் பக்கத்தில் இல்லையே' என ஏங்கும் நைஜீரியா கால்பந்து வீரர், தன் குடும்பம் பக்கத்தில் இருந்தும் கண்டுகொள்ளாத கேரளா கால்பந்து டீம் மேனேஜர். காலம், இந்த இருவரையும் அவரவர் சூழல்களை முழுமையாக உணர்த்துவதே, `சுடானி ஃப்ரம் நைஜீரியா' படம். 

சாமுவேல் அபியோலா ராபின்ஸன் என்பவர், கால்பந்து விளையாட்டின் மேல் இருக்கும் ஆர்வத்தில் நைஜீரியாவில் இருந்து கிளம்பி  பணத் தேவைக்காக கேரளாவில் மஜீத் (சௌபின் ஷாகிர்) என்பவர் நடத்தி வரும் கால்பந்து அணியில் இணைகிறார். அக்கம்பக்கம் நடக்கும் எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு கோப்பை வெல்வதுதான் இவர்களது பொழுதுபோக்கு. ஒரு ரசிகன்தான் சாமுவேலை சுடானி என்று அழைக்க ஆரம்பிக்கிறான். அந்த பெயர்க் காரணம் வேடிக்கையானது. சாமுவேல், மஜித் இருவருக்குப் பின்னாலும் தனித்தனியே ஒரு சோகக் கதை இருக்கிறது. தனது தங்கைகள் இருவர், பாட்டி என நான்கு பேரும் வறுமையின் பிடியில் வாடி வதங்குவதால், நைஜீரியாவில் இருந்து கிளம்பி இந்தியா வந்துவிடுகிறார், சாமுவேல். அப்பாவின் இறப்புக்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அம்மா ஜமீலா (சாவித்ரி ஶ்ரீதரன்), அவரது வளர்ப்புத் தந்தையான அப்துல்லாவுடனும் ஒரே வீட்டில் இருந்தும் பேசாமல் இருக்கிறார், மஜீத்.  

பல பிரச்னைகள் இருந்தாலும், இருவருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு காதல், ஃபுட்பால். கால்பந்தை வெறித்தனமாகக் காதலித்து வரும் இவர்களுக்கு திடீரென ஒரு பிரச்னை ஏற்படுகிறது. எதிர்பாராத விதமாகக் காலில் அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், சாமுவேல். இதற்கிடையில் சாமுவேலின் பாட்டி நைஜீரியாவில் இறந்துவிட்டதால், உடனடியாக நைஜீரியா கிளம்ப வேண்டிய கட்டாயம் வருகிறது. இவரை நைஜீரியா அனுப்பி வைக்க மஜீத்துக்குப் பணம் வேண்டும், இந்தச் சிக்கலுக்கு நடுவில் சாமுவேலின் பாஸ்போர்ட் காணாமல் போய்விடுகிறது. கூடவே, சாமுவேலின் பாஸ்போர்ட் போலியானது என்ற உண்மையும் மஜீத்துக்குத் தெரிய வருகிறது. இப்படிப் பல பிரச்னைகள் இவர்களைச் சூழ, இறுதியில் சாமுவேலின் பாஸ்போர்ட் கிடைத்ததா, தன் குடும்பத்தைப் பார்க்க நைஜீரியா சென்றாரா... சாமுவேல் அவர் குடும்பத்தின்மேல் காட்டும் அக்கறையைப் பார்த்து மஜீத் அவரது குடும்பத்துடன் பேசினாரா?  என்பதே, க்ளைமாக்ஸ்.

கதை என்று எந்த சாரம்சமும் பெரிதாக இல்லாவிட்டாலும், ஜாலியாக நகரும் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். அதேபோல் கால்பந்து விளையாட்டை மேலோட்டமாகக் காட்டியிருந்ததால், அதன்மேல் உள்ள காதலை குட்டிக் குட்டி விஷயங்களில் அவ்வளவு அழகாகக் கடத்தியிருக்கிறார்கள். முதல்பாதி முழுவதும் சரவெடி காமெடிகளால் மட்டுமே நகர்கிறது. பக்கத்து வீட்டு பீயுமா (சாரசா பல்லுசேரி) அவ்வப்போது வந்தாலும், அவர் கொடுக்கும் கவுன்டர் காமெடிகள், சௌபின் ஷாகிரின் நண்பர்களாக நடித்த லுக்மன் லுக்கு (ராஜேஷ்), குஞ்சிப்பா (அபிராம் பொதுவால்), நசேர்கா (சித்திக் கொடியத்தூர்) எனப் படத்தில் நிறைய கதாபாத்திரங்கள். ஆனால், அது எந்த இடத்திலும் துறுத்திக்கொண்டு தெரியாதபடி, அனைவரையும் அளவாக, அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஸக்ரியா முகமது. குறிப்பாக, சாமுவேலுக்கு அடிபட்ட பின் பார்த்துக்கொள்ள ஆள் இன்றி, சௌபின் ஷாகிரின் வீட்டில்தான் குணமடையும் வரை தங்கியிருப்பார். அங்கு, சாமுவேலின் மேல் சௌபின் ஷாகிரின் அம்மா காட்டும் பாசம், பாஷை புரியாமல் நடக்கும் இவருக்குமான உரையாடல்... என அனைத்தும் அழகு.  முக்கியமாக மஜித் தன்னை தந்தையாகக் கருதவில்லை என வருந்தும் தந்தை கதாபாத்திரம் செம. சாமுவேலை முதல் முறையாக பார்க்கும் அவர், தான் மஜித்தின் தந்தை என அறிமுகப்படுத்திக்கொள்ளும் காட்சி. அப்லாஸ் ரகம். 

`பிரேமம்' படத்தின் பி.டி.மாஸ்டாராக நடித்திருக்கும் சௌபின் ஷாகிர்தான், இந்தப் படத்தின் ஹீரோ. அம்மாவிடம் ஆரம்பத்தில் காட்டும் கோபம், க்ளைமாக்ஸில் காட்டும் பாசம், காமெடி, மொழி தெரியாமல் சாமுவேலிடம் செய்யும் ரகளை... என அனைத்திலும் அதகளம் பண்ணியிருக்கிறார். மொழி புரியாவிட்டாலும் வெளிக்காட்டும் ஃபேஸ் ரியாக்‌ஷன்கள், பேஷ்!. 'கருப்பின நடிகர் என்பதால், இப்படத்தில் எனக்குப் பேசிய சம்பளத்தைவிட குறைவாக் கொடுத்தார்கள்' என்ற ராபின்சனின் குற்றச்சாட்டால், சில பிரச்னைகள் எழுந்தன. படத்தின் வெற்றியைப் பார்த்துவிட்டு, ராபின்சனுக்கு ஒரு தொகையைக் கொடுக்க முடிவு செய்தது, படக்குழு. ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை, பெங்களூர், மும்பை... என ஏரியா பிரித்துக்கொண்டு, கிரிக்கெட்டில் ரசிகர்கள் சண்டை எப்படி வருகிறதோ... அதேபோல, கால்பந்துப் போட்டிகளிலும் தீராத சண்டையாகத் திகழ்வது, ரியல் மாட்ரிட் - பார்ஸிலோனா அணிகளுக்கு இடையேயான ரசிகர்கள்  சண்டை. படத்தில், ஆங்காங்கே அதையும் பதிவு செய்து அப்லாஸ் அள்ளியிருக்கிறார், இயக்குநர். தவிர, படத்தின் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் கச்சிதமாக ஒத்துழைத்திருக்கிறது.

முதல்பாதி முழுவதும் காமெடியாக நகர்ந்த படம், இரண்டாம்பாதியை நகர்த்த சென்டிமென்ட்டைக் கையில் எடுத்திருக்கிறார், இயக்குநர். ஆனால், அதை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகச் சொல்லியிருந்தால், இரண்டாம் பாதியின் நீளம் குறைந்திருக்கும். போலி பாஸ்போர்ட்டை வைத்துதான் சாமுவேல் நைஜீரியாவில் இருந்து இந்தியா வருகிறார். கிளம்பும்போது மக்களோடு மக்களாகப் பிரச்னை இல்லாமல் இந்தியா வந்து சேர்ந்தாலும், இங்கிருந்து நைஜீரியா கிளம்பும்போது பல சிக்கல்கள் சாமுவேலுக்கு ஏற்படுகிறது. அப்போது கூடவா போலீஸால் அது போலி பாஸ்போர்ட் என்று கண்டுபிடிக்க முடியாது? என்ற லாஜிக் மிஸ்டேக் உதைக்கிறது. கால்பந்து போர்ஷனை இன்னும் கொஞ்சம் அதிகமாகக் காட்டியிருந்தால், திரைக்கதையின் தேக்கங்களை நிரப்பியிருக்கும். 

கால்பந்துப் போட்டியின் விறுவிறுப்பை, சுவாரஸ்யங்களை துளியும் எதிர்பார்க்காமல், அதைச் சுற்றி நடக்கும் ரகளைகளையும், குடும்பத்திற்கிடையேயான பாச நேசங்களையும் அனுபவிக்க விரும்பினால், `சுடானி ஃப்ரம் நைஜீரியா'வை க்ளைமாக்ஸில் மஜீத்தோடு சேர்ந்து நீங்களும் ஜாலியாக சாமுவேலை வழி அனுப்பி வைக்கலாம்.