Published:Updated:

‘மௌனராக’த்துக்கு ஓகே. இந்த ‘ஓகே கண்மணி’ காலத்துக்கு ஓகேவா? மிஸ்டர்.சந்திரமௌலி விமர்சனம் #MrChandramouli

விகடன் விமர்சனக்குழு

இரு கால் டாக்ஸி நிறுவனங்களுக்கிடயே நடக்கும் தொழில் விரோதத்தில், விதியால் சிக்கி பல விளைவுகளைச் சந்திக்கிறது ஒரு சாதாரண குடும்பம். இதுதான் `மிஸ்டர். சந்திரமௌலி' படத்தின் ஒருவரிக் கதை.

‘மௌனராக’த்துக்கு ஓகே. இந்த ‘ஓகே கண்மணி’ காலத்துக்கு ஓகேவா? மிஸ்டர்.சந்திரமௌலி விமர்சனம் #MrChandramouli
‘மௌனராக’த்துக்கு ஓகே. இந்த ‘ஓகே கண்மணி’ காலத்துக்கு ஓகேவா? மிஸ்டர்.சந்திரமௌலி விமர்சனம் #MrChandramouli

‘சிறந்த கால் டாக்ஸி நிறுவனம்' என்ற விருதைப் பல வருடங்களாக பெற்றுவரும் 'கருடா கால் டாக்ஸி' நிறுவனத்தின் உரிமையாளர் அழகரிடம் (இயக்குநர் மகேந்திரன்) அதே துறையில் புதிதாக கால் பதித்திருக்கும் 'கோ கேப்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் விநாயக் (சந்தோஷ் பிரதாப்), 'அடுத்த வருடம் அந்த விருதை உங்கள் கையாலேயே நான் பெறுவேன்’ என்று சவால் விடுகிறார். 'நேத்து வந்த நீயெல்லாம் என்னை எதிர்க்கிற' என்று தனக்குள் கோபமாகிறார் அழகர். 

அதன் பிறகு சில கொடூரக் குற்றங்கள் நகருக்குள் நடக்க, ஒட்டுமொத்த சென்னையுமே பரபரப்பாகிறது. மறுபக்கம், வங்கி ஊழியர் சந்திரமௌலியும் அவரின் மகன் ராகவ்வும் தாங்கள் உண்டு தங்களது பத்மினி கார் உண்டு என நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த கால் டாக்ஸி கதையும் இந்தப் பத்மினி கார் கதையும் ஒரு புள்ளியில் எசகுபிசகாய் பிணைய, அடுத்தடுத்து பிரச்னைகளாய் நகர்கிறது கதை. இறுதியில் என்ன ஆனது என்பதே `மிஸ்டர் சந்திரமௌலி'.

‘பாக்சர்’ ராகவாக கௌதம் கார்த்திக். இதற்கு முன் பல ஜானர் படங்களில் கதகளி ஆடியவர், இதற்கு முன்னால் வந்தப் படங்களில் என்ன செய்தாரோ அதையேத்தான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறார், தவறான கதைத் தேர்வு உட்பட. கார்த்திக்குக்கு 'மௌன ராகம்' மனோகர்தான் காலத்தால் அழிக்க முடியாத கதாபாத்திரம். அலட்சியமான மாடுலேஷன், துறுதுறு நடிப்பு, நக்கல் சிரிப்பு... இதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் ட்ரேட் மார்க். அந்த மனோகரையே இந்த சந்திரமௌலியிலும் கலர் ஜெராக்ஸ் அடிக்க நினைத்து, நம்மை அடிஅடியென அடித்திருக்கிறார் கார்த்திக். அது `மௌனராகம்' காலத்துக்கு ஓகே, இந்த `ஓகே கண்மணி' காலத்துக்கு செட் ஆகலை சாரே!

இருவருமே நிஜத்திலும் அப்பா - மகன் என்பதால், இவர்கள் செய்யும் குறும்பு சில காட்சிகளில் தத்ரூபமாகவே இருக்கிறது. 'ரெஜினாவுக்கு இந்தப் படத்தில் வித்தியாசமான ரோல்' என இயக்குநர் சொல்வாரெனில், அது 'அந்த' கிளாமர் பாடலுக்காகத்தான் இருக்கும். முதல் பாதி முழுக்க காமெடி, காதல், பாக்ஸிங் என்றே நகரும் கதை, பாதிக்கு மேல்தான் முழு வீச்சோடு நகர ஆரம்பிக்கிறது. ஆனால், அந்தக் காமெடி, காதல், பாக்ஸிங் எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதுதான் பரிதாபம். ஒன்றிரண்டு காமெடிகளுக்காவது சிரிக்க முடிகிறதே என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். மற்றபடி திரையில் காமெடி செய்பவர்கள்தான் சிரித்தும்கொள்கிறார்கள். சதீஷ், நண்டு ஜெகன் போன்றவர்களை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். 

எல்லாக் காட்சிகளையும் தேவையில்லாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சின்ன சாம்பிள். 'அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார்' இவ்வளவுதான் பதில். ஆனால் 'அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நானும் அப்பாவும் லன்ச் சாப்பிட்டுட்டு இருந்தோம். நெஞ்சு வலிக்குதுனு சொன்னார். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனோம். கார்டியாக் அரஸ்ட்னு சொல்லிட்டாங்க' இப்படி புளிப்பு மிட்டாய் வசனங்களை எல்லாம் ஜவ்வு மிட்டாய் ஆக்குகிறார்கள்.

சாம் சி.எஸ்ஸின் மியூஸிக் எல்லாமே 'அல்ரெடி கேம் ப்ரோ' ரகங்கள். பின்னணி இசையைக் கேட்கும்போது `விக்ரம் வேதா' எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது. அதுவும்போக நின்றால் பாட்டு, நடந்தால் பாட்டு, நிமிர்ந்தால் பாட்டு எனப் `பாடி'படுத்தியிருக்கிறார்கள்.

த்ரில்லர் படங்களில் லாஜிக் மீறல்கள், முதல் பாதி வரை கதைக்குள் வராமல் இருத்தல், அவர்களே ஜோக் சொல்லி அவர்களே சிரித்தல், அடிக்`கடி' பாடல்கள்கூட ஓகே. படத்தில் நினைத்தவர்களையெல்லாம் நினைத்த இடங்களில் வைத்து நினைத்தபடி போட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள். என்னதான் காவல்துறை ‘உங்கள் நண்பன்’ ஆக இருந்தாலும், ஒரு லிமிட் இல்லையா பாஸ்.

லாஜிக் ஓட்டைகளை எல்லாம் அடைத்து, திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் ஜாலியான ரைடாக இருந்திருக்கும் இந்த 'மிஸ்டர். சந்திரமௌலி.’