Published:Updated:

`ஒரு வருத்தம்... ஒரு வாழ்த்து!' - ‘60 வயது மாநிறம்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
`ஒரு வருத்தம்... ஒரு வாழ்த்து!' - ‘60 வயது மாநிறம்’ விமர்சனம்
`ஒரு வருத்தம்... ஒரு வாழ்த்து!' - ‘60 வயது மாநிறம்’ விமர்சனம்

குழந்தைகளை தொலைத்துவிட்டு தேடும் தந்தைகள் பற்றி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. தந்தையைத் தொலைத்துவிட்டு பரிதவிப்பாய் அலையும் மகன் பற்றிய கதைதான் இந்த '60 வயது மாநிறம்.'

ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியரான பிரகாஷ்ராஜுக்கு அல்சைமர் நோய். மனைவியை ஏற்கெனவே புற்றுநோய்க்குப் பறிகொடுத்த அவருக்கு மகன் விக்ரம் பிரபு மட்டுமே ஒரே ஆறுதல். ஆனால், விக்ரம் பிரபுவுக்கு வேறு ஊரில் வேலை கிடைக்க, தந்தையை ஒரு கேர் சென்டரில் இந்துஜா கண்காணிப்பின் கீழ் விட்டுச் செல்கிறார். ஓராண்டுக்குப் பின் அப்பாவை பார்க்க வரும் விக்ரம் பிரபு அவரை வெளியே அழைத்துச் செல்கிறார். அப்போது கவனக்குறைவால் பிரகாஷ்ராஜை தொலைத்துவிடுகிறார். இன்னொரு பக்கம் ரவுடியான சமுத்திரக்கனி ஒரு கொலை முயற்சியில் இறங்குகிறார். பார்க்கும் எல்லாரையும் மகன் பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜ் சமுத்திரக்கனியிடம் மாட்டிக்கொள்கிறார். விக்ரம் பிரபு, தன் தந்தையைத் தேடும் படலமே மீதிக்கதை.

60 வயது மாநிறத்தவராகப் பிரகாஷ்ராஜ். நடிப்பைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வெள்ளை கறுப்பு நாய்க் கதை, தன் மனைவியுடனான காதல் கதை என்று வசனங்களோடு கண்களாலும் கதை சொல்கிறார். தனியனாய் அலையும்  ஒவ்வொரு காட்சியிலும் அவரின் இத்தனை கால அனுபவம் பேசுகிறது. 

முழுநீள சென்டிமென்ட் படத்தில் விக்ரம்பிரபு நடிப்பது இதுவே முதல்முறை. பிரகாஷ் ராஜோடு இருக்கும் காட்சிகளில் கொஞ்சம் தடுமாறினாலும் மற்ற காட்சிகளில் நன்றாகவே சமாளித்திருக்கிறார். 'மேயாத மான்' இந்துஜா டாக்டர் ரோலுக்கு பளிச் பொருத்தம். மேக்கப் மட்டுமே இயல்பைத் தாண்டி உறுத்துகிறது. பெரிதாக ஸ்கோப் இல்லாததால் சமுத்திரக்கனிக்கு இது மற்றுமொரு படம். குமரவேல், விஜய் டிவி புகழ் சரத் ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.

வசனங்கள் ஓரிரு இடங்கள் விஜி பெயர் சொல்கிறது. ராதாமோகன் படத்தில் இயல்பான நகைச்சுவை அதிகமிருக்கும். ஏனோ இந்தப் படத்தில் ஒருசில இடங்கள் தவிர்த்து பிற இடங்களில் வலிந்து திணித்த காமெடிகள்தான் அதிகமிருக்கின்றன. இசை இளையராஜா என்பது பின்னணி இசையில் ஒலிக்கும் அவர் குரலை வைத்துமட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. பல இடங்களில் 'இது ராஜா இல்லையே' என்று நினைக்க வைக்கிற பின்னணி இசை. என்ன ஆச்சு ராஜா சார்?

'Life is Beautiful' என்ற நெகிழ்ச்சியான குறும்படம், ராம் - மரியா - ஜானி மூவருக்குள் இருக்கும் வித்தியாச உறவு, பிரகாஷ் ராஜின் காதல் கதை என ஒருசில இடங்கள் நிஜமாகவே பியூட்டிஃபுல். ஆனால், அதுமட்டுமே போதாதே? அன்பை பேசுகிறேன் என ஒவ்வொரு காட்சியிலும் மெனக்கெட்டிருப்பது ஒருகட்டத்தில் ஓவர்டோஸாகிறது. படத்துக்கும் செயற்கை சாயம் பூசுகிறது.  

மனித மனங்களைப் பற்றி பேசும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். தொடர்புபடுத்திக்கொள்ள அவகாசம் தராமல் சட்சட்டென கடந்து செல்லும் காட்சிகள் உணர்வுகளைக் கடத்துவதில் தோல்வி காண்கின்றன. இதனாலேயே ஒளிப்பதிவுக்கும் படத்தொகுப்புக்கும் பெரிய வேலையில்லை. முக்கியமாக வில்லனும் அவரின் சகாவும் போகிறபோக்கில் 'இந்தா செவப்பு சட்டை போறான் பாரு அவனை முடிச்சுடு, அந்தா ஒருத்தன் இட்லி சாப்பிடுறான் பாரு, அவனை முடிச்சுடு' எனப் பார்ப்பவர்களை எல்லாம் போட்டுத்தள்ளச் சொல்கிறார்கள். நானோ அளவுக்குக்கூட பதற்றம் இந்தச் செயற்கைத்தனத்தால் வரமாட்டேன் என்கிறது.

'கோதி பன்னா சாதாரண மைகட்டு' என்ற கன்னட படத்தின் ரீமேக்தான் இது! அதை எடுக்க நினைத்ததெல்லாம் சரி, ஆனால், எடுத்தவிதம்தான் 60 வயது மாநிறம் கொண்ட பெரியவரை பதற்றமில்லாமல் நம்மைத் தேட வைக்கிறது.