Published:Updated:

மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn

விகடன் விமர்சனக்குழு
மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn
மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn

கண்ணாடியும் ஃப்ரெஞ்சு தாடியுமாக என்ட்ரியான அந்த இளைஞரை 'யாரு சாமி நீங்க? எங்க இருந்து வந்தீங்க?' என ஆச்சரியமாக பார்த்தது கன்னட திரைப்பட உலகம். இன்று அதே இளைஞர் தமிழில் காலெடுத்து வைத்திருக்கிறார். 'லூசியா' என்ற மேஜிக்கல் படம் கொடுத்த பவண்குமாரின் பை-லிங்குவல் படமான 'யூ'டர்ன்' நம்மையும் அப்படி கேட்க வைக்கிறதா?

இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு ஆங்கில இதழில் இன்டெர்னாக சேரும் சமந்தாவுக்கு வீட்டிலிருந்து கல்யாண பிரஷர், அலுவலகத்திலிருந்து வேலை பிரஷர். தன்னை நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்தில் ஒரு வித்தியாச அசைன்மென்ட்டை கையிலெடுக்கிறார். வேளச்சேரி பாலம் பற்றிய அசைன்மென்ட் அது. 'ஓ... பாலம் கட்டினதுல ஊழலா?' - இல்லை. 'பாலத்துக்குக் கீழே ஏதாவது சட்டவிரோதமா நடக்கிறத பத்தின கதையா?' - இல்லை. இது பவண்குமார் படமாயிற்றே. யூகிக்கவே முடியாத பல யூ-டர்ன்கள் அடித்து போகும் வழியெல்லாம் திக்திக் தருணங்களை பரிசளித்து இறுதியாக ஓரிடத்தில் முடிகிறது அந்தச் சாலை. அதுவென்ன என்பதை நீங்கள் திரையில் பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

ரக்‌ஷனாவாக சமந்தா. பொதுவாக த்ரில்லர்களில் ஹீரோக்கள் துப்பறிய, அவர்களின் வேலைக்கு நடுவே கால் செய்து, 'என்ன பண்ற? சாப்பிட்டியா?' என தொணதொணக்கும் வேஷம்தான் ஹீரோயின்களுக்கு! இதில் அப்படியே ரிவர்ஸ்! படத்தில் சமந்தா இல்லாத காட்சிகளை யோசித்துப் பார்த்து சொல்வது கூட கஷ்டம்தான். ஆனால், ஒரு த்ரில்லருக்கான அத்தனை வெயிட்டையும் தனது ட்ரேட்மார்க் சிரிப்போடு தாங்கியிருக்கிறார். ஒரு பக்கம் மட்டும் நெளிந்து முன்னால் விழும் தலைமுடி கொள்ளை அழகு. சிரிப்பு, பயம், சோகம் என காட்சிக்குக் காட்சி உணர்ச்சிகளை மாற்றவேண்டிய ரோல். சூப்பராக செய்துகாட்டுகிறார் சாம்!

'என்ன பண்ற, சாப்பிட்டியா?' என்ற ரோல் இதில் ராகுல் ரவீந்திரனுக்கு! பார்க்க அமெரிக்க மாப்பிள்ளை போல இருந்தாலும் வரும் காட்சிகளில் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். சமந்தா - ராகுலுக்கு இடையிலான சைலன்ட் மோட் அன்பு ரசிக்கவைக்கிறது. படம் முழுக்க சமந்தாவோடு பயணிப்பது போலீஸ்காரரான ஆதிதான். துடிப்பான ஆறடி போலீஸ்காரரை கற்பனை செய்துபார்த்தால் ஆதிதான் ஞாபகத்துக்கு வருவார். அவ்வளவு கச்சிதமான கேஸ்ட்டிங். யூ-டர்ன் போட்டு போட்டு தொடங்கிய இடத்திற்கே வந்தாலும் சளைக்காமல் திரும்ப எழுந்து ஓடுக்கொண்டே இருக்கிறார். 

பூமிகா, நரேன் போன்றவர்களின் நடிப்பெல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'அடுத்தென்ன இதானா?' என்ற ரேஞ்சுக்கு ஈஸியாக நடித்துவிட்டுச் செல்கிறார்கள். நடிப்பில் குறையின்றி எல்லாரும் சிறப்பாக செய்திருந்தாலும் ஆங்காங்கே நான் சிங்க்கில் இருக்கும் டப்பிங் கொஞ்சம் தார் ரோட்டிலிருந்து விலகி ப்ளாஸ்டிக் ரோடில் பயணித்து திரும்ப யூ-டர்ன் அடிப்பது போல இருக்கிறது. 

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சட்சட்டென மாறும் காட்சியமைப்புகள்தான். பின்னணி இசையில் மட்டுமல்ல, எடிட்டிங்கிலும் திகில் கிளப்பமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் ஆறுமுகம். சாலை பற்றிய கதை என்பதால் ரெட் லைட் படம் முழுக்க டாலடிக்கிறது. அந்த மூட் செட்டாவதற்கு நிறைய மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகித் பொம்மிரெட்டி. முக்கியமாக லாக்கப்பில் நடக்கும் அந்த சீக்வென்ஸ் வேற லெவல்! ஒளிப்பதிவு, எடிட்டிங்கோடு ஒப்பிட்டால் இசையமைப்பாளர் கொஞ்சம் அடக்கி வாசித்ததுபோல இருக்கிறது.

'ஏதோ நடக்கப்போகுது' என நம் முதுகில் ஜில்லென பயத்தை படரச் செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது திரைக்கதை. தேவை இல்லாத காட்சிகள் இல்லை. பாடல்கள் இல்லை. அதனால் நான் ஸ்டாப் பஸ் போல விர்ரென வழுக்கிச் சென்று முடிவை அடைகிறது. ஒன்றிரண்டு இடங்களில் அடுத்தக் காட்சிகளை கணித்துவிடலாம்தான். ஆனால், அடுத்தடுத்த திருப்பங்கள் அதை மறக்கச் செய்கின்றன. 

லூசியாவின் வெற்றிக்குக் முக்கியக் காரணம் அதன் Rawness தான். ஆனால் இதில் அது மிஸ்ஸாகிறது. அதுவும் பை - லிங்குவல் என்பதற்காக திணிக்கப்பட்ட வசனங்கள் நாடகத்தன்மையை கொடுக்கின்றன. கன்னட யூ-டர்னின் ரீமேக்தான். அதற்காக கேரக்டர் பெயர்கள், வசனங்கள் கூட மாற்றாமல் அப்படியேவா தருவது? 

குறைகளைத் தாண்டி 'யூ-டர்ன்' வின்னராவதற்கு ஒரு பெரிய காரணமுண்டு. நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஒரு சிறு விஷயத்திற்குப் பின்னால் இவ்வளவு பெரிய கதையை பயம் வரும்வகையில் சொல்லலாம் என்ற மேக்கிங்தான் அது!