Published:Updated:

ஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..! - ‘வடசென்னை’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

அட்டு, அசால்ட்டு, கலீஜு, குட்ச, குப்பமேடு, சம்பவம், சாமான் என வடசென்னைக்கு நாம் கொடுத்திருக்கும் அழுக்கு முகத்தின் பின்னரசியலை உப்புக்காற்று முகத்தில் அறைய, ரத்தவாடை நாசித் துளைக்கச் சொல்கிறது `வடசென்னை'.

ஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..! - ‘வடசென்னை’ விமர்சனம்
ஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..! - ‘வடசென்னை’ விமர்சனம்

படத்தின் முதல் காட்சியில், சிகரெட்களும் மதுபானமும் கிடத்தியிருக்கும் மேசை மீதொரு வெட்டரிவாள் வந்து விழுகிறது. அதில் காயக் காத்திருக்கும் ரத்தமும் ஒட்டியிருக்கும் துண்டுச் சதையும் கண்ட துரோகத்தின் பழிவாங்கல்தான் படத்தின் கதை. செந்தில் அட்டி மற்றும் குணா அட்டி, வடசென்னையின் இரு பெரும் குண்டர்க் கூட்டம். ஒருவரை ஒருவர் வெட்டிசாய்த்து உயிரைக் குடிக்கும் வெறியோடு உலாவரும் கூட்டம். சிறை வளாகத்திற்குள்ளேயே குறுநில மன்னர்கள் போல வாழ்கிறார்கள். சிறைக்குள் சிங்கம் - புலி ஆட்டம் ஆடும் இந்த இரண்டு குழுவுக்குமிடையே மாட்டிக்கொள்கிறான் அன்பு. `அப்போ அடுத்து இதுதான் நடக்கும்...' என நாம் யோசித்து சீட் நுனிக்கு வருகையில் சட்டென காட்சிகள் மாறி வேறு தளத்தில் பயணிக்கிறது திரைக்கதை. அத்தியாயம் அத்தியாயமாக விரியும் அந்த ரத்தச்சரித்திரம்தான் `வடசென்னை'.

ஊரே வியக்கும் சுண்டாட்டவீரன் அன்புவாக தனுஷ். பதின் பருவத்துப் பையனாக ஃபங்க்கும் க்ளீன் ஷேவ் லுக்குமாக டபுள் பெல்ட் பேகி பேன்டில் அதகளம் செய்பவர், அப்படியே தாடியில் நரை முடியேறிய பின் கூர்பார்வையால் ரணகளம் செய்கிறார். வெற்றிமாறனோடு இணையும்போதெல்லாம் தனுஷின் நடிப்பு முந்தைய ஹைஸ்கோரை மிஞ்சுகிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அதீத மெச்சூரிட்டி. தனுஷுக்கு இணையான வெயிட் ரோல் அமீருக்கு. மாஸ் ஹீரோவுக்கு இணையான அந்த ஓபனிங்கும் சரி... இடையே வரும் அந்த பன்ச் டயலாக்கும் சரி... ஆண்ட்ரியாவோடு நடத்தும் ரொமான்ஸும் சரி... மனிதருக்கு இது லைஃப்டைம் ரோல். அதைத் தனக்கேயுரிய கெத்தோடு செய்திருக்கிறார். ராஜன் என்னும் அவரின் கேரக்டரை பார்ப்பவர்களுக்கு எல்லாம் அவரை தனியே ஒரு சினிமாவாகப் பார்க்கும் ஆசை நிச்சயம் எழும்.

பாய்ஸ் ஹாஸ்டல் போல எக்கச்சக்க ஆண்கள் சூழ்ந்த உலகில் இரு அழகிகள் கவனம் ஈர்க்கிறார்கள். ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்திய சினிமா வரலாற்றில் ஒரு ஹீரோயினுக்கு இப்படியொரு ஓபனிங் காட்சியைப் பார்த்ததாக ஞாபகமில்லை. அந்த தில்லுக்காகவே அவரைப் பாராட்டலாம். ராஜனின் ராணியாக ஆண்ட்ரியா. இரண்டாம் பாதி முழுக்க பிரமிக்க வைக்கிறார். சென்னையின் வட்டாரமொழியை இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திப் பேசியிருக்கலாம் என்பதுதான் சின்ன மனக்குறை.

`வடசென்னை'யை உயர்த்திப் பிடிக்கும் நான்கு தூண்கள் சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி மற்றும் 'அவுட்டு' பவன். நால்வரின் நடிப்பைப் பற்றியும் தனித்தனியே ஒரு பக்கத்துக்கு எழுதலாம். ஹோட்டலில் நடக்கும் காட்சியமைப்பில் இவர்கள் நால்வர்தான் முக்கிய கதாபாத்திரங்கள். சிங்கிள் டேக்கில் வரும் அந்த சீக்வென்ஸ் முழுக்க அசுர நடிப்பை அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள். பயமும் பதற்றமும் அழுகையும் பச்சாதாபமுமாக மனித மனத்தின் குரூரங்களை கண்முன்கொண்டு வந்து நிறுத்தி நம்மை மூச்சடைக்க வைக்கிறார்கள். `ஜானி' ஹரி, ராதாரவி, சாய் தீனா, சரண் சக்தி, சுப்ரமணிய சிவா என ஒவ்வொருவரும் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். 

வழக்கமாக, வடசென்னையை களமாகக் கொண்ட சினிமாக்களின் மேல் எழும் அரசியல் கேள்விகளுக்கு `இது  வடசென்னை பற்றிய முழுமையான பதிவு அல்ல. கதைக்குத் தேவையானவை மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது' என ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார் வெற்றிமாறன். தான் காட்சிப்படுத்த நினைத்ததை அவ்வளவு ஆழமாக, யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். `யதார்த்தம்' எனும் வார்த்தைதான் படத்தின் மூச்சு. வடசென்னை வாசிகளின் வட்டாரமொழியில் சரளமாகப் புழங்கும் கெட்டவார்த்தைகளை மௌன மொழியில் கடத்திவிடாமல் அப்படியே உலவவிட்டது முதலில் கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் அடுத்தடுத்து அந்த வாழ்வியலோடு பார்வையாளர்கள் ஒன்றவும் அவர்களுக்கு உணர்வுகளைக் கடத்தவும் பெரிதும் உதவியிருக்கிறது. 

அத்தியாயம் அத்தியாயமாக நான்-லீனியர் பாணியில் சொந்தக் குரலிலேயே கதை சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். பெரிய கதையை இப்படிப் பகுதி பகுதியாகச் சொன்ன புத்திசாலித்தனத்தால் தெளிவாக குழப்பங்களின்றி படத்தோடு பயணிக்கமுடிகிறது. படத்தொகுப்பாளர்கள் ஜி.பி.வெங்கடேஷ் மற்றும் ஆர்.ராமருக்குப் பாராட்டுகள். 15 ஆண்டு கால இடைவெளியில் பயணிக்கும் கதை. அந்தப் பயணத்தை அவ்வளவு அழகாக, அவ்வளவு நுணுக்கமாக இயக்குநரோடு இணைந்து நிகழ்த்திக்காட்டியிருக்கிறார், கலை இயக்குநர் ஜாக்கி. அவர்களோடு சேர்த்து முருகானந்தத்தின் ஆடை வடிவமைப்பும் பாராட்டத்தக்கது. ஒரு கேங்ஸ்டர் சினிமாவுக்கேற்ற நிறைவான சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் திலீப் சுப்பராயன். அமீர், வின்சென்ட் அசோகனை அடிக்கும் காட்சியில் நமக்குக் கன்னம் வலிக்கிறது! `நாங்க பேசுறதே உனக்குப் புரியமாட்டேங்குது. உனக்கு எப்படி எங்க வாழ்க்கை புரியும்', `நம்மளை காப்பாத்திக்குறதுக்கு பேரு ரவுடிஸம்னா ரவுடிஸம் பண்ணுவோம்' எனப் பல இடங்களில் வசனங்கள் அன்பின் கத்தியைவிட ஷார்ப். எம்.ஜி.ஆர், அண்ணா புகைப்படங்கள், கட்சிக்கொடி என அ.தி.மு.க கட்சியை நேரடியாகவே சொல்லியிருக்கிறார்கள். ராஜீவ் காந்தி மறைவு, எம்.ஜி.ஆர் மறைவு என உண்மை நிகழ்வுகளோடும் கதையைத் தொடர்புப்படுத்தியிருப்பதும் சிறப்பு.  

`வடசென்னை'யின் மாந்தர்களுக்குத் தன் இசையால் கூடுதல் உயிர் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை நெஞ்சைப் படபடக்க வைக்கிறது. `என்னடி மாயாவி நீ' பாடல் படத்தோடு கோக்கப்பட்ட இடம் கச்சிதம். வேல்ராஜின் ஒளிப்பதிவில் கடலின் குளுமையையும் கரையின் வெட்கையையும் ஒருசேர கலந்து திரையின் வழி உணரமுடிகிறது. கேமரா காட்டும் கோணங்கள் பல இடங்களில் பதற்றம் தருகின்றன, பிரமிக்கவும் வைக்கின்றன. 

முதல் பாதியில் திரைக்கதையின் வேகத்தில் ஏற்படும் தொய்வு படத்தின் பெரும் குறை. மையக்கதைக்கு பெரிதாய் சம்பந்தமில்லாத சிறைச்சாலை காட்சிகள் ஏன் இத்தனை, ஏன் இவ்வளவு டீட்டெயிலிங் என்ற கேள்வி எழுகிறது. டிரெய்லரை இரண்டு முறை பார்த்தாலே கணித்துவிடும் அளவிலுள்ள திரைக்கதை, சில இடங்களில் சுவாரஸ்யங்களை தக்க வைக்க தவறுகிறது. வடசென்னை என்றாலே ரவுடிகளின் சரணாலயமாக உருவகப்படுத்த வெற்றிமாறன் விரும்பவில்லை என்றாலும் அவரையும் மீறி அப்படியான புரிதலையும் இந்தப் படம் பலருக்கு ஏற்படுத்தும் என்பதே உண்மை.

படத்தில் `இதுல யார் நல்லவங்க யார் கெட்டவங்கனே தெரில' என்ற வசனம் வரும். நிஜம்தான். வழக்கமான கேங்ஸ்டர் சினிமாக்களில் வரும் `கெட்டவன்... கேடு கெட்டவன்' வகையறா மனிதர்கள் இந்த வடசென்னையில் இல்லை. சூழ்நிலைகளுக்கேற்ப வெள்ளையாகவும் கறுப்பாகவும் மாறும் கேரம் காயின்கள் அவர்கள். அதிகாரத்தின் விரல்கள் சுண்டும்போது அவர்களில் சிலர் படுகுழிகளில் விழுகிறார்கள். மற்றவர்கள் கரை ஒதுங்குகிறார்கள். அவர்களை முன்முடிவுகளோடு அணுகாமல் இருப்பதே நாம் வடசென்னைக்குச் செய்யும் மரியாதை.  

படம் நிச்சயம் சிறுவர்களுக்கானதல்ல. ஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமாவைப் பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் வடசென்னையில் வலம் வரலாம்.