Published:Updated:

எம்.ஜி.ஆருக்கு `நாடோடி மன்னன்'... ரஜினிக்கு `முத்து'... விஜய்க்கு சர்காரா? - சர்கார் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
எம்.ஜி.ஆருக்கு `நாடோடி மன்னன்'... ரஜினிக்கு `முத்து'... விஜய்க்கு சர்காரா? - சர்கார் விமர்சனம்
எம்.ஜி.ஆருக்கு `நாடோடி மன்னன்'... ரஜினிக்கு `முத்து'... விஜய்க்கு சர்காரா? - சர்கார் விமர்சனம்

`துப்பாக்கி'யில் அமைதியைக் குலைக்கும் தீவிரவாதம், `கத்தி'யில் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் அரசியல் பேசிய விஜய் - முருகதாஸ் காம்போ, `சர்காரி'ல் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் தேர்தல் முறைகேடுகளைப் பற்றிப் பேசியிருக்கிறது. மூன்றாவது முறையாக மெசேஜ் சொல்லும் இந்தக் கூட்டணி ஹாட்ரிக் ஹிட்டடிக்கிறதா? 

கால் வைத்த இடங்களில் எல்லாம் சக போட்டியாளர்களை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட் முதலை விஜய்! ஐ.டி கம்பெனிகளில் இவரைப் பற்றிப் பாடமெடுக்கும் அளவுக்கு சூதுவாது தெரிந்தவர். ஐந்தாண்டுகள் கழித்து, தேர்தலுக்கு ஓட்டுப்போட பெரும் பரபரப்புகளுக்கு இடையில் இந்தியா வந்திறங்குகிறார்! ஆனால், அவரின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட, மீடியாவின் பசிக்குத் தலைப்புச் செய்தியாகிறார். ஒருபுறம், உலகமே கண்டு அரளும் கார்ப்பரேட் கிரிமினலான தன்னையே ஏமாற்றிவிட்டார்களெனத் தலையைச் சூடாக்கும் ஈகோ... மற்றொருபுறம் நெஞ்சைச் சுடும் தமிழகத்தின் வறுமை... - இரண்டும் சேர்ந்து அனலாகக் கொதிக்க, அரசியல்வாதிகளோடு  நீயா நானா ஆட்டம் ஆடுகிறார். அந்த அனல் எதிரிகளை சாம்பலாக்கியதா, இல்லையா என்பதே மீதிக்கதை.

சுந்தர் ராமசாமியாக பாசிட்டிவ் எனர்ஜி தெறிக்கும் விஜய்! படத்துக்குப் படம் அழகில் இளமையும் நடிப்பில் முதிர்ச்சியும் ஏறிக்கொண்டே செல்கிறது! `சர்கார்' முழுக்க விஜயின் சாகசம்தான்! கை நரம்பு முறுக்கேற அடிக்கும் சண்டைக்காட்சிகள், படபடவெனப் பொரிந்து தள்ளும் சீரியஸ் உரைகள், ஒவ்வொரு ஸ்டெப்பையும் தனக்கானதாய் மாற்றி ஆடும் அந்தத் துள்ளல், வில்லன்களைக் கடுப்பேற்றும் வசனங்களில் தெறிக்கும் நக்கல், ஃப்ரேமுக்கு ஃப்ரேம்... எங்கும் எதிலும் விஜய்! `கத்தி'யில் ஒன்றிரண்டு கலங்க வைக்கும் காட்சிகள் என்றால் இதில் அப்படியான காட்சிகள் மூன்று மடங்கு அதிகம்! அத்தனை காட்சிகளிலும் குடும்பங்களின், தாய்மார்களின் ஓட்டுகளை அள்ளிவிடுவார்! அவரின் சினிமா கேரியரைவிட அரசியல் முன்னெடுப்புக்கு `சர்கார்' அதிகம் உதவும்! 

கொள்ளை அழகாக கீர்த்தி சுரேஷ். அறிமுகக் காட்சியிலும் பாடல் காட்சிகளிலும் இதயங்களைத் திருடுபவர் அதன்பின் அவரே காணாமல் போய்விடுகிறார். அமைதியாய் இருந்தே அதிகமாய் மிரட்டுகிறார் வரலட்சுமி! இரண்டாம்பாதியில் அவர் வரும் காட்சிகள் எல்லாம் மெல்லிய நடுக்கத்தைப் படரவிடுகின்றன. சலனமே இல்லாமல் மாத்திரை கொடுக்கும் காட்சியில் கோலிவுட்டின் சூப்பர் வில்லன் சரத்குமாரின் பிள்ளையாக பதினாறடி பாய்கிறார்! வழக்கமான `ஹேய்ய்ய்ய்' வில்லியாக அவரைக்காட்டாமல் காரியக்கார அரசியல்வாதியாகக் காட்டியதில் ஜெயிக்கிறார் முருகதாஸ்! 

மாண்புமிகு அரசியல்வாதியாக பழ.கருப்பையா! நிஜமாகவே அரசியலில் பழம் தின்று மரம் வளர்த்தவர் என்பதால் அனாயசமாக ஸ்கோர் செய்கிறார்! ஒரு  காட்சியில் வரலட்சுமியும் அவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்! ஆனாலும், அவரை கொஞ்சமே கொஞ்சமாக ஓவர்டேக் செய்கிறார் ராதாரவி! காலம் முழுக்க இரண்டாம் இடத்திலேயே இருப்பவர் எப்படி இருப்பார்? எகத்தாளமும் சேட்டையுமாக அரைகுறை அறிவோடு அப்படியே இருக்கிறார் ராதாரவி! யோகிபாபுவின் காமெடி காட்சிகள் சிரிப்பு சரவெடி. அளவும் நூறு வாலாவாக இல்லாமல் பத்தாயிரம் வாலாவாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

பாடல்கள் வந்தபோது எழுந்த முணுமுணுப்புகளை எல்லாம் பின்னணி இசையில் அடக்கியிருக்கிறது இசைப்புயலின் மந்திர விரல்கள்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தீம் இசை என ஏரியா பிரித்து வெளுத்து வாங்கியிருக்கிறார்கள் ஏ.ஆர்.ரஹ்மானும் குதுப்-இ-க்ரிபாவும். கிட்டத்தட்ட,  3 மணிநேரப் படத்தின் அலுப்பை வெகுவாகக் குறைத்திருக்கிறது அவர்களின் பின்னணி இசை! பாடல்கள் படமாக்கப்பட்டவிதமும் சிறப்பு! பாடல்கள் இடம்பெற்ற இடம்தான் பெரும் இடைஞ்சல்.

முருகதாஸின் படங்களில் டெக்னிக்கல் டீம் எப்போதும் மிரட்டும்! `சர்காரி'லும் `செம்ம' சொல்லவைக்கின்றது அவரின் குழு! `அங்கமாலி டைரீஸி'ன் கிரிஷ் கங்காதரன்தான் ஒளிப்பதிவு. தனக்குப்பிடித்த மஞ்சள் டோனில் மொத்த பரபரப்பையும் நமக்குக் கடத்துகிறார்! தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு ஸ்மார்ட்டான திறமையான ஒளிப்பதிவாளர் என்ட்ரி கொடுத்ததில் மகிழ்ச்சிசாரே! கேமராக்கண்கள் கேரளம் என்றால் சண்டையமைப்பு அக்கட தேசத்தில் அதிரடிக்கும் ராம் - லக்ஷ்மண் இணை. ஒவ்வோர் அடியும் தட் தட்டென நம் உடலே அதிர அதிர விழுகிறது!  சினிமாத்தனத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தால் வெறித்தனம் இன்னும் கூடியிருக்கும். ஒரு பக்கம் ஹைடெக் கார்ப்பரேட் மான்ஸ்டரின் ஸ்டைலிஷ் உலகம் இன்னொருபக்கம் வெள்ளையும் அழுக்குமான அரசியல் உலகம். இரண்டையுமே சிறப்பாக பேலன்ஸ் செய்து கண்முன் காட்டுகிறார் கலை இயக்குநர் டி.சந்தானம்! 

`நறுக்' எடிட்டிங் முருகதாஸ் படங்களின் பலம்! ஆனால் சர்காரின் நீளம் ஸ்ரீகர் பிரசாத்தின் சிசர்கள் இன்னும் சிறப்பாக வெட்டியிருக்கலாமோ என நினைக்க வைக்கிறது! `இங்கே பிரச்னைக்குத் தீர்வு தேவை இல்ல, இன்னொரு பிரச்னைதான் தேவை... ', `கடல்ல அஸ்தியைக் கரைப்பாங்க... நான் என் மீனவ அப்பாவைக் கரைச்சேன்' போன்ற வசனங்கள் செம ஷார்ப்! வசனத்தில் ஜெயிக்கும் முருகதாஸும் ஜெயமோகனும் திரைக்கதையில் லாஜிக்கிடம் தோற்றிருக்கிறார்கள்.  

முதல்பாதியில் காட்சியமைப்புகளை நம்பாமல் சண்டைகளையே அதிகம் நம்பியது போல இருக்கிறது! இந்த இயக்குநர் - ஹீரோ காம்போவிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இன்டர்வெல் பிளாக்கும் அதைநோக்கிய திரைக்கதையும் வீக்காக இருக்கின்றன! இரண்டாம் பாதியில் வரலட்சுமியுடன் விஜய் ஆடும் பரமபத விளையாட்டு செம சூடு! ஆனால், அதுவே வரலட்சுமியை முன்னாலேயே கதையில் கொண்டு வந்திருக்கலாமே எனக் கேட்க வைக்கிறது! ஓர் அரசியல் படத்தை அரசியல் பாடமாக மாற்ற நினைத்ததில் அத்தனை செயற்கைத் தனங்கள் துருத்திக்கொண்டு நிற்கின்றன.

நடப்பு அரசியலோடு படத்தை வெகுவாக கனெக்ட் செய்வதில் வெற்றி பெறுகிறார் இயக்குநர். முழங்கை ஸ்லீவ் - `பாப்பா' அடைமொழியோடு வரலட்சுமி, அரசியலில் கோலோச்சும் இரட்டையர்கள், எதிர்த்து கேள்வி கேட்டால் கலவரத்தைத் தூண்டிவிட்டு வேண்டாதவர்களை போட்டுத்தள்ளுவது, சாமானிய சமூக ஆர்வலர்களைக்கொண்ட மாற்று இயக்கம், அரசியல்வாதிகளின் முகங்களை எல்லா இடங்களிலும் பதிப்பதற்கு பின்னாலுள்ள பிராண்டிங் எனப் பல விஷயங்களைப் பேசியிருப்பது தைரியம்தான்! தமிழக ரசிகர்களால் நிச்சயம் பொருத்திப்பார்த்துக்கொள்ள முடியும். சில இடங்களில் பிரசார நெடி அதிகமாக இருக்கிறது! இரண்டாம் பாதியின் முக்கால்வாசி காட்சிகள், விஜய் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் கொள்கை அறிக்கையை விஷுவலாய்ப் பார்த்தது போன்ற ஃபீல். விஜய் ஆரம்பிக்கும் கட்சின்னு கற்பனையாச் சொல்றோம், கற்பனையா..! 

சில இடங்களில் நமக்குள் எழும் கேள்விகளுக்கு ஹீரோ வழியாகவே பதில் சொல்லியிருப்பது புத்திசாலித்தனம்! ஆனால் அதைத்தாண்டியும் லாஜிக் இடறல்கள் இல்லாமலில்லை. சூழ்ச்சி எனத்தெரிந்த பின்னும் அவ்வளவு புத்திசாலியான வரலட்சுமி ஓரிடத்தில் தலையைக்கொடுப்பது ஏன்? மத்திய அரசைப்பற்றி ஒரு குட்டி வசனம்கூட இல்லை... மாநிலத்தையே குழப்பத்தில் தள்ளும் அரசியல் விளையாட்டில் மத்திய அரசின் பங்கு கொஞ்சம்கூட இருக்காதா என்ன? இவை எல்லாம் படம்பார்க்கும்போதே தோன்றுவதால் படத்தோடு ஒன்றிப்போவது கொஞ்சம் குறைகிறது! விஜய்யின் `கார்ப்பரேட் கிரிமினல்' எனும் அடைமொழிக்கு திரைக்கதையில் கொஞ்சம் கூட நியாயம் சேர்க்காதது பெரும் ஏமாற்றம். அந்த ஒற்றை வார்த்தையை வைத்துக்கொன்டு திரைக்கதையில் எப்படியெல்லாம் விளையாடியிருக்கலாம், மொத்தமாய் தவறவிட்டு வழக்கமான, பழக்கமான ஒரு திரைக்கதையையே தந்திருக்கிறார் முருகதாஸ். 

எம்.ஜி.ஆருக்கு அவரின் அரசியல் பயணத்தை நாடோடி மன்னன் தீர்மானித்தது; ரஜினி தன் அரசியல் நிலைப்பாட்டைச் சொல்லும் விதமாக முத்துவின் வசனங்கள் அமைந்தன. சர்கார் விஜயின் அரசியல் கிராஃபுக்கு எந்தளவுக்கு உதவும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும். 

மொத்தத்தில், லாஜிக் மீறல்கள் தூக்கலாகவும் சுவாரஸ்யங்கள் குறைவாகவும் இருந்தாலும் படம் பார்க்கும் சாமானியனைப் பல இடங்களில் கனெக்ட் செய்யும்விதத்திலும் ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜ் சொன்னவிதத்திலும் `சர்கார்' மெஜாரிட்டிக்கு அருகில் வருகிறது!