Published:Updated:

மெகா பட்ஜெட்... சூப்பர் ஸ்டார்ஸ்... பாகுபலியை மிஞ்சுகிறதா #ThugsOfHindostan?

சுதந்திரத்தை வெள்ளையர்களிடமிருந்து கொள்ளையடிக்க நினைக்கும் ஒரு தேசியவாதக் கும்பலுக்குள் ஆன்டி நேஷனல் கறுப்பு ஆடு ஒன்று நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும்?

மெகா பட்ஜெட்... சூப்பர் ஸ்டார்ஸ்... பாகுபலியை மிஞ்சுகிறதா #ThugsOfHindostan?
மெகா பட்ஜெட்... சூப்பர் ஸ்டார்ஸ்... பாகுபலியை மிஞ்சுகிறதா #ThugsOfHindostan?

வெள்ளையர்களிடம் அடிப்பணிய மறுக்கும் ரோனக்பூர் சாம்ராஜ்ஜியத்தின் ராஜ குடும்பம் வெள்ளையர்களால் சிதைக்கப்படுகிறது. இளவரசி ஜஃபீராவை (ஃபாத்திமா சனா ஷேக்) காக்கும் பொறுப்பு தளபதி குதாபக்ஷ்க்கு (அமிதாப் பச்சன்) வருகிறது. 11 வருடங்களில் அவர்கள் ஓர் இயக்கமாக உருவெடுத்து வெள்ளையர்களுக்குச் சிம்மசொப்பனமாக மாறுகிறார்கள். அவர்களை ஒடுக்க பணத்திற்காக தன் நாட்டை மட்டுமல்ல எதையும் விற்கத் துணியும் ஏமாற்றுக்காரன் ஃபிராங்கியின் (அமீர் கான்) உதவியை நாடுகிறார் ஜெனரல் ராபர்ட் கிளைவ். ஒற்றனாக அந்தக் கூட்டத்தில் நுழைகிறான் ஃபிராங்கி. அதில் அவன் வெற்றி கண்டானா, ஜஃபீரா தன் ரோனக்பூர் சாம்ராஜ்ஜியத்தை மீட்டாளா? #ThugsofHindostan படம் எப்படி?

பிரமாண்ட பொருள்செலவில் உருவாகும் படங்களின் மீது இயல்பாகவே மக்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பு கிளம்பிவிடும். அதுவும் பெர்ஃபெக்ஷனிஸ்ட் அமீர்கான், மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இருவரும் முதன்முறையாக ஒரு படத்தில் இணைகிறார்கள், படம் ஒரு பீரியட் ஃபிலிம், பட்ஜெட் கிட்டத்தட்ட 300 கோடி, கூடவே கேத்ரீனா கைஃப், `தங்கல்' புகழ் ஃபாத்திமா சனா ஷேக் போன்ற நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தைவிட அதிக பொருள்செலவில் உருவாகியிருக்கும் இந்த வரலாற்றுப் புனைவு கதை அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா?

ஹாலிவுட்டின் `பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' திரைப்படத்திலிருந்து, டைட்டில், போஸ்டர், கப்பல்கள் என செட் ப்ராப்பர்டி முதற்கொண்டு அனைத்திலிருந்தும் இன்ஸ்பயர் ஆகியிருக்கிறது `தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்'. அதிலும் ஃபிராங்கியாக அமீர் கான், ஜானி டெப் நடித்த கேப்டன் ஜாக் ஸ்பேரோவை அப்படியே நகல் எடுத்திருக்கிறார். எப்போதும் குடியும் கையுமாகத் தள்ளாடும் உடல் மொழியுடன் அவர் அதகளம் செய்தாலும், ஜாக் ஸ்பேரோவை அவரால் ஒரு காட்சியில்கூட ஓவர்டேக் செய்ய முடியவில்லை. ஜாக் ஸ்பேரோ ஒரு குழப்பவாதியாக இருந்தாலும் அவருக்கென்று சுயநலமாக சில லட்சியங்கள் இருக்கும். ஃபிராங்கியின் பாத்திரப் படைப்பும் கிட்டத்தட்ட அப்படித்தான் என்றாலும் ஒவ்வோர் அரை மணி நேரத்துக்கும் அவரின் கொள்கைகள், எண்ணங்கள் மாறுவது ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு படத்தைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி, அதே போன்றதொரு படைப்பைத் தரலாம். ஆனால், தக்ஸ் படக்குழு `பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' படத்தினை ஸ்பூஃப் செய்து வைத்திருக்கிறது. அதிலும் முக்கியமான ஒரு கப்பலை களவாடும் காட்சியை அப்படியே பைரேட்ஸ் படத்தின் கடைசி பாகத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள். சின்னச் சின்ன படங்களுக்குக்கூட அவ்வளவு மெனக்கெடும் அமீர், இதில் அதிகபட்சம் செய்யும் மாறுவேடம் எல்லாம் ஹேர்ஸ்டைல் மாற்றுவதுதான். அமிதாப்புக்குதான் முதன்மை வேடம் என்பதால், அதைப் புரிந்துகொண்டு கதை நாயகனாக இல்லாமல், அமிதாப்புக்கான ஸ்பேஸ் கொடுத்து ஒதுங்கி நிற்கும் விதத்தில் மட்டுமே ஈர்க்கிறார் அமீர். மற்றபடி இயக்குநர் ஆச்சார்யாவுடன் இவர் ஏற்கெனவே இணைந்த 'தூம் 3' எத்தகைய ஏமாற்றமோ, அதே அளவுக்கான ஏமாற்றத்தை மறுபடியும் தந்து இருக்கிறார். உங்களிடமிருந்து இன்னமும் எதிர்பார்த்தோம் அமீர்!

``ஏமாற்றுவது என் குணம்!” என்று அமீர் நியாயம் பேசும்போது ``நம்புவது என் குணம்!” என்று பஞ்ச் அடிக்கிறார் அமிதாப். அவர்தான் படத்தின் மிகப்பெரிய பலம். ஆசாத்தாக ஒவ்வொரு காட்சியிலும் சிங்கமாகச் சீறுகிறார். முக்கியமாக, சுதந்திரம் குறித்துப் பேசும்போதும், சென்டிமென்ட் காட்சிகளின்போதும் மற்ற நடிகர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு தனக்கு இன்னமும் வயதாகவில்லை என்பதை உணரவைக்கிறார். இரண்டு வாள்களுடன் கப்பலில் சண்டையிடும் காட்சிகள், அது படமாக்கப்பட்ட விதம் எல்லாம் பிரமிக்க வைக்கிறது. `தங்கல்' படத்தில் அமீர் கானின் மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்குக்கு இரண்டு ஆண்டு இடைவெளியில் இந்தப் படத்தில் அவருடன் ரொமான்ஸ் செய்யும் ரோலுக்கான ப்ரொமோஷன் கிடைத்திருக்கிறது (ஏன் இப்படி?). இருவருக்குள்ளும் பெரிய அளவிலான காதல் காட்சிகள் இல்லையென்பதால் அது நெருடலாகத் தெரியவில்லை. வில் அம்புடன் அம்மணி சண்டைக் காட்சிகளில் சாகசம் செய்கிறார். பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வர வாழ்த்துகள்!

ஹை பட்ஜெட் படங்களில் கேத்ரினா கைஃப்புக்குத் தரப்படும் அதே ரோல்தான் இதிலும். ஷீலா கி ஜிவானி, சிக்னி சமேளி, கம்லி (தூம் 3) என இதற்கு முன்னர் கேத்ரினா வந்த அதே ஐட்டம் நம்பர் பாடல்கள்தான் இதிலும். `பட்ஜெட் பெருசும்மா' எனச் சொல்லிவிட்டார்களோ என்னவோ, இதில் இரண்டு பாடல்கள். அதிலும் ஆங்கிலேயர்களின் கொண்டாட்டங்களில் ஆடுவதற்கு மட்டுமே வந்து செல்கிறார் கேத்ரினா. அவர் வரும்போது எல்லாம் கவர்ச்சியுடன் காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் வரப்போகிறது என்று நாமே கணித்துவிடலாம். அந்தக் காட்சிகள் மட்டுமல்ல, படம் மொத்தத்தையுமே சுலபமாகக் கணித்துவிடலாம். பார்த்துப் பழகிய மேடை நாடகங்களின் கதைதான் படத்தின் கரு. அதை வேறு ஒரு காமாசோமா திரைக்கதையில் புகுத்தி கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓட வைத்திருக்கிறார்கள்.

80 களில் க்ளைமாக்ஸுக்கு முன்னர், மரு வைத்துக்கொண்டு வில்லன் கூடாரத்துக்குள் ஹீரோவின் குழு உட்புகுந்து அவர்கள் தலைவனை மீட்கும் பாடல் காட்சி பார்த்து பல நாள்கள் ஆகிவிட்டது எனத் தோன்றுகிறதா? நீங்கள் தாராளமாக தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் பார்க்கலாம். அதிலும் முக்கியத்துவமான அந்த இறுதி சண்டைக்காட்சியில்கூட, பழைய படங்களில் ஹீரோயின் சண்டையிடுவது போல், காமெடி கதகளி ஆடியிருக்கிறார்கள். இது போததென்று அமிதாப்புக்கு சிக்னல் கொடுக்க ஃபாத்திமா குடும்பப் பாடல் கணக்காக ஒன்றை பாடுகிறார். மிடில பாஸு! ராபர்ட் கிளைவ் வில்லன் என்றாலும் நிஜ வரலாற்றை மறந்துவிட்டு தன் இஷ்டப்படி ஒரு கதையில் அவரைப் புகுத்தி காமெடி செய்திருக்கிறார்கள். 'ராபர்ட் கிளைவும் ராவண காவியமும்' என்றாவது படத்துக்கு டைட்டில் வைத்திருக்கலாம். வரலாற்றுப் புனைவுனாலும் ஒரு நியாயம் வேணாமாங்க?

ஆங்கிலேயர் ஆட்சியில் `தக்ஸ்' என்று சில சாதிகள் வரையறுக்கப்பட்டு, அவர்களே `குற்றப்பரம்பரை' ஆகினர். ஆனால் இந்தத் திரைப்படத்தில் அப்படியான உண்மையான வரலாறுகள் எதுவும் இல்லாமல், `குற்றப்பரம்பரை' என்ற முத்திரையோடு கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து எந்தப் பதிவும் இல்லை. மாறாகத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் கூறப்படும் `தேசப் பற்று' என்பதையே மற்றொரு வடிவத்தில் பரிமாறியுள்ளார் இயக்குநர் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா. அதுவும் தக்ஸ் என்று அழைக்கப்படும் இந்தப் போராளிகள் குழு, தங்கள் நாட்டை மீட்க 11 வருடங்களாக வெள்ளையர்களின் கப்பலை மட்டுமே திருடிக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி இந்தப் புரட்சிப் படை எதையும் யோசிப்பேனா என்கிறது. அதிலும், அமீர் கான் சொல்லும் வசனம் இன்னும் நகைப்புக்குரியது. தேசப்பற்றை இவ்வளவு தூரம் அக்ஷய் குமார் கூடப் பறைசாற்றியிருக்க மாட்டார். ``இந்தியர்கள் நீங்க மென்னு துப்புற `பான்'னு நினைச்சீங்களா, அப்படியே தொண்டைல இறங்கி சுவாசத்த அடைச்சிடுவோம்". இந்தப் படத்திலும் இலக்கியவாதிகள் வசனத்துக்கு ஓவர்டைம் பார்த்திருப்பார்கள் போல!

`சாய்ராட்', `தடக்' புகழ் அஜய்-அதுல் பாடல்கள் படத்தின் பெரும்பலம் என்றாலும், ஜான் ஸ்டுவர்ட் எதுரியின் பின்னணி இசையில் ஆங்காங்கே ஹாலிவுட் படங்களின் தீம் மியூசிக்குகள் எட்டிப் பார்க்கின்றன. ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் மற்றும் பல ஹாலிவுட் படங்களுக்கு ஆர்ட் டைரக்ஷன் செய்த குழுவினர் படத்தின் பெர்ஃபெக்ஷனிற்கு முழு உழைப்பைக் கொடுத்துள்ளனர். ஆனால், திரைக்கதை அதற்கு ஈடுகொடுக்காமல் மூழ்கிய கப்பலாக தத்தளிக்கிறது.

படத்தில் அமீர் கான் சொல்லும் ஒரு வசனம்... ``நான் பார்க்கத்தான் இந்தியன். ஆனால் மனதளவில் ஃபாரினர்!". அதற்கு மாற்றாக #ThugsofHindostan படம் பார்வைக்கு ஹாலிவுட் படமாகத் தெரிந்தாலும் கதை, திரைக்கதை அளவில் லாஜிக்கின்றி தடுமாறும் அரதப் பழசான நம்மூர் மசாலா மட்டுமே!