Published:Updated:

கிப்ளிங்கின் கதை, அசல் டிரீட்மென்ட், நட்சத்திர படை... ஈர்க்கிறானா 'மௌக்லி'?

ம.காசி விஸ்வநாதன்
கிப்ளிங்கின் கதை, அசல் டிரீட்மென்ட், நட்சத்திர படை... ஈர்க்கிறானா 'மௌக்லி'?
கிப்ளிங்கின் கதை, அசல் டிரீட்மென்ட், நட்சத்திர படை... ஈர்க்கிறானா 'மௌக்லி'?

காட்டில் பெற்றோர்களை இழந்து தன்னந்தனியாக விடப்படும் மனிதக்குழந்தை. மற்ற மிருகங்களின் எதிர்ப்புக்கிடையே அதை மௌக்லி எனப் பெயரிட்டு எடுத்து வளர்க்கும் ஓநாய்கள், ஓநாயாகவே வளரத்தொடங்கும் சிறுவன் எப்படி தன்னை கொல்லத்துடிக்கும் புலியிடம் இருந்து தப்பி கடைசியில் காட்டையே காக்கும் ஒரு ஹீரோவாக மாறுகிறான் என்பதுதான் கதை. அதே ருடியார்ட் கிப்ளிங் எழுதிய 'தி ஜங்கிள் புக்' புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இன்னொரு வெர்ஷன்தான் இது. அதிலும் டைட்டிலை மட்டும் மாற்றாமல் டிரீட்மெண்ட்டிலும் வித்தியாசம் காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த படம் தற்போது நேராக நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய முக்கிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த கதையின் டிஸ்னியின் வெர்ஷன்கள் மிகவும் லைட்டான டோனில் இருக்கும். அது மியூசிக்கல் ஜானர் வேறு. மிருகங்கள் பாடல்கள் பாடுவது போன்றும், காடு ஒரு ஜாலியான அழகான இடத்தைப் போன்றும் அந்த படங்கள் படமாக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த 'மௌக்லி' கொஞ்சம் சீரியஸான டோனில் பயணிக்கிறது. ரூடியார்ட் கிப்ளிங் எப்படி எழுதினாரோ அதை அப்படியே திரையில் கொண்டுவர முயற்சி செய்துள்ளதாக கூறுகின்றனர் படக்குழுவினர். அதை ஓரளவுக்குச் சரியாக செய்துள்ளனர்.

இந்த படத்தில் மிருகங்களுக்குக் குரல் கொடுப்பதுடன் மட்டுமில்லாமல் மிருகங்களாகவே 'Performance capture' தொழில்நுட்பம் மூலம் நடித்துள்ளனர் நடிகர்கள். இதற்காக பெரும் நட்சத்திர பட்டாளத்தையே இறக்கியுள்ளார் இயக்குநர் அண்டி செர்கிஸ். இவர் 'Performance capture' நடிப்புக்காகவே புகழ் பெற்றவர். கிங் காங், பிளானட் ஆஃபி தி ஏப்ஸ் போன்ற பல முக்கிய படங்களில் 'Performance capture' கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார் இவர். இந்த படத்திலும் பல்லு என்னும் கரடியாக இவரே நடித்திருக்கிறார். மேலும் பிரபல நடிகர்களான கிறிஸ்டியன் பேல் கருஞ்சிறுத்தை பகீராவாகவும், பெனடிக்ட் கம்பர்பேட்ச் புலி ஷேயர் கானாகவும் நடித்திருக்கின்றனர். இவர்களது நடிப்பும் குரலும் மிருகங்களின் வழியே கூட உணர்வுகளைச் சரியாக கடத்தியிருக்கின்றன. அதே சமயம் மிருகங்கள் மனித முகத்தைக்  கொண்டிருப்பதை போன்ற உறுத்தலும் இல்லாமல் இல்லை.  ஆனால் இவர்கள் அனைவரையும் விட கடினமான வேலை மௌக்லியாக நடித்த ரோஹன் சந்த்க்குதான். மொத்த படத்தையும் தாங்கி நிற்க வேண்டிய பாத்திரத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார் அவர். 

திரைக்கதையில் சிறிய மாற்றங்கள் இருப்பினும் ஏற்கெனவே தெரிந்த கதை என்பதால் முழுமையான சுவராசியத்தை கொடுக்கத் தவறுகிறது. கதாப்பாத்திரங்களில் பெரிய அழுத்தம் இல்லாததும் இந்த பிரச்னைக்கு பங்களிக்கிறது. விசுவலாக சில காட்சிகளில் பிரமிக்கவைத்தாலும் மற்ற இடங்களில் மௌக்லியை நீக்கிவிட்டால் 3D அனிமேஷன் படம் ஒன்றைப் பார்க்கும் செயற்கையான உணர்வையே தருகிறது. இது காட்சிகளின் வீரியத்தைக் குறைப்பதாகவும் அமைந்துவிடுகிறது. புலி வரும் முக்கிய காட்சிகளும் அக்ஷன் காட்சிகளும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் நடக்கும் கதை என்பதால் இந்தியனிசங்களும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் பெரிதாக மெனக்கெடல்கள் எதுவும் செய்ததாக தெரியவில்லை. ஊர் மக்கள் 'இந்திய' பண்டிகை ஒன்றைக் கொண்டாடுகிறார்கள், அதில் ஹோலி பொடி தூவப்படுகிறது மற்றும் பல சம்பிரதாயங்கள் நடக்கின்றன. அங்கு வேட்டைக்காரராக வெள்ளைக்காரர் ஒருவர் சுற்றிக்கொண்டு இருக்கிறார். அவர் ஏன் அங்கே வந்தார் என்பதற்கான பின்னணியில் எந்த தெளிவும் இல்லை. இசையிலும் புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு ஒரு 'இந்திய' டச் கொடுக்க முயன்றுள்ளனர். மௌக்லி டைட்டில் கார்டுகூட, இந்தி எழுத்துகள் போல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு காட்சி கூட இந்தியாவில் படமாக்கப்படவில்லை. 

இது குழந்தைகளுக்கான படமா என்று கேட்டால் அதுவும் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். நெட்ஃப்ளிக்ஸ் தளமும் இதற்கு 13+ ரேட்டிங்கையே கொடுத்துள்ளது. காட்சிகளில் ஆங்காங்கே கொஞ்சம் ரத்தம் தெறிக்கத்தான் செய்கிறது. டிஸ்னியின் 'தி ஜங்கிள் புக்' படத்தைப் பார்த்தவர்களுக்கும் காடு ஆபத்தான ஒரு இடம்தான் என்பதை நினைவுபடுத்தும் இந்த படம். மேலும் அந்த படத்தை போல வெறும் புலியை மட்டும் வில்லனாகக் காட்டாமல், காடுகளை அழிக்கும் மிருகங்களை வேட்டையாடும் மனிதனையும் வில்லனாக சித்திரித்திருப்பதைப் பாராட்டலாம்.

ஜங்கிள் புக் என்ற புத்தகத்தை, தன் மகள் ஜோஸ்பினுக்காக 1894-ம் ஆண்டு வெளியிட்டார் ருட்யார்ட் கிப்ளிங். 1899-ம் ஆண்டு ருட்யார்டின் மகள் ஜோஸ்பின் இறந்து போனாள் . அவள் மகளுக்காக எழுதிய இந்தக் கதை, அவள் மகளைத் தவிர உலகமே படித்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் பல ஆண்டுகளுக்கு நிலைக்கப்போகும் கதைகளை கிப்ளிங் எழுதவைக்க தூண்டிய ஜோஸ்ஃபீனுக்கு நன்றிகள். 1976ம் ஆண்டு வெளியான ஜங்கிள் புக் படமே, புத்தகத்தில் இருந்து விலகித்தான் இருக்கும். அந்தப் படத்தை மையமாக வைத்து வெளியான இயக்குநர் ஜான் ஃபௌரீயின் (Jon Favreau) ஜங்கிள் புக், இன்னும் அதிகமாக விலகி மௌக்லியை ஒரு நாயகனாக சித்தரித்திருப்பார்கள். உண்மையில் ஜங்கிள் புக் என்னும் புத்தகத்தில் முதல் பாதியில் வரும் ஒரு கதாபாத்திரம் தான் மௌக்லி. அந்த வகையில், அண்டி செர்கிஸின் மௌக்லி திரைப்படம், புத்தகத்தில் இருக்கும் பல விஷயங்களை நினைவுபடுத்துகிறது. காட்டின் தர்மங்களை ஃபாலோ செய்கிறது. 'கொல்வது நமக்கு ஒரு விளையாட்டு அல்ல' என பகீரா சொல்வது கூட புத்தகத்தில் வரும் Laws of Jungleன் சிறிய வெர்சன் தான். மனிதர்களின் கால்நடைகளை கொல்லக்கூடாது என்பது கூட புத்தகத்தில் வரும். 

ஜங்கிள் புக் குழந்தைகள் படிப்பதற்காக எழுதப்பட்டது. ஆனால், அண்டி சர்கிஸின் மௌக்லி அதில் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது.  மௌக்லி காட்டில் எப்படி உணவு உட்கொண்டிருப்பான் என்பதற்கெல்லாம் டீட்டெய்லிங் வருகிறது. இதிலும் மௌக்லியின் நாயக பிம்பத்துக்காக ஹைப் ஏற்றியிருக்கிறார்கள். ஜங்கிள் புக் புத்தகம் படித்தவர்களுக்கும், இயக்குநர் ஜான் ஃபௌரீயின் 2016 வெர்சன் பார்த்தவர்களுக்கும் இதுவொரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும். 

படத்தின் டிரெய்லர்