Published:Updated:

காதல், எதிர்ப்பு, பேரழிவு... சயிஃப் அலிகான் மகள் சாரா அறிமுகமாகும் #Kedarnath படம் எப்படி?

ர.சீனிவாசன்
ர.முகமது இல்யாஸ்

வழக்கம்போல சாதி/மதம் தாண்டி பூக்கும் காதல். வழக்கம்போல வரும் ஆதிக்கச் சாதி குடும்பத்தின் எதிர்ப்பு. வழக்கம்போல நிகழும் போராட்டம். வழக்கம்போல ஒரு நெகட்டிவ் அல்லது பாஸிட்டிவ் கிளைமேக்ஸ்... இதுதான் 'கேதார்நாத்’ படம்!

காதல், எதிர்ப்பு, பேரழிவு... சயிஃப் அலிகான் மகள் சாரா அறிமுகமாகும் #Kedarnath படம் எப்படி?
காதல், எதிர்ப்பு, பேரழிவு... சயிஃப் அலிகான் மகள் சாரா அறிமுகமாகும் #Kedarnath படம் எப்படி?

இயற்கை பேரிடர்களுக்கு மனிதனை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வரும் ஆற்றல் இருக்கிறது, பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் அரசனாக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும் ஒரே முடிவுதான். பேரிடர்கள் சாதி, மதம், வர்க்கம் அனைத்தையும் சமன் செய்துவிடும். உத்தரகாண்ட் மாநிலத்தில் 2013-ம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏறத்தாழ் 4000 மக்கள் உயிரிழந்தனர். அதனை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது, ’கேதார்நாத்’. 

வழக்கம்போல சாதி/மதம் தாண்டி பூக்கும் காதல். வழக்கம்போல வரும் ஆதிக்க சாதி குடும்பத்தின் எதிர்ப்பு. வழக்கம்போல நிகழும் போராட்டம். வழக்கம்போல ஒரு நெகட்டிவ் அல்லது பாஸிட்டிவ் கிளைமேக்ஸ்... என்று அதையும் முடிவு செய்ய நாம் எத்தனிக்கையில், இதுதான் பேரழிவு பற்றிய படமாயிற்றே? அதாவது Disaster Movie ஆயிற்றே? "மொத்த இடத்திலயும் வெள்ளத்த விடுங்க! பாஸிட்டிவ், நெகட்டிவ் எல்லாம் அப்பறமா யோசிக்கலாம்..." என்கிற ரீதியில் செயல்பட்டிருக்கிறது படக்குழு. இதுதான் இந்தப் பொறுமையைச் சோதிக்கும் காதல் காவியத்தின் ஸ்கெலிட்டன்.

கேதார்நாத் மலையில் இருக்கும் சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும், அவர்கள் பொருளையும் சுமக்கும் தொழிலாளி மன்சூர். இந்து கோயிலுக்கு வரும் பக்தர்களைச் சுமக்கும் முஸ்லிம் மன்சூர் மீது பாகுபாடு காட்டப்பட்டாலும், அதனை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆகக் கடந்து செல்லும் வழக்கமுடையவன். கோயிலுக்கு அருகில் பக்தர்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வரும் ஆதிக்க சாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் முக்கு. மன்சூருக்கும் முக்குவுக்கும் காதல் பிறக்க, சமூகம் அதனை எதிர்க்கிறது. பல தடைகள் வருகின்றன. இறுதியாக பெரு வெள்ளமும் ஏற்பட, காதலர்கள் இணைந்தார்களா என்பது மீதிக்கதை. மன்சூராக சுஷாந்த்சிங் ராஜ்புத்; 

பாலிவுட்டில் இது பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் கதையின் நாயகர்களாகவும், வெறும் நாயகன் நாயகியாகவும் அறிமுகமாகும் சீசன். சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அறிமுகமான 'தடக்' படம் நினைவிருக்கலாம். அப்படியொரு வெயிட்டான காதல் கதையை எடுத்துக்கொண்டு அல்லது எடுத்ததாக நினைத்துக்கொண்டு நடிகர் சயிஃப் அலிகான் மற்றும் நடிகை அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலிகான் 'கேதர்நாத்' படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியிருக்கிறார். 'தடக்' ஆங்காங்கே தடதடத்தாலும், அதன் ஒரிஜினல் மராத்திய படமான 'சாய்ராட்' படத்துடன் அதை ஒப்பிட்டுக் குறைத்தே மதிபிடப்பட்டது. அப்படி இந்த 'கேதர்நாத்' படத்தை எதனுடனேனும் ஒப்பிடவேண்டும் என்றால், இந்திய சினிமாவில் மட்டுமே ஆயிரம் படங்களுக்கும் குறைவில்லாமல் தொகுத்து ஒரு லிஸ்ட் போட்டுவிடலாம். அந்த அளவுக்கு "அப்பறம், அடுத்த சீன் இதானா?" என்கிற ரீதியில் படத்தின் 10வது காட்சியை 3வது காட்சிலேயே கணித்துவிடலாம். 

சாராவுக்கு நல்ல துடிப்பான அறிமுகம்தான். ஆனால் போல்டான அவரின் இந்தக் கதாபாத்திரம்தான் கடந்த சில வருடங்களாக பரினிதி சோப்ரா, அனுஷ்கா ஷர்மா, கரீனா கபூர் ஆகியோர் செய்து வரும் ரோல்கள்தான். இவ்வளவு ஏன், 'தடக்' ஜான்வியும் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான். அதாவது ஒரு ஸ்டிரிக்ட்டான மதச் சாயம்கொண்ட குடும்பத்தில் துடிப்பாக எல்லோரையும் எதிர்த்துக்கொண்டு சுதந்திரமாக மனம் நினைத்ததைச் செய்யும் கதாபாத்திரம். சாரா அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால், 'வெல்கம் டூ பாலிவுட்' என்று சொல்லத்தான் மனசு வரவில்லை. அடுத்த படம் வரையில் வெயிட் லிஸ்டிங்கில் வைப்போம். 

படத்தின் மிகப்பெரிய ஆறுதல் 'தோனி'யாக கலக்கிய சுஷாந்த்சிங் ராஜ்புத். இறுகிய முகத்தோடு ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் இளைஞனாக தன்னுடைய சிறந்த நடிப்பையே வழங்கியிருக்கிறார். குறிப்பாக இடைவேளையில் "இதுவரை உங்களுக்கு இடையில் நாங்கள் நிற்கவில்லை. உங்களுடன் சமமாக்கத்தான் நின்றிருந்தோம்" என்று ஆதிக்கச் சாதி வில்லனுடன் வாக்குவாதம் செய்யும்போது மிளிர்கிறார். கிரிக்கெட் என்றவுடன் சாரா அதை டிவியில் பார்ப்பது, இவர் அதை ரேடியோவில் கமென்டரியாக கேட்பது... அவர்கள் இருவரும் இருக்கும் சமூக அடுக்குகளைக் குறித்து சொல்லாமல் சொல்கிறது. ஆனால், அதே கிரிக்கெட்டும் டிவியும்தான் இவர்கள் காதல் மலரவும் உதவுகிறது.

சாராவுக்கு ஓர் அப்பா இருக்கிறார். அவர் இவர்கள் காதலை எதிர்க்கிறார். வில்லனாக ஒருவன் இருக்கிறான். அவன் சாராவை அடைய விரும்புகிறான். சுஷாந்த் சிங்க்குக்கு ஓர் அம்மா இருக்கிறார். அவர் இந்தக் காதல் வேண்டாம் என்கிறார். மகன் போனால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கொட்டும் மழை என்பதை மறந்து ஸ்டவ் மண்ணென்ணையை மேலே ஊற்றிக்கொள்கிறார். இப்படி எல்லாமே நாம் பார்த்து பழகிய சீரியல் ரக கேரக்டர்கள்தான். 

சரி, படத்தில் என்னதான் புதுசு என்றால்... அது கேதர்நாத்தைச் சுற்றி வாழும் மக்களின் உலகத்தைப் பதிவுசெய்த விதம். கேதார்நாத்தில் கடவுளைத் தரிசிக்க மலைகள் கடந்து செல்ல வேண்டும். அதற்காகவே கூலித்தொழிலாளிகள் பணியாற்றுகிறார்கள். மனிதர்களை முதுகில் தூக்கிச் சுமந்து, மலைகளின் ஊடாகக் கடவுளின் முன் கொண்டுசென்று நிறுத்தும் அந்தப் பணியைச் செய்யும் முஸ்லிம் தொழிலாளியாக சிறப்பாக நடித்திருக்கிறார் சுஷாந்த்சிங் ராஜ்புத்.  

அது தவிர படத்தில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் அந்தக் கடைசி 20 நிமிடங்கள். திக்திக்கென இல்லாவிட்டாலும் அந்தப் பேரிடர் வெள்ளக்காட்சி நன்றாகவே படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக VFX குழுவுக்குத் தாராளமாக ஒரு பூங்கொத்தை நீட்டலாம். கேதர்நாத் கோயில் கோபுரத்தின் உயரத்தைத் தாண்டி பாயும் பேரலைகள், உடைந்து நொறுங்கும் கடைகள், மக்களின் வாழ்விடங்கள், தவிக்கும் மக்கள் என ஸ்கிரிப்டுக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவாளரின் கேமராவும் கிராபிக்ஸ் குழுவின் உழைப்பும் பயணித்திருக்கிறது. வெள்ளப் பேரிடர் ஒன்றில் சிக்கிய உணர்வைத் தத்ரூபமாக அந்தக் காட்சிகள் பதிவுசெய்திருந்தன. 

ஆனால், அதுதவிர படத்தின் மீதி காட்சிகள் அனைத்தும் அந்த உழைப்புக்கு எந்தவித நியாயமும் சேர்க்கவில்லை. அந்தக் காட்சிகள் எல்லாம் வேறு ஏதேனும் படமோ என்கிற எண்ணங்கள் எல்லாம் எழுகின்றன. இப்படியொரு செம சீக்வென்ஸ் இறுதியில் இருக்கிறது என்ற தைரியத்திலேயே முன்னர் படத்தை அப்படி அலைபாயவிட்டார்களா தெரியவில்லை. அமித் திரிவேதியின் இசையில் 'நமோ' பாடல் மட்டுமே ஈர்க்கிறது. என்னாச்சு அமித்ஜீ?

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆணும், இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலிப்பதாக உருவாக்கப்பட்டிருப்பதால், உத்தராகண்ட் மாநில அரசு ‘கேதார்நாத்’ படத்தைத் தடைசெய்துள்ளது. இப்படியான காட்சிகளால் இந்துக்களின் உணர்வு புண்பட்டு, சட்ட ஒழுங்கு சீர்கெடும் என அறிவித்திருக்கிறார் உத்தராகண்ட் மாநில சுற்றுச்சுழல் துறை அமைச்சர் சத்பால் மகராஜ்.

கிளைமேக்ஸ் கிராபிக்ஸ் காட்சியை மனதில் வைத்து, அதற்குக் கொட்டிய உழைப்பைக் கதையிலும், திரைக்கதையிலும் கொஞ்சம் கொட்டியிருக்கலாம். அதைச் செய்யாததால், ’கேதார்நாத்’ மறக்க வேண்டிய பயணமாக நிற்கிறது.