Published:Updated:

"வழக்கமான போலீஸ், வழக்கத்திற்கு மாறான மேஜிக்!" - 'அடங்க மறு' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
"வழக்கமான போலீஸ், வழக்கத்திற்கு மாறான மேஜிக்!" - 'அடங்க மறு' விமர்சனம்
"வழக்கமான போலீஸ், வழக்கத்திற்கு மாறான மேஜிக்!" - 'அடங்க மறு' விமர்சனம்

காவல் துறையின் உதவியுடனேயே 'ஆதாரம் இல்லை' எனக் குற்றவாளிகள் தப்பிப்பதைத் தடுக்க முடியாத காவல் துறை அதிகாரி ஒருவர், பணியில் இருந்து விலகி அதே பாணியில் ஆதாரம் இல்லாமல் அத்தனைபேரையும் தண்டிப்பதே, 'அடங்க மறு'!

ஐ.பி.எஸ் கனவோடு இருக்கும் கடமை தவறாத காவல் துறை அதிகாரி, ஜெயம் ரவி. இளம்பெண் ஒருவரது கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து செல்லில் அடைக்க, அதிகார பலமும், பண பலமும் பொருந்திய அந்தக் குற்றவாளிகள் அனைவரும் எளிதாக வெளியே வருகிறார்கள். ஜெயம் ரவியைப் பழிவாங்க அழகான அவரது குடும்பத்தை வில்லன் கும்பல் எரித்துக் கொல்ல, வேலையை விட்டுவிட்டு குற்றவாளிகளை வேட்டையாடக் கிளம்புகிறார், ரவி. காவல் துறையில் பணியாற்றிய அனுபவத்தையும், தனது டெக்னாலஜி மூளையையும் பயன்படுத்தி, உண்மைக் குற்றவாளிகள் அத்தனைபேரையும் ஆதாரம் இல்லாமல் எப்படி அழித்தார் என்பதே மீதிக் கதை. 

போலீஸ் கதாபாத்திரத்திற்கு நேர்ந்துவிட்ட உடல், ஜெயம் ரவிக்கு! காவல் துறை அதிகாரியாக துடிப்போடு இருப்பது, அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாமல் முடங்கும்போது பொங்குவது, அந்த இளம்பெண் இறந்துவிட்டதை அவளது தந்தையிடம் சொல்லமுடியாமல் உடைந்து நிற்பது, குடும்பத்தைப் பறிகொடுத்து வெடித்து அழுவது... எனப் படம் முழுக்க பக்காவாக ஸ்கோர் செய்திருக்கிறார். 

வழக்கமான கமர்ஷியல் கதைகளுக்கென்றே செதுக்கப்பட்ட கதாபாத்திரம், ராஷி கன்னாவுக்கு! அழகாக சில காட்சிகளில் வந்துபோவதைத் தாண்டி பெரிய வேலையில்லை. பொன்வண்ணன், பாபு ஆண்டனி, ராமதாஸ், சம்பத், மைம் கோபி, சுப்பு பஞ்சு, பூர்ணா... எனப் படத்தில் பல கதாபாத்திரங்கள். அத்தனைபேரும் நிறை குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள். அழகம் பெருமாளின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம். 'மெஜாரிட்டி' காவல் துறை அதிகாரியின் நிலையை, உடல்மொழியாலேயே கடத்துகிறார். 

சாம் சி.எஸ்ஸின் இசையில் 'சாயாளி' பாடல் ஈர்க்கிறது. ஒரே தீம் மியூசிக் படம் முழுக்க வருவதால், பின்னணி இசையில் ஈர்ப்பு இல்லை. வில்லன்களுக்கு ஜெயம் ரவி கொடுக்கும் விதவிதமான தண்டனைகளைத் தத்ரூபமாகப் படம்பிடித்திருக்கிறது, சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு. லாஜிக் மேஜிக்குகளை எல்லாம் மீறி, ஜிவ்வெனப் பறக்கும் திரைக்கதையின் வேகத்துக்குப் பெரிதும் துணை நிற்கிறது, ரூபனின் எடிட்டிங். ஹீரோ கொடுக்கும் தண்டனைகளுக்குக் கலை இயக்கமும் ஆங்காங்கே கை கொடுத்திருக்கிறது.

போலீஸ் அதிகாரிகளைக் கம்பீரமாகக் காட்டும் படங்களின் பட்டியல் நீளம். ஆனால், அவர்களின் தடுமாற்றங்களைக் காட்டும் படங்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவு. அதில், 'அடங்க மறு'வும் ஒன்று. புது எஸ்.ஐயாக ஜெயம் ரவி தடுமாறும், அவமானப்படும் காட்சிகளும் சரி, அழகம் பெருமாளின் காட்சிகளும் சரி... நிஜத்தைப் பிரதிபலிக்கின்றன.  

'குடும்பத்தைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் ஹீரோ' என்ற மிகப் பழைமையான ஒருவரிக் கதைக்கு, காவல் துறை, பெண்கள் மீதான வன்முறை, பண பலம், அதிகார பலம், சமூக நிலை... என எல்லாம் சேர்த்துப் பிசைந்து திரைக்கதை ஆக்கியிருக்கிறார், இயக்குநர் கார்த்திக் தங்கவேல். ஆனால், திரைக்கதையில் காட்டியிருக்கும் மேஜிக் விறுவிறுப்பைக் கூட்டி, 'என்னனுதான் பார்ப்போமே!' எனப் பிடித்து நிறுத்துகிறது. அதேசமயம், பெரும் பணக்காரர்கள் என்றாலே நெகட்டிவ் மனநிலையோடுதான் திரிவார்கள், கொலை, சமூக விரோதச் செயல்கள் போன்றவையெல்லாம் அவர்களது 'ஹாபி'யில் ஒன்றெனக் காட்சிப்படுத்தும் படங்கள் தமிழில் இன்னும் எத்தனைதான் வரும் எனத் தெரியவில்லை?!  

அதீத புத்திசாலியாக வரும் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் ரசனைதான். அதற்காக, எதற்கெடுத்தாலும் ஹேக்கிங், ஹேக்கிங், ஹேக்கிங்... என்றே சுற்றித் திரிவதால் ஒருகட்டத்திற்குமேல், 'அடுத்து என்ன ஹேக்கிங்கா?' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. கொடூர குற்றவாளிகள் என்றால், அவர்களை உடனுக்குடன் கொன்றுவிட வேண்டும் என்ற இயக்குநரின் கோபம், 'அந்த' மொபைல் கேம் மூலமாகத் தெரிகிறது. 'தவறு செய்த இவனைக் கொலை செய்யுங்கள்' என மக்களை நேரடியாக அழைக்கும் அந்தக் காட்சியை, 'கமர்ஷியல் சினிமாவில் இது சகஜம்' எனக் கடந்துவிடலாம் என்றாலும், அது சரியா, தவறா என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. 

மொத்தத்தில், திரைக்கதை மூலம் ரசிகர்களைக் கட்டிப்போடலாம் என நினைத்த இயக்குநர் கார்த்திக் தங்கவேல், டெக்னாலஜி மீது மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி எழுதாமல், கதையையும் கொஞ்சம் கூர் தீட்டியிருந்தால் 'அடங்க மறு' போலீஸுக்கு ராயல் சல்யூட் அடித்திருக்கலாம்!