Published:Updated:

'ஹீரோ மன்மோகன் சிங்.. வில்லன் சோனியா காந்தி!' #TheAccidentalPrimeMinister எப்படி?

ர.முகமது இல்யாஸ்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பத்தாண்டுக் கால ஆட்சியைப் பற்றிய திரைப்படமாக வெளியாகியுள்ளது #TheAccidentalPrimeMinister.

'ஹீரோ மன்மோகன் சிங்.. வில்லன் சோனியா காந்தி!' #TheAccidentalPrimeMinister எப்படி?
'ஹீரோ மன்மோகன் சிங்.. வில்லன் சோனியா காந்தி!' #TheAccidentalPrimeMinister எப்படி?

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 100 நாள்களே இருக்கின்றன. கூட்டணி பேரங்களும், தேர்தல் பிரசாரங்களையும் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. இப்படியான சூழலில் வெளிவந்திருக்கிறது `தி ஆக்ஸிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்’ திரைப்படம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பத்தாண்டுக் கால ஆட்சியைப் பற்றிய திரைப்படமாக இது வெளியாகியுள்ளது. 

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, 2004 முதல் 2008 வரை பிரதமர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு ஆலோசகராகச் செயல்பட்டவர் சஞ்சய் பாரு. 2014 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு, `தி ஆக்ஸிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் வெளிவந்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்தப் புத்தகத்திலிருந்து தழுவி உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம். புத்தகம் மன்மோகன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவது முதல் 2008 வரை பதிவுசெய்யப்பட்டு இருந்தாலும், திரைப்படம் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பது வரை நிகழும் சம்பவங்களைப் பற்றிப் பேசுகிறது.

2004 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுகிறது. சோனியா காந்தி பிரதமராக முடியாது என்பதால், ராகுல் காந்தி வளரும் வரை, பிரதமர் அலுவலகமும் பதவியும் மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்படுகிறது. சோனியா காந்தியின் கட்டுப்பாட்டின் கீழ், கடும் அழுத்தங்களுடன் மன்மோகன் சிங் பணியாற்றுவதாக இந்தத் திரைப்படம் சித்திரிக்கிறது. படம் முழுவதும் சஞ்சய் பாரு பார்வையாளர்களிடம் உரையாடிக்கொண்டே, அரசியல் சூழலைப் பற்றிப் பேசுகிறார். 

மன்மோகன் சிங்காக அனுபம் கேர் நடித்திருக்கிறார். மன்மோகன் சிங்காக அனுபம் கேர் நடிப்பதற்கும், அவரது கடந்த கால பின்னணிக்கும் பெரும் பங்குஇருக்கிறது. பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவரான அனுபம் கேர், 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தனது பிஜேபி ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்திக்கொண்டு இருப்பவர் அனுபம் கேர். அவரின் மனைவி கிரோன் கேர் பிஜேபியைச் சேர்ந்தவர்; தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிப்பவர். 

மன்மோகன் சிங்கைப் பல இடங்களில் நினைவுபடுத்த முயன்றிருக்கிறார் அனுபம் கேர். தன் நடை, பேச்சு, பாவனை என அனைத்தையும் மாற்றியிருக்கிறார். ஆனால் படத்தின் நடுவில், நிஜ மன்மோகன் சிங் வரும் வீடியோக்களை சேர்த்திருப்பதால், உண்மையான மன்மோகனுக்கும், அனுபம் கேரின் மன்மோகனுக்கும் இருக்கும் வித்தியாசம் வெளிப்படுகிறது. `பேசாதவர்' என விமர்சிக்கப்படும் உண்மையான மன்மோகன் சிங், அனுபம் கேரின் நடிப்போடு கம்பேர் செய்யும் போது கம்பீரமாகத் தெரிகிறார். அனுபம் கேரின் அதீத ஓவர் ஆக்டிங் இதில் அப்பட்டமாகத் தெரிகிறது. 

சோனியா காந்தி முதல் ப.சிதம்பரம் வரை ஒவ்வொரு கதாபாத்திரமும் வந்து செல்கிறார்கள். ஒரு கட்டத்தில் மொத்தத் திரைப்படமுமே பேன்சி ட்ரெஸ் போட்டி போலத் தெரிகிறது. ஜெர்மனியில் பிறந்தவரான சுசான் பெர்னெர்ட் சோனியா காந்தியாக நடித்திருக்கிறார். எந்நேரமும் சிடுசிடுவென இருக்கும் முக பாவனையுடன், கட்டளை பிறப்பிக்கும் சர்வாதிகாரியாகச் சோனியா காட்டப்பட்டு இருக்கிறார். ராகுல் காந்தி கதாபாத்திரம் அரசியலில் இறக்கிவிடப்பட்ட பணக்கார வீட்டுப்பிள்ளையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதையைச் சொல்பவராக வரும் சஞ்சய் பாருவின் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் கண்ணா நடித்திருக்கிறார். பார்வையாளர்களிடம் அவர் பேசும் ஆரம்பக் காட்சிகள் மெள்ள மெள்ள பிற்பாதியில் அலுப்பைத் தருகிறது. 

`தி ஆக்ஸிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் விஜயகுமார் கட்டே. ஒரு நாட்டின் பிரதமர் பற்றிய வரலாற்றுத் திரைப்படம் பிரதமர் அலுவலகம், சோனியா காந்தி இல்லம் மற்றும் சில வி.ஐ.பிக்கள் மட்டுமே உலவும் இடங்களில் நிகழ்கிறது. இதுவே இந்தத் திரைப்படத்துக்கு மெகா சீரியல் எபெக்ட்டை அளிக்கிறது. 

`மன்மோகன் சிங் பீஷ்மர் போன்றவர். குடும்பத்துக்காக எந்த முடிவையும் எடுக்கக் கூடியவர். மகாபாரதத்திலாவது இரண்டு குடும்பங்கள் இருந்தன; துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் ஒரே குடும்பம்தான் இருக்கிறது’ என்று வெளிப்படையாகக் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வெளியாகியுள்ளது இந்தத் திரைப்படம். ஆனால் அந்த விமர்சனம் முழுவதும் பிரசார ரீதியில் மட்டுமே இருக்கின்றன.

இந்தியாவில் தேர்தல் அரசியலைப் பற்றிய நேரடி விமர்சனங்களுடன் வெளிவரும் திரைப்படங்கள் மிகச் சொற்பம். 'தி ஆக்ஸிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்' திரைப்படம் புத்தகமாக வெளிவந்த போதே, பிஜேபியின் பிரசார உத்தி எனக் குற்றம் சாட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சியையும், மன்மோகன் ஆட்சியையும் பற்றி நடுநிலையுடன் விமர்சித்திருக்கலாம். ஆனால் இந்தத் திரைப்படம் வெறும் பிஜேபியின் பிரசாரத் திரைப்படம் என்பதோடு சுருங்கி நிற்கிறது. 'தி ஆக்ஸிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்' படத்தின் ட்ரைலர் பிஜேபியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ப்ரோமோட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஒரே நாளில், `உரி' என்ற தலைப்பில்  பி.ஜே.பி ஆட்சியில் பாகிஸ்தானில் நடைபெற்ற ராணுவத் தாக்குதல் பற்றிய படத்தின் மூலம் பிஜேபி பலமான கட்சி என்றும், `தி ஆக்ஸிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்' மூலம் காங்கிரஸ் பலவீனமான கட்சி என்றும் தன் தேர்தல் பிரசாரத்தை பாலிவுட் மூலம் தொடங்கியிருப்பதை உணர்த்தியிருக்கிறது.