Published:Updated:

இது படமா இல்ல பிரசாரமா? - `உரி' படம் எப்படி?

ப.சூரியராஜ்
சுஜிதா சென்
இது படமா இல்ல பிரசாரமா?  - `உரி' படம் எப்படி?
இது படமா இல்ல பிரசாரமா? - `உரி' படம் எப்படி?

 2016- ம் ஆண்டு, பாகிஸ்தான் கட்டுபாட்டில் உள்ள எல்லை கோட்டுப் பகுதிக்குள், இந்தியா ராணுவத்தின் ஸ்பெஷல் பாரா கமாண்டோ படை நடத்திய`சர்ஜிக்கல் ஸ்டிரைக்'கை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம். #URI

உரி எனும் இடத்துக்குள் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவி நடத்தும் தாக்குதலில், பல இந்திய வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். அதில்
துரதிர்ஷ்டவசமாக, நாயகனின் மச்சானும் உயிரிழக்கிறார். இதற்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு, `சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்த திட்டம் தீட்டுகிறது இந்திய அரசு. அந்த குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பில், நாயகன்
நியமிக்கப்படுகிறார். தனது மச்சானை அழித்த, தன் தாய் நாட்டை அழிக்கத் துடிக்குற தீவிரவாதிகளை, நாயகன் பழிக்குப் பழி வாங்கினாரா, இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை!

`சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குழுவை வழிநடத்தும் மேஜர் விகான் சிங்காக விக்கிகவுசல். திடகாத்திரமான உடலமைப்பும், கம்பீரமான உடல்மொழியும் கதாபாத்திரத்தில் அவரைப் பக்காவாகப் பொருத்தியிருக்கிறது. போர், சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் மனிதர். ரா ஏஜென்டாக யாமி கௌதம். அளவான நடிப்பு. மோகித் ரெய்னா, மான்சி பரேக் கோகில், கிர்த்தி குல்ஹரி, பரேஷ் ராவல் எனச் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அத்தனை பேரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராஜ்நாத்சிங், அஜித் தோவல், தல்பீர் சிங் போன்றோர்களின் முக அமைப்பை ஒத்த நபர்களை தேடிப்பிடித்து, அந்தந்த கதாபாத்திரத்தில் நன்றாக நடிக்கவைத்திருப்பது சிறப்பு!

இயக்குநர் ஆதித்யா தாருக்கு இதுவே முதல் திரைப்படமாம், ஆச்சர்யமாய் இருக்கிறது. நிஜ சம்பவங்களை அழகாய்க் கோத்து, நல்ல சினிமாவுக்கான திரைக்கதை செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில், வசனங்கள் கூஸ் பம்ப்ஸ்! ரொம்பவே ஃபீலிங்காகி சிலர் அரங்கினுள் எழுந்து சல்யூட் அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. சஸ்வத் சச்தேவின் பின்னணி இசை படம் கடத்த வரும்
உணர்வுகளுக்குக் கை கொடுத்திருக்கிறது. இறுதிக்காட்சியில் வரும் ராப், ஆவ்ஸம்! மிதேஷ் மிர்சாந்தனியின் ஒளிப்பதிவு துல்லியம். சண்டைக் காட்சிகளில், சண்டை வடிவமைப்பாளர் ஸ்டீபன் ரிச்சரோடு இணைந்து மிரட்டலான விஷுவல்களை வழங்கியிருக்கிறார்.படத்தில், ``நல்ல மகன் தனது தாயை பத்திரமாகப் பாதுகாப்பான். அதேபோல், இந்தத் தாய் நாட்டையும் தன் தாயைப் போல் அவன் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும்" என பிரதமர் சொல்கிறார். அவர் பார்ப்பதற்கு அப்படியே `ஏழைத்தாயின் மகன்' போலவே இருக்கிறார். அவர்களும் அவர் யாரென்று சொல்லவில்லை, அதனால் நாமும் அந்த ஏழைத்தாயின் மகன் பெயரைச் சொல்லவில்லை. இந்தத் தாக்குதலில் இந்திய இராணுவத்திற்குப் பெருமளவு உதவியதாக, இயந்திர கழுகு ஒன்றைக் காட்டுவதும், அது ராமாயணத்தில் வரும் கருடன் பாத்திரத்திலிருந்து இன்ஸ்பையர் செய்யப்பட்டதாகச் சொல்வதுமென, மறைமுகமாக ராமர் அரசியலையும் பேசியிருக்கிறார்கள். அரசியல் எல்லாம் மறந்து, வெறும் படமாக மட்டும் பார்த்தால் சீட் நுனிக்குக் கொண்டு வரும் போர் திரைப்படம்தான். ஆனாலும், படத்தில் நடித்திருக்கும் மோடி, ராஜ்நாத் சிங், அஜித் டோவலின் `லுக் அலைக்'கள், `உரி'யை வெறும் படமாக மட்டும் பார்க்கச் செய்யாமல் தடுக்கின்றன! இது உண்மை கதைதான் என்கிறார்கள் .முதலில், எதுதான் உண்மை?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள்கள் நெருங்கிவிட்டது. விதவிதமான வடிவங்களில் கட்சிகளும் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டன. `உரி' திரைப்படம், அதில் ஒரு வடிவமாக மட்டுமே தெரிகிறது.