Published:Updated:

"மெடிக்கல் மிராக்கிள் மிஸ்ஸிங் சீனு!" - 'கண்ணே கலைமானே' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

கமலக்கண்ணன் என்னும் இயற்கை விவசாயியின் வாழ்க்கையில் நிகழும் சில சம்பவங்களின் தொகுப்புதான் இந்த கண்ணே கலைமானே.

"மெடிக்கல் மிராக்கிள் மிஸ்ஸிங் சீனு!" - 'கண்ணே கலைமானே' விமர்சனம்
"மெடிக்கல் மிராக்கிள் மிஸ்ஸிங் சீனு!" - 'கண்ணே கலைமானே' விமர்சனம்

இயற்கை விவசாயம், மண்புழு உரம், எளியவர்களுக்கு வலியச் சென்று லோன் வாங்கித்தருவது என உள்ளத்தில் நல்ல உள்ளமாக ஊரில் சுற்றுகிறார், கமலக்கண்ணன். அதே ஊரில் இருக்கும் கிராம வங்கியில் பணி மாறுதலின் பெயரில் புதிதாக வருகிறார், வங்கி மேலாளர் பாரதி. இருவருக்குமான மோதல், புரிதல், காதல், கல்யாணம் என விரிகிறது திரைப்படம். 

கமலக்கண்ணனாக, உதயநிதி ஸ்டாலின். 'நிமிர்' படத்தைப் போலவே இதிலும் ஃபாரின் பாடல், பறக்கும் சண்டைக் காட்சிகள் என ஏதுமற்ற மற்றுமொரு யதார்த்தமான கதாபாத்திரம். மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். இந்த மாறுபட்ட உதயநிதி, திரையில் பார்க்கவும் நன்றாகவே இருக்கிறார். வங்கி அதிகாரி பாரதியாக, தமன்னா. மேக்-அப், கிளாமர் ஏதுமற்ற கதாபாத்திரம். சிறப்பாகவே நடித்திருக்கிறார். படத்தில் கிட்டத்தட்ட கதையை நகர்த்தும் கனமான கதாபாத்திரம் தமன்னாவுடையதுதான். ஆனால், 'நெக்ஸ்ட் நெக்ஸ்ட்' என்றே நகரும் காட்சிகள், இது என்ன மாதிரியான படம் என்ற உணர்வை உண்டாக்குகிறது.   

கமலக்கண்ணனின் பாட்டியாக வடிவுக்கரசி, தந்தையாக பூ ராமு, தோழியாக வசுந்தரா, பாரதியின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் நபராக ஷாஜி... என ஆங்காங்கே நல்லதோர் நடிப்பை நல்கும் கதாபாத்திரங்களும் படம் நெடுக இருக்கின்றன. படத்தில் ஒருவர் இருவர் அல்ல, இருக்கும் எல்லோரும் நல்லவர்களாக, ரொம்ப நல்லவர்களாக, ரொம்ப ரொம்ப நல்லவர்களாகவே இருப்பது, நல்லதா சீனு?! அப்பத்தாக்களுக்கே உரிய வித்தியாசமான தோரணையில், வடிவுக்கரசி. அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதுபோன்ற பாத்திர வார்ப்பு. கமலக்கண்ணனின் நண்பர்களாக வருபவர்கள், 'அட போங்க பாஸ்' என்ற மனநிலையைக் கொடுக்கிறார்கள்.  

ஊர்த் திருவிழாவில் ஆரூடம் சொல்லும் சாமியாடியிடம் ஆரம்பிக்கிறது, படம். பின்னர், இயற்கை விவசாயம், மாட்டு லோன், கல்விக் கடனின் அதீத வட்டி, நீட் தேர்வு, விவசாய லோன், பூச்சிக் கொல்லி மருந்து, கடன் தொல்லை என ஒரு கட்டத்துக்கு மேல், அரசு விளம்பரப் படம் போல எங்கெங்கு காணினும், 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்' டைப் வசனங்கள்தான். உறவுகளுக்குள் நிகழும் 'மாடர்ன் வெர்சஸ் பாரம்பரிய' சிக்கல்களைக் காட்சிப்படுத்திய விதமும் ஆஹாங்! முக்கியமாக, இதெல்லாம் படத்தின் கதைக்கும், திரைக்கதை நகர்விற்கும் எந்த வகையில் உதவியாக இருக்கிறது என்பது, இயக்குநருக்குத்தான் தெரியும். இரண்டு மெச்சூர்டான கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் நிகழும் உறவின் சிக்கல்கள் என எழுத்தில் சுவாரஸ்யமாக இருக்கிறது, 'கண்ணே கலைமானே'. ஆனால், அதற்கான காட்சிகளையோ, உறவுமுறைச் சிக்கல்களில் நிகழும் பிரச்னைகளையோ சரிவர காட்சிப்படுத்தவில்லை, இயக்குநர் சீனு ராமசாமி.

முதல் காட்சியில், 'கொடுத்த காசை திருப்பிக் கொடுக்க வக்கில்ல; உனக்கு கர்ணன்னு பேரா?' என்கிற நகை முரணுடன் வேஷம் கட்டிய ஒருவரை அடிக்கிறான், வில்லன். பின், படம் முடியும் தருவாயில் வில்லன் என்கிற ஒரு வஸ்துவே மறந்துவிட்டதொரு சூழலில் மீண்டும் அவர் வருகிறார். இவை எல்லாம் முடிந்து, படத்தின் மையக் கரு ஆரம்பிக்கிறது. அதை நோக்கிய நெகிழ்ச்சித் தருணங்கள் சரிவர ஆரம்பிக்கும் முன்னரே, படம் முடிந்துவிடுகிறது. படத்தில் சில கருத்துகள் இருக்கலாம், சில கதைகள் இருக்கலாம். காட்சிக்குக் காட்சி ஒரு கருத்து, கதை... என திக்குத் தெரியாமல் மோதி நிற்கிறது, திரைக்கதை. படத்தின் பெரும் பலவீனம், திரைக்கதையில் எந்தவித ஏற்ற இறக்கங்களும் இல்லாமல் தேமேவென இருப்பதுதான். 

சோழவந்தான் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பசுமையையும், வறட்சியையும் ஒரு சேரப் பதிவுசெய்திருக்கிறது, ஜலந்தர் வாசனின் கேமரா. மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு இன்னும் படத்தை விரைவாகக் கட் செய்திருக்கலாம். மதிச்சியம் பாலாவின் குரலில், 'அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா' நாட்டுப்புறப் பாடல் மட்டும்தான் தாளம்போட வைக்கிறது. பின்னணி இசையில் கவனம் ஈர்த்தாலும், யுவனின் பாடல்களும், வைரமுத்துவின் வரிகளும் படத்துக்கு உறுதுணையாக இல்லை. 

'கண்ணே கலைமானே' தலைப்புக்கு ஏற்றாற்போல், இன்னும் அதிக கனத்துடன் படம் இருந்திருந்தால், பார்வையாளர்களின் கண்களும் நனைந்திருக்கும்.

'எல்கேஜி' விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யலாம்.