Published:Updated:

சிங்கிள் சிங்கம் மேல சவாரி அடிச்சிருக்கீங்களா? டிக்டேட்டர் திரை அலசல்

விகடன் விமர்சனக்குழு
சிங்கிள் சிங்கம் மேல சவாரி அடிச்சிருக்கீங்களா? டிக்டேட்டர் திரை அலசல்
சிங்கிள் சிங்கம் மேல சவாரி அடிச்சிருக்கீங்களா? டிக்டேட்டர் திரை அலசல்

முன் குறிப்பு : ’டிக்டேட்டர்’ படத்தின் ஒரு காட்சியில் தன்  அடியாட்களை யார் இப்படி அடித்து துவைத்தது என்று தெரியாமல் வில்லன் இப்படிக் கூறுவான். " He is more dangerous than everyone". ஆம் அது தான் நம் பாலையா.

தான் உண்டு தன் வேலை உண்டு என  நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பாலையா, அவருடைய ஏரியாவில் குடியேறும் சோனல் சவுகானை ஒரு ஆபத்தான பிரச்சனையிலிருந்து மீட்க, அந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது. தன்னை காப்பாற்றிய பாலையாவை சோனலுக்கு பிடித்துப் போக அப்புறம் என்ன ! அடுத்த இரண்டரை மணி நேரம் இந்த பக்கம் டூயட் ஆடிக்கொண்டே, அந்தப் பக்கம் பல அதிரடி டுவிஸ்டுகளால் ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையில் நின்று விளையாடி, எதிரிகளை தீர்த்துக் கட்டும் ஆக்‌ஷன் திருவிழாவை அரங்கேற்றுகிறார் பாலுக்குட்டி.

சிங்கிள் சிங்கம் மேல சவாரி அடிச்சிருக்கீங்களா? டிக்டேட்டர் திரை அலசல்

ஆதி காலம் தொட்டே நாம் பார்த்துப் பழகிய, அரத பழசான இது போன்ற கதைகளில் பாலையாவே இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் நடித்துவிட்டார். இருந்தாலும் குனிந்து, நிமிர்ந்து, வளைந்து,நெளிந்து குத்தாட்டம் போடும் அதே இளமை, பல லட்சம் டெசிபலில் பன்ச் டயலாக்கை உச்சஸ்தாயில் தெறிக்கவிடும் துடிப்பு என மனிதனின் மேனரிஸம் எள்ளளவும் குறையவில்லை.

சூப்பர் மார்க்கெட்டில்  சூப்பர்வைசராக வேலை செய்பவராக வலம் வரும் சந்து தான் நம்ம பாலையா. மாஸ் இன்ட்ரோ பாடலில் அறிமுகமாகும் பாலையா, மாமா நாசர் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஒரு ரெஸ்டாரண்டில் வைத்து வில்லன் குரூப் செய்யும் கொலையை நேரில் பார்த்துவிடும் சோனலின் அண்ணனை  தேடிக்கொண்டு வரும் வில்லன் , சோனலிடம் உன் அண்ணன் எங்க இருக்கான்னு ஒழுங்கா சொல்லிடு, இது உனக்கு வார்னிங், அடுத்த முறை சொல்லல.. உன்னை கொன்றுவிடுவேன். ஏன்னா நான் கொடூரமானவன் என தன்னை பற்றி செல்ஃப் இன்ட்ரோ கொடுத்துவிட்டு செல்கிறான். சினிமாவில் நடிகையாக விரும்பும் சோனல் சவுகான், சூப்பர் மார்க்கெட்டில் பாலையாவை ஒரு எதிர்பாரா தருணத்தில் சந்திக்க, அவர் மேல் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டு, உடனடியாக பாலையாவுடன் பாரீன் டூயட்டையும் முடித்துவிட்டு வந்துகொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியில் தன் அடியாட்களோடு வந்து சோனலை மடக்கும் அதே வில்லன் சோனலிடம், ஒழுங்கா சொல்லிடு, இல்ல அடுத்த முறை வரும்போது உன்ன கொன்னுட்டு தான் போவேன் என வழக்கமாக கூறிவிட்டுக் கிளம்பும்போது, பக்கத்தில் நிற்கும் பாலையாவிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டை குடுத்துவிட்டுப் போவது வில்லனின் நேர்மையை காட்டுகிறது. இதுபோல அடிக்கடி வந்து மிரட்டி மட்டுமே செல்லும் அந்த கொடூர வில்லன் சார், ஒரு வழியாக சோனலை கடத்தி விடுகிறார். உயிர் போகும் நிலையில் வில்லனின் இடத்தில் மயங்கிக் கிடக்கும் சோனலை, அந்த விசிடிங் கார்டை வைத்தே கண்டுபிடித்து காப்பாற்றும் பாலையாவால் அந்தப் பிரச்சனை பூதாகரமாகிறது. இதற்கிடையில் பாலையா பணிபுரியும் சூப்பர் மார்க்கெட்டில் ஐந்து லட்ச ரூபாய் காணாமல் போய்விட, தன்னுடன் பணிபுரிபவர் தான் தன் மகளின் திருமணத்திற்காக வேறு வழியில்லாமல்  திருவிட்டார் என்பதை கண்டறியும் பாலையா, அந்த திருட்டுப் பழியை தானே ஏற்கிறார். ஐந்து லட்சத்தை திருடியவன் என்று ஆந்திரா முழுவதும் ஊடகங்களில் பரபரப்பு ஏற்படுகிறது. ஒட்டுமொத்த மாநிலமும் இந்த ஐந்து லட்சம் திருடப்பட்ட செய்தியை வைரலாக்க, இந்த சம்பவத்தை டெல்லியில் நியூஸ் சேனலில் பார்க்கும் சுமன் தன் ஆட்களோடு ஐதராபாத்திற்கு விரைந்து வந்து, நீங்க நினைக்கிற மாதிரி சந்து, ஐந்து லட்சத்திற்கெல்லம் அலையுற சாதாரண ஆள் கிடையாது. இந்தியாவிலேயே அதிகமாக வருமான வரி கட்டுற மிகப்பெரிய கோடீஸ்வரன் "டிக்டேட்டர்" சந்திர சேகர தர்மா என்று கண்கள் புடைக்க பிளேஷ் பேக்குக்கு லீடு கொடுத்து, அவருக்கு அஞ்சலியோடு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்காரரான டிக்டேட்டர், எல்லாவற்றையும் விட்டுவிட்டு எதற்காக இப்படி வாழ்கிறார் ! சோனலின் பிரச்சனைக்கும், பாலையாவின் பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை இரண்டாம் பாதி பிளாஷ்பேக்கில் அஞ்சலியின் இரண்டு குத்தாட்டப் பாடல்களோடு, பாலையாவுக்கே உரிய அசகாய சூர காட்சிகளால் பொறி பறக்க விவரிக்கிறது திரைக்கதை. தனக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் முறியடித்து, அந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நம்பர் 1 வில்லனையும் அழிப்பதுதான் பாலையாவின் பாலிசி. ஆனால் அந்த நம்பர் 1 எதிரி இடத்தில் வில்லன் இல்லாமல், ஒரு லேடி வில்லி இருந்தால் ? என்ன தான் அதி பயங்கர வில்லியாகவே இருந்தாலும் நம் பாலையாவிற்கு தாய் குலத்தை கொல்வதற்கு எப்படி மனம் வரும்.. மிகப்பெரிய அரண்மனையில் தன் பாதுகாப்பு பரிவாரங்களுடன் வசிக்கும் அந்த சொர்ணாக்காவின் அறைக்கே சென்று, ஒழுங்கா இந்த ஊரை விட்டே ஓடி போயிரு என கூறிவிட்டு,  பிளைட் டிக்கெட்டை கொடுத்துவிட்டு வெளியேறுகிறார். அந்த வில்லியின் அறைக்குள் இருந்து கம்பீர நடைபோட்டு வெளியே வரும்போது அந்த அரண்மனை அடியாட்கள் அனைவரும் ஆங்காங்கே உயிரை கையில் பிடித்துக்கொண்டு சிதறிக் கிடக்கிறார்கள். இறுதியாக அந்த அரண்மனை வாசலில் உள்ள ஒரு சிங்கத்தின் சிலையில் தன் கையை வைத்து தடவிக் கொடுக்கிறார். அந்த சிலை பாலையாவின் பக்கம் தன் தலையைத் திருப்பி கர்ஜிக்கிறது. சுபம்.

அடேய்... சிலை எப்பிடிடா திரும்பும் என லாஜிக் பார்க்கும் சின்சியர் சினிமா ரசிகனாக இல்லாமல் தியேட்டரின் இருக்கையில் அமர்ந்தால், படம் முடிந்து  நீங்கள் வெளியேறும்போது ஜெய் பாலையா என உரக்கக் கத்துவீர்கள் என்பதில் ஐயமில்லை. அள்ளு கிளப்பும் பன்ச் டயலாக்குகளுக்காகவே ரசிகர் பட்டாளத்தை மாநிலம் கடந்தும் மயக்கி வைத்திருக்கும் பாலையா இதில் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் அதகளத்தின் அடுத்த கட்டம் :

சிங்கிள் சிங்கம் மேல சவாரி அடிச்சிருக்கீங்களா? டிக்டேட்டர் திரை அலசல்

திரண்டு வந்த வில்லன் கூட்டம் மிரண்டு கிடக்க, வில்லனுக்கு அருகில் சென்று, 'சரக்கடிக்கிறது உடம்புக்கு ஆபத்து... என்கிட்ட மோதுறது உன் உசுருக்கே ஆபத்து' என்பதும், தன்னை பற்றி முழுமையாக தெரியாத வில்லனிடம் " உன் ஹிஸ்டரில பிளட் இருக்கலாம். ஆனால் என் பிளட்டுக்கே ஒரு ஹிஸ்டரி இருக்குடா' என பொருமுவதும்,   ‘உன்ன மாதிரி நெறைய குதிரைங்க முதுகுல நான் சாவாரி செஞ்சிருக்கேன்’ என கேலி பேசும் வில்லனிடம்,  ’பல குதிரைகள் மேல சவாரி செய்யறது மேட்டர் இல்ல. என்ன மாதிரி ஒரு சிங்கத்து மேல எப்படி சவாரி செய்யற’னு நான் பாக்குறேன் என அசால்ட் ரிப்ளை கொடுப்பதும்,  ’நான் செய்ற வேலைகள்ல கொஸ்டீன் மார்க்கே இருக்காது.. எல்லாமே ஃபுல் ஸ்டாப்புடா..’ என எகிறுவதும், தன்னைத் தானே புகழும் வில்லனிடம், ’நீங்க எல்லாம் பப்ளிசிட்டிக்காகவே எதாவது பண்றவங்க.. ஆனா நான் எதாவது செஞ்சாலே அது பப்ளிசிட்டிடா’ என  அடக்கமாக கூறுவதும், அடியாட்கள் புடை சூழ தன்னை ரவுண்டு கட்டி நிற்கும் வில்லனிடம் "மலை மேல ஏற நினைக்கலாம். ஆனா அந்த மலையையே தூக்க நெனைக்கற பாரு அது தப்புடா" என பஞ்சர் ஆக்குவதுமாக.... வில்லனையும் ரசிகர்களையும் வைச்சு செய்கிறார் பாலையா. இதையெல்லாம் எதிரில் நின்று கேட்கும் வில்லன்களில் அதிசயமாக ஒரே ஒருத்தன் மட்டும் ஏதாவது பேச வேண்டுமே என வாயைத் திறந்தால், அடுத்த நொடியே ’என்கிட்ட பன்ச் டயலாக் எல்லாம் பேசக்கூடாது. போய் வேலையப் பாரு’ என எதிரியின் நலனில் அக்கறை செலுத்துவதுமாக சரவெடிகளால் அதிரடித்துக்கொண்டே இருக்கிறார் பாலையா.

படம் பார்க்க வேண்டும் என்பதற்கும், பாலையா படம் பார்க்க வேண்டும் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்த்துகிறது. அதுதான் பாலையா!

-  தி.ஜெயபிரகாஷ்