Published:Updated:

கார்த்திக்கு தோள் குடுக்குமா இந்தத் ‘தோழா’? - விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
கார்த்திக்கு தோள் குடுக்குமா இந்தத் ‘தோழா’? - விமர்சனம்
கார்த்திக்கு தோள் குடுக்குமா இந்தத் ‘தோழா’? - விமர்சனம்
கார்த்திக்கு தோள் குடுக்குமா இந்தத் ‘தோழா’? - விமர்சனம்

பாரிஸ் பாராக்ளைடிங் விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டு, கழுத்துக்கீழ் செயல்படாமல், வாழ்க்கைச் சக்கரத்தை, சக்கர நாற்காலியிலேயே கடத்தும் கோடானு கோடீஸ்வரன் நாகார்ஜூனாவுக்கு, ‘கேர் டேக்கர்’ வேலைக்கு தேர்வாகிறார் ‘ஜெயில் ரிட்டர்ன்’ கார்த்தி.

எல்லாரும் பார்க்கும் பரிதாபப் பார்வை பிடிக்காத நாகார்ஜூனாவுக்கு, ஜாலியாக ‘அண்ணா.. அண்ணா’ என்றழைத்துத் தன்னை பார்த்துக்கொள்ளும் கார்த்தியைப் பிடித்துப்போகிறது. பதிலுக்கு, தன் அம்மா தன்னைப் புரிந்துகொள்வதில்லை என்ற வருத்தத்தில் இருக்கும் கார்த்திக்கு, ‘நான் உன் அண்ணன்தானே?’ என்று உதவுகிறார் நாகார்ஜூனா.

ஒருகட்டத்தில் தன்னைத் தொலைத்துவிட்டோம் என்று உணரும் நாகார்ஜூனாவுக்கு, அவரது இயல்பை மீட்டெடுக்க பாரிஸ் அழைத்துச் செல்கிறார் கார்த்தி. திரும்ப வந்ததும், ‘நீ இங்க இயல்பா இல்லை. உன் குடும்பத்துக்கே போ’ என கார்த்தியை, அவர் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார் நாகார்ஜுனா. பிரிந்தபின் தோழர்கள் என்ன ஆகிறார்கள், நாகார்ஜுனாவை யார் பார்த்துக் கொள்கிறார் என்பதையெல்லாம் உணர்வுகளைக் கொட்டி, அதே சமயம் ஜாலியாய் சொல்ல முயல்கிற படம்தான் தோழா.

ஆறடி உயர ஆஜானுபாகு நாகார்ஜூனுக்கு சக்கர நாற்காலியிலேயே உட்காரும் வேடம். முழு நடிப்பையும் முகத்தில் மட்டுமே காட்ட வேண்டிய சவாலை, அனுபவசாலியாக சரியாக கையாண்டிருக்கிறார். ஆனாலும் எங்களுக்கு உதயம் நாகார்ஜுனாவையும், ரட்சகன் நாகார்ஜுனாவையும் மறக்க முடியலயே பாஸ்!

கார்த்திக்கு அவரது டிரேட்மார்க் ஜாலி பாய் வேடம். இதில் எக்ஸ்ட்ராவாக குடும்ப சென்டிமென்ட். இரண்டையுமே அநாயாசமாக செய்திருக்கிறார். ஆனாலும் அந்த ஜாலி போர்ஷனுக்கு ஒரு ஸ்பூன் சர்க்கரை கூட இருக்கிறது. காரணம் ராஜுமுருகன் மற்றும் முருகேஸ் பாபு வசனங்கள்!  

’அவனுக்கு ஈவு இரக்கமே இல்லடா’ என்று பிரகாஷ்ராஜ் சொல்ல, ‘எல்லாரும் என்னை இரக்கமா பார்க்கறதுதான் பிடிக்கல. அதுனால இவன்தான் என்னைப் பார்த்துக்க சரியான ஆள்’ என்று நாகார்ஜூனா சொல்வதில் ஆரம்பித்து வசனங்கள் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. ‘மனுஷன் போற இடத்துக்கெல்லாம் மனசு போகணும்’, ‘பயம் இருந்தா காதல் இருக்குன்னு அர்த்தம்’, ‘ப்ரேயர்ல சைலன்ஸ் ஓகே, பார்ட்டில என்னய்யா சைலன்ஸ்?’ என்று காட்சிக்குத் தகுந்து, துருத்தி நிற்காத வசனங்கள்.


தமன்னா, அழகுப் பதுமை. அவரும் கார்த்தியும் காதலிக்காமல் கடைசிவரை அதை ஒரு கவிதையாகவே கொண்டுபோயிருக்கலாம். இந்தப் படத்திற்கு பாடல்களின் தேவை இல்லை. படத்தின் இயல்பைக் குறைத்துவிடுகிறது இடையிடையே வரும் பாடல்கள்.
 

கார்த்தியில் வீட்டைக் காட்டும்போது திரைமுழுதும் தெரியும் ஒருவித டோன், நாகார்ஜூனாவின் பங்களாவிற்கு மாறும்போது பிரம்மாண்டமாய் மாறும் வித்தையை வினோத்தின் கேமரா செய்திருக்கிறது. அதேபோல, அந்த பாரிஸ் ரேஸ். சீட்டில் ஒட்டி உட்காரச் செய்கிறது நம்மை.


 

கார்த்திக்கு தோள் குடுக்குமா இந்தத் ‘தோழா’? - விமர்சனம்

கார்த்தி - நாகார்ஜூனா காட்சிகளினூடே இழையாக நகைச்சுவையைக் கையாண்டிருக்கும் இயக்குநரின் சாமர்த்தியத்திற்கு சபாஷ். முக்கியமாக அந்த கார்த்தியின் பெயிண்டிங்கும், அதை வாங்கும் பிரகாஷ்ராஜின் விளக்கமும்... சீனிப்பட்டாசு! சீரியஸாக தங்கச்சிக்கு கல்யாணம் உறுதியாகும் காட்சியில், நாகார்ஜூனாவிடம் கண்ணீருடன் நன்றியெல்லாம் சொல்லிவிட்டு, ‘நெறைய செலவிருக்குண்ணா... நான் பெய்ண்டிங் ஸ்டார்ட் பண்ணப்போறேன்’ எனுமிடத்தில் தியேட்டரே கலகல!
 

ஃபீல்குட் மூவியாக நினைத்து எடுத்திருக்கும் படத்தில், இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். பாடல்களை பாராபட்சம் பார்க்காமல் தவிர்த்திருக்கலாம். நாகார்ஜூனாவை ஃப்ளேஷ்பேக்கில் கொஞ்சம் ‘நடக்க’ விட்டிருக்கலாம். வம்சி இயக்கம் என்றாலே தெலுங்குப்படமோ என்றே பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெயசுதாவின் சீரியல்தனமான காட்சிகள் ‘நாகார்ஜூனா வீட்ல இவ்ளோ ஜாலியா இருக்கற கார்த்தி, தன் சொந்த வீட்ல ஏன் அப்டி இருக்கார்?’ என்று கேட்க வைக்கிறது. அம்மா அம்மா என்று உருகும் அவ்ளோ நல்லவர் திருடிட்டு திருடிட்டு ஜெயிலுக்குப் போறவராவா இருப்பார்?   இவற்றிற்கெல்லாம் ஒரு காட்சியில் விளக்கம் கொடுத்திருந்தாலும், மனம் ஏனோ ஒட்ட மறுக்கிறது. 

Latest Tending Cinema Videos


மறைந்த நடிகை கல்பனா உட்பட, ஸ்ரேயா, அனுஷ்கா, விவேக் என்று நட்சத்திரப்பட்டாளம் அவர்களுக்குண்டான வேலையை செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.

நாகார்ஜுனாவுக்கு ஹோட்டலில் பர்த்டே சர்ப்ரைஸ் கொடுக்க கார்த்தி அழைத்துப் போவார். ‘அஞ்சு வருஷமா இதான் நடக்குது. நானும் தெரியாத மாதிரியே நடிக்கிறேன்’ என்பார் அவர். அங்கே பிரகாஷ்ராஜும், தமன்னாவும் ‘சர்ப்ரைஸ்ஸ்ஸ்ஸ்” என்று பூங்கொத்து நீட்ட விழிகள் விரிய தெரியாததுபோல நடித்து ஏற்றுக் கொள்வார் நாகார்ஜுனா. அதன்பிறகு ரியல் சர்ப்ரைஸ் கொடுப்பார் கார்த்தி!
பிரகாஷ்ராஜ், கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா என்று இத்தனை ‘ஸ்டார்’ நடிகர்களை வைத்து எடுத்த இந்தப்படமும் கார்த்தி கொடுக்கும் ரியல் சர்ப்ரைஸ் போல இன்னும் கலகல கலக்கலாய் வந்திருக்க வேண்டியது.

கார்த்தி - நாகார்ஜூனாவின் ‘கெமிஸ்ட்ரி’க்காகவும், வசனங்களுக்காகவும்... பார்க்கலாம் பாஸ்!