Published:Updated:

5 அடேங்கப்பா.. 7 அடப்போங்கப்பா குறிப்புகள்! - ’24’ விமர்சனம் #24themovie #24 movie

விகடன் விமர்சனக்குழு
5 அடேங்கப்பா.. 7 அடப்போங்கப்பா குறிப்புகள்! - ’24’ விமர்சனம் #24themovie #24 movie
5 அடேங்கப்பா.. 7 அடப்போங்கப்பா குறிப்புகள்! - ’24’ விமர்சனம் #24themovie #24 movie

டைம் டிராவல் என்கிற கனமான, ரசிகர்கள் எளிதில் நம்பமுடியாத சப்ஜெக்டை, நம்பவைப்பது போல படமாக்குவது ரியல்லி ரிஸ்கி. படம் பார்க்கும் ரசிகனுக்குப் புரிந்து, இரண்டரை மணி நேரத்துக்கு மேல் அவன் மனதில் கேள்விகள் எழாமல் சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். ’24’ டீம் அதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறதா?

டைம் மெஷினை ஒரு கடிகாரத்துக்குள் அடக்குமளவுக்கு ஜீனியஸ், ’ட்வின்ஸ்’ சகோதரர்களில்  ஒருவரான சூர்யா. அந்தக் கடிகாரத்தைக் கைப்பற்ற தன் தம்பியையே கொல்லவும் தயங்காத வில்லன் அண்னன் சூர்யா (ஆத்ரேயாயாடா..!). இதனால் 1990-ல் சகோதரர்களுக்குள் நடைபெறும் களேபரத்தில் சயிண்டிஸ்ட் சூர்யா  உயிரிழக்கிறார். 26 வருடங்கள் கழித்து சயின்டிஸ்ட் சூர்யாவின் மகன் சூர்யா (ஆமாம்பா ஆமாம்... மூணாவது சூர்யாதான்!)  அப்பா கண்டுபிடித்த கடிகாரத்தை வைத்து என்ன செய்கிறார் என்பதை நீளளளமாகச் சொல்லியிருக்கிறார்கள்!

சிக்கலான டைம் டிராவல் சங்கதியில் ஆங்காங்கே சிக்சர் அடித்திருந்தாலும், பலஇடங்களில் மெகா சீரியல், ‘பழம்பெரும்’ காதல் காட்சிகள் என இனிமா மிக்சர் கொடுக்கிறது திரைக்கதை. படத்தின் ‘அடேங்கப்பா’, ‘அடப்போங்கப்பா’ காட்சிகளின் பட்டியல் இதோ!

அடேங்கப்பா 1:

சூர்யா!

சேதுராமன், ஆத்ரேயா, மணி என்று மூன்று கதாபாத்திரங்கள். சொல்லவே தேவையில்லை... இவர்களில் ஆத்ரேயாதான் அரை செஞ்சுரி அடிக்கிறார். ரஃப் அண்ட் டஃப் வில்லனாக சூர்யாவின் லுக்கும் கிக்கும் செம.  ஆனால், ஆத்ரேயாவுக்கு வழக்கமான ‘டாய் டூய் வில்லன்’ செய்யும் வேலைகள்தான். இதைச் செய்ய, தமிழ் சினிமாவின் ‘குட் பாய்’ இமேஜை 99 வருட குத்தகைக்கு எடுத்திருக்கும் சூர்யா ஏன்? கெட்ட பையன் கேரக்டரில் இன்னும் கெத்து சேர்த்திருக்க வேண்டாமா? மணி பாத்திரம் ’அயன்’ காட்சிகளை நினைவூட்டும் குறும்புத்தனம். 

அடேங்கப்பா 2:

இடைவேளைக்கு முன் நிகழும் கடிகார நிறுவன சம்பவங்கள்...  டி-20 பவர் ப்ளே விறுவிறுப்பு. இதே போன்ற பரபரப்பு, சமந்தாவுக்கு உண்மை தெரியும் சமயத்திலும்,  சர்ச் உரையாடலின்போதும் உண்டாகிறது. ஆனால், இவ்வளவு நீள ‘டைம் டிராவல்’ சினிமாவில் அதுதான் ‘ரேஸ் சேஸ்’ காட்சிகள் என்பது... யானை-பசி- சோளப் பொரி!  


 

அடேங்கப்பா 3:

கலை இயக்கம். பார்த்தேயிராத பல கேட்ஜெட்டுகள் படத்தின் அத்தனை நிகழ்வுகளையும் நம்பவைக்கிறது. தமிழில் இத்தனை டெக்னிக்கல் நிறைகளோடு ஒரு கால இயந்திர சினிமா என்பது... பெரிய ஜம்ப்!


அடேங்கப்பா 4:

VFX அணியினருக்கு ஆவ்ஸ்ம் லைக்ஸ்.. மழைத்துளியை பாதியில் நிறுத்தும் அழகியலாகட்டும், டைம் டிராவல் உண்டாக்கும் கிராபிக்ஸ் ஆகட்டும் தூள்! டைம் டிராவல் கடிகாரத்தை கையில் கட்டும்போது கச்சிதமாகவும், ‘ஜூம்’ பார்வையில் சுவாரஸ்யமான இயக்கங்களுடனும் காட்டியிருப்பது... அட்றா சக்க... அட்றா சக்க!

அடேங்கப்பா 5:

‘திரு’வின் ஒளிப்பதிவு. கோபால சமுத்திரத்திற்கும், சென்னைக்கும் டோனிலேயே வேறுபாடு காண்பித்திருக்கிற கேமரா, சுரங்கப்பாதையில் சடுகுடுவென ஓடும்போதும் எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் பணியாற்றியிருக்கிறது.

இனி.... அடப்போங்கப்பா பட்டியல்!

அடப்போங்கப்பா 1:

நம்பவே முடியாத தற்செயல்கள். 26 வருடங்களாக துரும்பு கூட நகராமல் இருக்க, திடுக்கென ஒரு சுபயோக சுபதினத்தில், பெட்டி சாவி முதல் மாமன் பெண் வரை அத்தனை ‘கோ-இன்சிடெண்டு’கள். படத்தில் சமந்தாவுக்கு இமாஜினோ ரொமான்ஸோ ஃபீலியா என்றால் இயக்குநருக்கு கோயின்சிடெண்டோ ஃபீலியா போல!

அடப்போங்கப்பா 2:

படம் ஆங்காங்கே ஸ்பீட் எடுப்பதற்குள், சரண்யா பொன்வண்ணனின் ஃப்ளாஷ்பேக், கோபாலசமுத்திரம், குடும்ப உற்சவம், வெள்ளிக்கிழமை மௌனவிரதம் என குடும்பக் காவியமாகவும் இல்லாமல், விறுவிறு சயின்ஸ் ஃபிக்‌ஷனாகவும் இல்லாமல்... எல்லாம் இருக்கு... ஆனா, எதுவுமே நச்னு இல்லை என்பதாக இருக்கிறது!  

அடப்போங்கப்பா 3:

’தெறி’க்கவிட்ட சமந்தாவா இது? அவரைச் சொல்லியும் குற்றம் இல்லை. அழகாக, ஸ்லீக்காக இருக்கிறார். ஆனால், காதலும் இல்லாமல், காமெடியும் இல்லாமல்... ஏதோ ஒரு விநோத ரசமஞ்சரியாக இருக்கும் காதல் அத்தியாயம் ஜவ்வ்வாய் இழுக்கிறது.  கோபாலசமுத்திரம் வீட்டில் சூர்யா- சமந்தா இருவரும் அட்ரஸ் அட்ரஸாகப் பேசிக்கொள்ளும் காட்சியில், நாமே ஸ்க்ரீனுக்குள் குதித்து சூர்யாவின் வாட்சில் 20 நிமிடங்களை தள்ளிவைத்துவிடலாமா என்று பரபரக்கிறது.


அடப்போங்கப்பா 4:

கட் & பேஸ்ட் வசனங்கள். ‘நான் ஒரு வாட்ச் மெக்கானிக்’, ’ஜெனரலா ஒரு ஜெனரல் நாலேட்ஜ்’, சமந்தா - சூர்யா பரஸ்பரம் அட்ரஸ் சொல்லிக் கொள்வது, ’நான் 26 வருஷத்துக்கு அப்பறம் திரும்ப வந்தது...’ என அத்தனை சுவாரஸ்யமில்லாத வசனங்கள்... அவ்வளவு தடவை ரிப்பீட் அடிப்பது!


அடப்போங்கப்பா 5:

இயக்குநர் விக்ரம் குமாரின் ’யாவரும் நலம்’, ஒன்லைனராகச் சொன்னால் நம்பவே முடியாத ஒரு கதை. ஆனால் தில், த்ரில் திரைக்கதை மூலம் அதை நம்பும்படி செய்திருப்பார். ’24’ படத்தில் அப்படியான கிறுகிறுப்போ, விறுவிறுப்போ மிஸ்ஸிங். வேகத்தைக் குறைக்கும் ரொமான்ஸ் டிராமாக்கள், பொருத்தமற்ற இடத்தில் பாடல்கள் என்று...ப்ச்! ஏ.ஆர்.ரகுமான் இசை என்பது டைட்டில் கார்டில் மட்டுமே தெரிகிறது.

அடப்போங்கப்பா 6:

அப்படி ஒரு வாட்ச் கிடைத்தால், அதை சமந்தாவை கரெக்ட் செய்ய மட்டுமேவா உபயோகிப்பார் ஒருவர்?  அதுவும் அந்த கிரிக்கெட் காட்சிகள்... வேணாம்... அழுதுருவோம்! 

அடப்போங்கப்பா 7:

Sci-Fi மூவி என்று எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டு, அறிவியல், காதல், ‘வானத்தை போல’ குடும்பம் என எதுவுமே முழுமையாக ஒட்டாத டைம் டிராவல்!


டெய்ல்பீஸ்:-

இயக்குநர் - எடிட்டர் கூட்டணி சுறுசுறுவென ஓவர்-டைம் பார்த்திருந்தால், கடிகார கால இயந்திர படம் பார்க்கும்போது, யாரும் தங்கள் கடிகாரத்தை அடிக்கடி பார்த்திருக்க மாட்டார்கள்!