Published:Updated:

நஸ்ருதீன் ஷாவுக்கு ஈடு கொடுக்கும் கல்கி கோச்லின் - “வெய்ட்டிங்” ஒரு பார்வை #Waiting

விகடன் விமர்சனக்குழு
நஸ்ருதீன் ஷாவுக்கு ஈடு கொடுக்கும் கல்கி கோச்லின் - “வெய்ட்டிங்” ஒரு பார்வை #Waiting
நஸ்ருதீன் ஷாவுக்கு ஈடு கொடுக்கும் கல்கி கோச்லின் - “வெய்ட்டிங்” ஒரு பார்வை #Waiting

நஸ்ருதீன் ஷாவின் மனைவி சுஹாசினி, கொச்சினில் ஒரு மருத்துவமனையில் எட்டு மாத கோமாவில் இருக்கிறார். அதே மருத்துவமனைக்கு, விபத்து ஒன்றில் அடிபட்டு அட்மிட் ஆகியிருக்கும் அர்ஜுன் மாத்தூரின் மனைவி கல்கி கோச்லின் வந்து சேர்கிறார். அவர்கள் குணமாக காத்திருக்கும் தருணங்களில் நஸ்ருதீன் - கல்கி இருவருக்கும் இடையே நடக்கும் மனப்போராட்டங்களை உணர்ச்சி உரையாடல்களாகவே கடத்தியிருக்கும் படம் வெய்ட்டிங்.

இரு வேறு ஜெனரேஷனைச் சார்ந்த இரு அந்நியர்கள். ஒரே மாதிரியான சூழலில் மருத்துவமனையில் ஒன்றாகப் பயணிக்க வேண்டிய நாட்கள். இருவருக்குமே வேறுபட்ட நம்பிக்கைகள். அந்த நம்பிக்கையை உடைக்கும் தருணங்களை எதிர்கொள்ளும் விதம் என்று படம் முழுவதும் ஒரு அழகான இரயில் பயணத்தில் இரு நண்பர்களின் விவாதங்களைக் கேட்டுக் கொண்டே பயணிப்பது போல இருக்கிறது.

நஸ்ருதீன் ஷா, நடிப்பு யுனிவர்சிடியின் ப்ரின்ஸிபால்! சொல்லவா வேண்டும்.. இதிலும் கலக்கியிருக்கிறார். அலாரம் வைத்து எழுந்து, தினமும் ரிசப்ஷனிஸ்டுக்கு காஃபி கொடுத்து, கோமாவில் இருக்கும் மனைவிக்கு நாவல் படித்துக் காண்பித்து என்று ஒரே மாதிரியான வாழ்க்கையை ‘என் மனைவிக்காக இதை ரசித்துத்தான் செய்கிறேன்’ என்பதை உடல்மொழியிலேயே காண்பித்திருக்கிறார். அதே சமயம், இடைவேளைக்குப் பின் வரும் காட்சிகளில், நம்பிக்கை தளர்ந்து போகும்போது, தொய்வான நடையும், கண்களில் அவநம்பிக்கையும் என அதையும் வெளிப்படுத்தியிருக்கிறார். யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, கல்கியுடன் நட்புத்தருணமொன்றில் வீட்டில் நடனமாடும்போது உற்சாகத்தை அள்ளித் தெளித்திருக்கிறார் நஸ்ருதீன்.

கல்கி கோச்லினுக்கு தொட்டதற்கெல்லாம் ஆங்கிலத்தின் ஆறாம் எழுத்தில் துவங்கும் வார்த்தையை பிரயோகிக்கும் மாடர்ன் மங்கை கதாபாத்திரம். நஸ்ருதீன் ஷாவின் நடிப்பிற்கு முன் ஈடு கொடுக்க சரியான தேர்வு. புதுமணத் தம்பதியாய் வாழ்ந்த நினைவுகளை கண்முன் நிறுத்தும்போதும், உதவி செய்ய அடிக்கடி வரும் கணவரின் அலுவலக ஊழியரை கண்டுகொள்ளாமலே இருந்து பின் நன்றி சொல்லும் போதும், உடனிருக்க முடியாத தோழியிடம் கடிந்து கொள்ளும் இடத்திலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார். ‘அவர் பழையபடி வாழமுடியலைன்னா எதுக்கு ஆபரேஷன்’ என்று இவர் கேட்க ‘அதை முடிவு பண்ண வேண்டியது நீயா?’ என்று நஸ்ருதீன் கோபப்பட இருவருக்குமிடையேயான அந்த விவாதக் காட்சி குறையில்லாமல் படமாக்கப்பட்டிருக்கிறது.

திரைக்கதையும், வசனங்களும் 98 நிமிட படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது. ஆரம்ப காட்சியில் பெரிதாக வசனங்கள் ஏதுமின்றி கல்கியின் கணவருக்கு விபத்து என்பதைப் பார்வையாளர்களை உணரவைத்த இயக்குநர், நஸ்ருதீன் - கல்கி உரையாடல்களில் அவர்கள் ஆழ்மனதில் நினைப்பதைக் கூட வசனங்களாக எழுதித்தள்ளியிருக்கிறார்.

 ‘நீங்க எப்படி எப்பவுமே ஜென் நிலைல இருக்கீங்க’ என்று கேட்கும் கல்கிக்கு வாழ்க்கையில், இதுபோன்ற காத்திருக்கும் கட்டங்களில் நம் மனம் அடையும் நிலைகளை ஒவ்வொன்றாக விளக்கும் காட்சி. மருத்துமனையில் தலைமை மருத்துவர் தன ஜுனியருக்கு சோகமான செய்தியை, உறவினர்களுக்குச் சொல்ல வேண்டியது எப்படி என்று விளக்கும் காட்சி என்று படத்தின் இரண்டு மூன்று காட்சிகள் நச் ரகம். 

ஒளிப்பதிவு, இசை படத்தை உறுத்தாமல் வந்து செல்வது அழகு.  இந்திப் படமாக இருந்தாலும், பெரும்பாலும் ஆங்கிலத்திலும், அங்கங்கே இந்தியிலும், ‘கொறச்சு கொறச்சு’ மலையாளத்திலும் பேசிக்கொள்ளும் இந்தப் படம் ஏற்கனவே உலகத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து, இப்போது திரைக்கு வந்திருக்கிறது.

எல்லாவற்றையுமே நேரடியாக  வசனங்கள் மூலம் சொல்லிக் கொண்டே இருக்காமல், கொஞ்சம் பார்வையாளர்களையும் சிந்திக்க விட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. கமர்ஷியல் விஷயங்களை தவிர்த்து இன்னும் சீரியசாக செய்திருந்தால் ஒரு நல்ல ஆர்ட் பிலிமாக வந்திருக்கலாம். ஆனாலும் நஸ்ருதீன் மற்றும் கல்கியின் நடிப்புக்காகவும், இருவருக்குமான உரையாடல்களின் ஆழத்திற்காகவும் நிச்சயம் ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.