Published:Updated:

இதே மாதிரியே நடிச்சா.. என்ன பேர் இருக்கும் தெரியுமா ஜிவிபி? - எனக்கு இன்னொரு பேர் இருக்கு - விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
இதே மாதிரியே நடிச்சா.. என்ன பேர் இருக்கும் தெரியுமா ஜிவிபி? - எனக்கு இன்னொரு பேர் இருக்கு - விமர்சனம்
இதே மாதிரியே நடிச்சா.. என்ன பேர் இருக்கும் தெரியுமா ஜிவிபி? - எனக்கு இன்னொரு பேர் இருக்கு - விமர்சனம்

அப்பாவியான பையனைக் கொடூரமான வில்லனாக நினைத்து, தனக்கு மாப்பிளையாக்கி ராயபுரம் டானாக ‘நைனா’ சேரில் அமர வைக்க நினைக்கிறார் ‘கரன்ட்’  நைனா சரவணன். ‘ நைனா’ சேர் எனக்குத்தான் என்று சரவணனை விரட்டி விட்டு அமர்கிறான் வில்லன்.  அந்த வில்லனை டம்மி ஹீரோ என்ன செய்கிறார் என்பதே எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் கதை.

அரதப் பழசு கதை. நானும் ரௌடிதான் படத்தின் ஜிவிபி வெர்ஷன். கூட 'ஹீரோவுக்கு ரத்தத்தைக் கண்டால் பயம்' என்ற எக்ஸ்ட்ரா ஸ்ட்ராவை மட்டும் போட்டு அதே கதையை உறிஞ்சியிருக்கிறார்கள். கதை மட்டுமல்ல, திரைக்கதை, வசனம் உள்பட 'ஹிட்' படங்களில் அப்ளாஸ் அள்ளிய சீக்வென்ஸ்தான்!

வெளியில் வந்தால் மறந்து போனாலும், ஆங்காங்கே சிரிக்கவைக்கும் வசனங்கள்தான் படத்தின் ஒரே பலம். 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில் இருந்த அதே லுக், ஸ்டைல் என நடிப்பில் எந்த வித்தியாசமும் இல்லை ஜீ.வி.பிரகாஷ் முகத்தில்! காதலியை வில்லன்கள் அடிக்கும்போதும், கூடவே இருந்தவர் கண்முன்னே கொலை செய்யப்படும்போதும் காட்டும் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களால் தப்பிக்கிறார். இந்தப் படத்திலும் இரட்டை அர்த்த வசனங்கள் ஏன் ப்ரோ?

கமர்ஷியல் சினிமா விதிகளின்படி, நாயகி ஆனந்தி வழக்கம்போல ரொமான்ஸ் செய்கிறார், பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார், கொஞ்சம் சென்டிமென்ட்டும் போடுகிறார். சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், ராஜேந்திரன், யோகிபாபு, சார்லி... என பெரும் பட்டாளமே படத்தில் இருந்தாலும், நான்-ஸ்டாப்பாகச் சிரிக்கும் அளவுக்கு வலிமையான காட்சிகள் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் தலைகாட்டும் பொன்னம்பலம், மன்சூரலிகான் இருவரையாவது 'சொந்த' சிந்தனையில் பயன்படுத்தியிருக்கலாம். அவர்களும், 1980களில் நடித்த வில்லன்கள் கெட்டப்பில் வந்து லந்து கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்!

ஒரு முழுப்படமாக சிலாகிக்கவோ, பேசவோ ஒன்றுமில்லாமல்  வெறும் குட்டிக் குட்டி சீன்களின் தொகுப்பாக இருப்பது சோகம்! லேட்டஸ்ட் வரவான 'கபாலி' டீஸரின் வசனத்தைக்கூட கடைசி நேரத்தில் செருகியிருக்கிறார்கள். படம் காமெடியில் கொஞ்சம் ஸ்பீட் எடுக்கும்போது, சீரியஸாகப் பேசிக் கொள்கிறார்கள். சீரியஸாக ஆக்‌ஷனில் இறங்குவார்கள் போல என்று நிமிர்ந்தால் காமெடியாக அந்த சீனை முடிக்கிறார்கள். அதுவே படத்தின் பலவீனமாகப் போகிறது.

பத்து காட்சிகளுக்கு ஒன்று என்ற ரீதியல் ஒலிக்கும் பாடல்கள் எரிச்சல்! ஜிவிபி, ஹீரோவாகவும் நடித்து இசையையும் பார்த்துக் கொள்வது என்ற இரட்டைக் குதிரை சவாரியில் இரண்டிலுமே சோபிக்கத் திணறுகிறார்.

ரவுடியைத் தேர்ந்தெடுப்பதை ரியாலிட்டி ஷோவாக நடத்துவது, ஜீ.வி.பிரகாஷின் சாகசங்களை சரவணனுக்குக் குறும்படமாகவே திரையிட்டுக் காட்டுவது, கிலிக்கி மொழி பேசும் கருணாஸ், பல படங்களில் பேசிய பன்ச் வசனங்களை ஆளுக்கு நாலு பக்கமாகப் பிரித்துக்கொண்டு படம் முழுக்க பேசுவது என்று ஒரு சில கவர்ந்தாலும், வீட்டில் சேனல் மாற்றிக் கொண்டே டிவி பார்க்கும்  எஃபெக்ட்! மொட்டை ராஜேந்திரன் என்ட்ரி க்ளாப்ஸ் அள்ளுகிறது. படக்குழு ஏற்கெனவே ‘மகாபலி மகா’ என்று பெரிய பில்டப் எல்லாம் கொடுத்திருந்தார்கள். அதுவும் கொஞ்சநேரத்தில் புஸ்வாணமாகிறது.

ஆனால், இரண்டு மணிநேரமும் படம் பார்க்கும் ரசிகர்கள் அங்கங்கே சிரிக்கிறார்கள். அந்தச் சிரிப்பும், கை தட்டலும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற திரைப்படத்திற்கா என்பதுதான் புரியாத புதிர்.

கொஞ்சம் வித்தியாசமான கதைக்களங்களை அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கவில்லையென்றால் உங்களுக்கு  ‘ஒரே மாதிரி படங்கள்லயே நடிக்கிறவர்’ என்கிற பேர்தான் இருக்கும் ஜிவிபி!