Published:Updated:

மிஸ் பண்ணிடாதீங்க.. அப்பறம் வருத்தப்படுவீங்க! #FindingDory - படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
மிஸ் பண்ணிடாதீங்க.. அப்பறம் வருத்தப்படுவீங்க! #FindingDory - படம் எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க.. அப்பறம் வருத்தப்படுவீங்க! #FindingDory - படம் எப்படி?

அதிசயங்கள் நிறைந்திருக்கும் ஆச்சர்ய உலகம் என்றால் அது கடல் தான். கடலுக்குள் நிறைந்திருக்கும் சுவாரஸ்ய உயிரினங்களை கண்கள் விரிய பார்க்கவைத்து, வியப்பையும், அழகையும் பரிசாக தரும் எந்தப் படங்களும் தோற்றதில்லை. அந்த வரிசையில், ஆழமான நீல நிறக்கடல், ஜீனியஸ் ஆமைகள், கலர்ஃபுல் ஜெல்லிமீன்கள், திமிங்கலங்கள், மிரட்டும் ஆக்டோபஸ்கள், பல வண்ணங்களில் பல வடிவங்களில் மீன்கள் என்று பார்ப்பவர்கள் சிலிர்க்கும் படமே “ஃபைண்டிங் டோரி”.

13 ஆண்டுகளுக்கு முன் வெளியான “ஃபைண்டிங் நீமோ” வசூல் ரீதியாகவும், அனிமேஷன் ரீதியாகவும், ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆஸ்கர் விருதினையும் சொந்தமாக்கியது. மீண்டும் கடலுக்குள் நம்மைப் பயணிக்கவைக்கிறது இரண்டாம் பாகமான “ஃபைண்டிங் டோரி”

சிட்னி மீன் பண்ணைக்கு கடத்தப்பட்ட நீமோவை, நீமோவின் தந்தை மர்லினும், பக்கத்து வீட்டுக்காரர் நீலக்கலரு டோரியும் மீட்கப் போராடுவார்கள். கடல் கடந்து டேஞ்சர் ஜோன்களைத் தாண்டி நீமோவை கண்டுப்பிடிப்பதே முதல் பாகம் என்றால், இரண்டாம் பாகமான “ஃபைண்டிங் டோரி”யில் டோரியின் குடும்பத்தைச் தேடிச்செல்வதே கதை.

“நீமோ, மார்லின் எல்லாம் குடும்பமா இருக்கும் போது, நமக்கு ஏன் குடும்பம் இல்ல?” என யோசிக்கும் டோரி. தாய், தந்தையைத் தேடி, கலிஃபோர்னியாவுக்கு நீந்துகிறது. அங்கு இருக்கும் மீன் பண்ணையில் மாட்டிக்கொள்கிறது. அங்கு பல நிறத்தில் மாறக்கூடிய ஆக்ட்டோபஸுடன் நண்பனாகிறது. அங்கிருந்து, ஆக்டோபஸ், திமிங்கல சுறா, பெலுகா திமிங்கலம் என செல்லும் இடமெல்லாம் தோழர்களைப் பெற்றுக்கொண்டே செல்கிறது டோரி. இறுதியில் டோரிக்குட்டி அதன் குடும்பத்துடன் இணையும் காட்சிகளை எமோஷனலாகவும், காமெடியாகவும் சொல்லி இருக்கிறது படம்.

படம் முழுக்க கஜினி பட சஞ்சய் ராமசாமி போல் சுற்றுவது டோரி கதாப்பாத்திரத்தின் ஸ்பெஷல். “ஆமா நான் ஏன் இங்க இருக்கேன்?, எங்கிட்ட ஏன் இது இருக்கு?, உனக்கு நான் ஏன் ஐடி கார்டு தரணும்?, எங்கிட்ட எதுவும் இல்ல, இந்த ஐடிகார்ட வச்சுக்கறயா?’ என ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் கதாப்பாத்திரமாக கலக்கியிருக்கிறது டோரி. 'ஊரூ ஊரூ ஊரூ' என்றவுடன் பறந்து வரும் பெக்கி பறவை, தான் அமர்ந்து இருக்கும் கல்லை மகனுக்கும் விட்டுக்கொடுக்காத கடல் சிங்கம் என படம் முழுக்க காமெடி விலங்குகளின் அட்டகாசம். படமே கிரியேட்டிவிட்டியின் உச்சம்.

டோரியின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் “குட்டி டோரி” தெறி அழகு. அதுமட்டுமின்றி பிரமிக்கவைக்கும் காட்சிகளை உருவாக்கியிருக்கும் அனிமேஷன் டீமுக்கு ஹாட்ஸ் ஆஃப்!

கடலில் வாழும் உயிரினங்களைத் திரையில் கொண்டுவந்து, சிறார்களுக்கு பொழுதுபோக்குடன் கூடிய சில சுவாரஸ்ய தகவல்களையும் கற்றுக்கொடுக்கும் இந்த மாதிரியான படங்கள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியவை.

திரையில் ஒவ்வொரு கதாபாத்திரம் தோன்றும் போதும், அதுபற்றி கேட்டு பெற்றோர்களைப் படுத்தி எடுக்கும் குழந்தைகளும், படத்தில் உள்ள கேரக்டர்கள் சிரிக்கும்போது, அப்படியே சிரித்து பார்க்கும் குட்டீஸுமே தான் “ஃபைண்டிங் டோரி” படத்தின் வெற்றிக்கு உதாரணம்.

தவிர, படத்தின் மிகப்பெரிய பிளஸ் , வில்லன் என எந்தக் கதாபாத்திரமும் இல்லாமல், கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருப்பது தான். டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நீமோ, ஃபைண்டிங் டோரி என தொடர்ந்து குழந்தைகளுக்காக காவியங்களை எழுதி இயக்கும் ஆண்டிரூ ஸ்டானுக்கு, குழந்தைகள் சார்பாக, அன்பு முத்தங்கள்.

இந்த வருடத்திற்கான ஆஸ்கார் உள்ளிட்ட விருதுகளில் ஜூடோபியாவுக்கு, கடும் போட்டியை “ஃபைண்டிங் டோரி” தரும் என்பதில் சந்தேகமில்லை

க்ளைமேக்ஸ் காட்சியில் ஆக்டோபஸ்  எப்படி வண்டி ஓட்டும், என நீங்கள் லாஜிக் எல்லாம் பார்த்தால், குழந்தை படங்களைப் பார்க்கும் வயதை நீங்கள் மனதளவில் கடந்துவிட்டீர்கள் என அர்த்தம். குறிப்பாக இப்படத்திற்கு திரையரங்கில் 50% அதிகமாக குழந்தைகள் பட்டாளம் தான்.

மொத்தத்தில் ஜாலிக்கு கேரண்டி என்பதால், இந்த மாதம் மிஸ் செய்யக்கூடாத படங்களில் ஒன்றாக இருக்கிறது “ஃபைண்டிங் டோரி” திரைப்படம்.

டிரெய்லர் வீடியோவிற்கு: