Published:Updated:

சிங்கத்துடன் மையல், காட்டு எறும்பின் தையல்..! #TheLegendOfTarzan படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
சிங்கத்துடன் மையல், காட்டு எறும்பின் தையல்..! #TheLegendOfTarzan படம் எப்படி?
சிங்கத்துடன் மையல், காட்டு எறும்பின் தையல்..! #TheLegendOfTarzan படம் எப்படி?

யாராலும் இவனைத் தடுத்து நிறுத்த முடியாது, யாராலும் இவனை ஜெயிக்கவும் முடியாது. விலங்கின் பாஷையை  உணர்ந்து, காட்டில் வாழும் டெர்மினேட்டர் தான் இந்த டார்சான். அடர்த்தியான காடு, பிரமிப்பூட்டும் விலங்குகள், கடந்து ஓடும் காட்டாறுகள் இவர்களுடன் முரட்டுக்  குணம் கொண்ட மனிதக்  குரங்கினால் வளர்க்கப்படும் டார்சானுமே கதாநாயகர்கள்.

தி லெஜண்ட் ஆஃப் டார்சான் படத்தை இயக்கிய டேவிட் யெட்ஸ் நமக்கு மிகவும் பரிச்சயமானவர். உலகப் புகழ்பெற்ற ஹாரிபாட்டரின் இறுதி நான்கு பாகங்களை  இயக்கியவர். மாயலோகத்தை மிரட்டலாகக் காட்டிய டேவிட்டின் வெற்றியே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் கூட்டியது.

காட்டில் வளர்ந்த டார்சான் திருமணத்திற்குப் பிறகு காட்டை விட்டு வெளியேறி ஜான் என்ற பெயரில்  மனைவி ஜேன் போர்ட்டருடன் நகரத்தில் வாழ்ந்துவருகிறார். இவர்களுக்கு காங்கோ பகுதியின் பழங்குடியின தலைவரிடமிருந்து காட்டிற்கு வருமாறு அழைப்பு வருகிறது. அலெக்ஸாண்டர் (டார்சன்), மார்கட் ராபி (ஜேன்) , சாமுவேல் ஜான்சனுடன் காட்டிற்கு வருகிறார்கள். அந்த நேரத்தில் பழங்குடியினரை அடிமைகளாக்கி காட்டிற்குள் கொட்டிக்கிடக்கும் வைரங்களை எடுப்பதற்கு துடிக்கிறது ஒரு கூட்டம். இந்தக்  கூட்டத்தின் தலைவன் கிரிஸ்டோஃபர், டார்சானின் மனைவியைக்  கடத்திச் சென்று விடுகிறார். க்ளைமேக்ஸில் டார்சான், தன் மனைவியைக்  காப்பாற்றினாரா, பழங்குடியினரைக் காப்பாற்றினாரா என்பதைச்  சொல்லும் கதை தான் “தி லெஜண்ட் ஆஃப் டார்சான்”

டார்சான் என்றால் மனித குரங்குகளின் பாஷையில் 'வெண்மைத் தோலைக் கொண்டவன்' என்பது அர்த்தம். படம் முழுவதும் டார்சானாக வந்து மிரட்டியிருக்கிறார் நடிகர் அலெக்ஸாண்டர். டார்சான் இந்தக்  காட்டில் வாழ்ந்த பழைய நாட்களை ஃப்ளாஷ்பேக்கில் காட்டியிருப்பது, காட்சிகளை ஜவ்வாக இழுக்காமல் படத்திற்குள் பொருந்தியிருக்கிறது.

டார்சான் தன்னுடய பழைய நண்பன் என்று சிங்கத்தைக் கட்டிப்பிடிக்கும் காட்சிகள், பழங்குடியினர் இவர்கள் மீது வைக்கும் பாசம், டார்சானின் முரட்டுக்குணம், மனித குரங்கோடு சண்டையிடும் காட்சிகள் என்று பிரமிப்பின் உச்சத்திற்கே நம்மை இழுத்துச்செல்கிறார் கேமராமேன் ஹென்ரி.

100 அடி பள்ளத்தில் டார்சானும், பழங்குடியினத்தவரும் அசால்ட்டாக குதிக்கும் காட்சிகளில், பயந்துகொண்டே சாமுவேல் ஜான்சன் விழும் காட்சிகள், 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் என்று ஹீரோவிற்கு இணையாக ஸ்கோர் செய்திருக்கிறார் சாமுவேல் ஜான்சன்.

“டார்சான் எனக்காக, என் காதலுக்காக என்னைக்  காப்பாற்றுவான், இந்தக் காடு அவனோடது, அவனை யாராலும் ஜெயிக்கமுடியாது” என்று சொல்லும் காட்சிகள், நாயகிக்காக டார்சான் எழுப்பும் சப்தம் என்று காதலையும் சண்டையையும் ரொமான்டிக்காக திரைக்கதையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு நகரம் வளர்ச்சிபெறுகிறது என்றால், அதன் பின்னணியில் இயற்கை வளங்களும், மனிதர்களும் எவ்வாறு அழிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை படம் போகிற போக்கில் சொல்லிச்செல்கிறது. டார்சானிடமிருந்து தப்பிக்க, அவனின் எதிரியான வேறொரு பழங்குடியின கூட்டத்தில் சிக்கவைத்துச் செல்கிறார் வில்லனாக கிறிஸ்டோபர். அப்போது, “ என்னை அழிக்க, உன்னை பயன்படுத்துறான், அடுத்து உன்னையும் அழிக்க இங்க திரும்பிவருவான், ஏன்னா, இந்த காடு முழுவதும் அவ்வளவு வைரம் புதைஞ்சிருக்கு” என்று டைலாக்குகள் பேசி மிரட்டுகிறார் டார்சான்.

மனிதகுரங்குடன், டார்சானின் சண்டைக்காட்சிகள் தான் படத்தின் ஹைலைட்ஸ்! தவிர, மர விழுதுகளைப் பிடித்துக்கொண்டே பல கிலோமீட்டர்களை அசால்ட்டாக தாண்டுவது, காட்டு எறும்புகளை வைத்தே காயத்திற்கு தையல் போடுவது என்று ஒவ்வொரு காட்சியும் அதிரடி அட்டகாசம்.

1980களில் நடக்கும் கதையென்பதால் அதற்கான செட், பிரம்மாண்ட அரங்குகள் என்று காட்சிப்படுத்த மெனக்கெட்டிருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. இருப்பினும் கதை அந்த அளவிற்கு அழுத்தமாகவோ, சிறப்பாகவோ இல்லை. எனினும் எதார்த்தமான கதையை திரைக்கதையில் சுவாரஸ்யத்துடன் நகர்த்தியிருப்பதே படத்திற்கு ப்ளஸ்.

மொத்தத்தில் டார்சானுடன் காட்டிற்குள் திரில் பயணம் செல்லவேண்டுமா, நிச்சயம் இந்தப் படம் பார்க்கலாம். ஜங்கிள் புக் படத்தில் நாம் பார்த்த அனிமேஷன் காட்டினை நிஜமாகவே 3டியில் நம்முன் பிரம்மாண்டமாக நிறுத்துகிறது இந்த டார்சான்.