Published:Updated:

பிரபுதேவாவின் கான்ட்ராக்ட்... தமன்னாவின் டபுள் திகில்! 'தேவி' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
பிரபுதேவாவின் கான்ட்ராக்ட்... தமன்னாவின் டபுள் திகில்! 'தேவி' விமர்சனம்
பிரபுதேவாவின் கான்ட்ராக்ட்... தமன்னாவின் டபுள் திகில்! 'தேவி' விமர்சனம்

பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் படமென்பதால், மாஸ் ஓபனிங்குடன் வெளியாகியிருக்கிறது தேவி.  ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமன்னா, ஆர்.ஜே. பாலாஜி, சோனு சூட் நடிப்பில் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கில் அபிநேத்ரி, இந்தியில் துக் துக் துதியா என மும்மொழிகளிலும் ரிலீஸாகியிருக்கிறது. 

கிராமத்திலிருந்து மும்பை வந்து வேலை செய்யும் பிரபுதேவாவிற்கு, மார்டன் பெண்ணைக்  காதலித்து திருமணம் செய்யவேண்டும் என்பதே ஆசை. ஆனால்  ஊரில் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, பிரபுதேவாவிற்கும் தமன்னாவிற்கும் கிராமத்திலேயே திடீர் திருமணம் நடக்கிறது. மும்பை வரும் பிரபுதேவா, திருமணம் செய்துகொண்டது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக புது வீட்டிற்கு குடியேறுகிறார். தமன்னாவின் உடம்புக்குள் ரூபி என்ற பேய் நுழைந்திருப்பது பிரபுதேவாவிற்கு தெரிய வருகிறது. பெரிய நடிகையாகவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் தற்கொலை செய்து கொண்டவள்தான், ரூபி. தமன்னா உடலில் இருக்கும் ரூபியின் கண்டிஷனுக்கு  சம்மதித்து, கான்ட்ராக்ட் போடுகிறார் பிரபுதேவா.  பேயின் நடிப்பு முயற்சி தமன்னாவை என்ன செய்தது என்பதே தேவி. 

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபுதேவா .அதே இளமை, அதே ஸ்டைல்!  கச்சிதமான நடிப்பில்  ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார்.  சல்மார் பாடல், டான்ஸ் பிரியர்களுக்கு விஷூவல் விருந்து.

பிரதான கதாபாத்திரத்தில் தமன்னா செம. சாதுவான கிராமத்துப் பெண்ணாக ஒரு ஸ்டைல் என்றால், மார்டன் ரூபியாக மிடுக்குடன் மிரட்டவும் செய்கிறார். தமன்னாவிற்கு டப்பிங் கொடுத்திருக்கும் மானசியின் குரல் அவரின் நடிப்பிற்கு கூடுதல் பலம்.  இளமையிலும், கவர்ச்சியிலும் அள்ளுகிறார் தமன்னா. “ஒரு பொண்ணு அழகா இருந்தா ஆணை ஆளலாம். அறிவா இருந்தா நாட்டை ஆளலாம். அழகும், அறிவும் இருந்தா இந்த உலகையே ஆளலாம்” என்று பஞ்ச் பேசுகிறார் தமன்னா. 

விட்டு விட்டு பெய்யும் மழை மாதிரி, வந்து வந்துபோகும்  ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி ஜில்லென சாரலடிக்கிறது. சோனு சூட், மந்திரவாதியாக வரும் நாசர், சதீஷ் மற்றும் ஸ்பெஷல் கெஸ்ட் எமி என்று எல்லோருமே படத்திற்கு ஜாலியான பொருத்தம்.  படத்திற்கு இடையிடையே வரும் பாடல்கள் படத்தோடு சேரவில்லை, பார்ப்பவர்கள் மனதோடும் ஒட்டவில்லை.  சல்மார் பாட்டில் பிரபுதேவாவின் நடனமும், கோக்கா மாக்கா பாடலில் தமன்னாவின் நடனமும் மட்டும் கண்ணுக்கு குளிர்ச்சி. 

வீட்டிற்குள் தேவி, வீட்டை விட்டு வெளியே சென்றால் ரூபி, ஒரு படம் மட்டுமே நடிக்கணும்,  நடிகருடன் க்ளோஸாக நடிக்க கூடாது என்று கான்ட்ராக்ட் போடும் காட்சிகள், வீட்டிற்கு வந்திருப்பவர்களை விரட்டுவதற்காக ரூபியிடம் ஐடியா கேட்கும் பிரபுதேவா என்று அங்காங்கே காமெடி களை கட்டுகிறது. ஆனால் ஒட்டுமொத்த படமாக அந்த விஷூவல் ட்ரீட் மிஸ். 

பேய்ப் படத்திற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் உருவாகியிருக்கிறது தேவி. பேய்ப் படத்திற்கான அச்சமோ, த்ரில்லோ எதுவும் இந்தப் படத்தில் கிடையாது. சென்டிமென்ட் காட்சியில் கூட, நமக்கு எந்தவித உணர்வையும் தராமல் தேமே எனப் பார்க்கவைக்கிறது. ஒரே நேர்க்கோட்டில் தட்டையாக பயணிக்கிறது திரைக்கதை. அந்தோணியின் எடிட்டிங், சாஜித் வாஜித் இசை, மனுஷ் ஒளிப்பதிவு மற்றும் ஏ.எல். விஜய் இயக்கம் என்பதைல்லாம் சரி.. ஆனால் இவர்களுக்கான ஸ்பெஷல் என்று இப்படத்தில் எதுவும் கைகொடுக்கவில்லை.

வீட்டிற்குள் இருக்கும்போது ஆர்.ஜே.பாலாஜியிடம் பாசமாக, “அண்ணா நைட்டுக்கு என்ன சமைக்கட்டும்” என்று கேட்கிற தமன்னா, வீட்டுக்கு வெளியே வந்து ரூபியாக மாறியதும்,  “யாருடா நீ” என்று திட்டித்தீர்க்க  ஆர்.ஜே.பாலாஜி விழிபிதுங்கும் காட்சிகள் கலகல காமெடி! ரூபியைப் பற்றி யாரிடமாவது சொல்ல வந்தால், பிரபுதேவா பேசுவது யாருக்கும் கேட்காமல் போகும் காட்சிகள் எல்லாம் குட்டீஸைக் கவரும் காட்சிகள்!  

நச் ஒன்லைன் பிடித்திருக்கும் விஜய், ஆங்காங்கே பாரபட்சம் பார்க்காமல் கத்திரி போட்டிருக்கலாமோ என்று தோன்றச் செய்கிறது நீளம்! திகில் கிளப்பாத,  மேக்கப் கலையாத கிளாமர் பேய்  பார்க்கவேண்டும் என்றால் தாராளமாக தேவிக்கு ஹாய் சொல்லலாம்!