Published:Updated:

கவிழ்ந்ததா... கரை சேர்ந்ததா? காகித கப்பல் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
கவிழ்ந்ததா... கரை சேர்ந்ததா? காகித கப்பல் விமர்சனம்
கவிழ்ந்ததா... கரை சேர்ந்ததா? காகித கப்பல் விமர்சனம்

ஹீரோ அப்புக்குட்டி, புதுமுக நடிகை தில்லிஜா இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பவர்ஸ்டார், புரோட்டா முருகேசன் ஆகியோர் நடிக்க சிவராமன் இயக்கியிருக்கும் படம் “காகிதகப்பல்”. “தலை வணங்குறோம் தல” என்ற ஒற்றை டேக் லைனுடன் அஜித்தை கொண்டாடும்  விளம்பரங்களுடன் திரைக்கு வந்திருக்கிறது. காகித கப்பல் கரை சேர்ந்ததா? 

பேப்பர் பொறுக்கியே வாழ்க்கையில் முன்னேறி, பின்னர் பேப்பர் தொழிலில் கோடிகளில் பிஸினஸ் செய்யும்  பிஸினஸ்மேனாக வலம் வருகிறார்  அப்புகுட்டி. அவரின் ஒரே ஆசை தன் அம்மாவிற்காக சொந்த வீடு வாங்குவதுதான், அந்த நேர்த்தில் தில்லிஜாவின் தந்தையை பெயிலில் எடுக்க 20 லட்சம் தேவைப்பட அப்புக்குட்டிக்கு தன் வீட்டை விற்க முயல்கிறார் தில்லிஜா. அவரிடம் 20 லட்சம் அட்வான்ஸ் தந்துவிடுகிறார் ஹீரோ அப்புக்குட்டி.

சில பல களேபரங்களுக்கு பின்னர் அப்பா, அம்மாவின் மீது கோவப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறும் தில்லிஜாவிற்கு அடைக்கலம் தருகிறார் கருணை வள்ளல் அப்புகுட்டி. அடுத்து அதேதான். அப்புக்குட்டிக்கும் தில்லிஜாவிற்கும் காதல் ... கல்யாணம் ... குழந்தை என வாழ்க்கையே வேற லெவலில் மாறிவிடுகிறது.

திரைப்பட இயக்குநரான எம்.எஸ்.பாஸ்கர், பைனான்ஸ் உதவிக்காக அப்புக்குட்டியை அணுகுகிறார். தில்லிஜாவிற்கு சிறுவயதிலேயே நடிக்க ஆசை என்பதை தெரிந்துகொள்ளும் அப்புக்குட்டி, படம் தயாரித்து,அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் இயக்கும் படத்தின் க்ளைமேக்ஸூம், இந்தப் படத்தின் க்ளைமேக்ஸூம்  ஒன்றாக இருக்க வேண்டும் என முடிவு செய்த இயக்குனர் எக்கச்சக்கமாக பொறுமையைச் சோதித்து   படத்தை முடித்துவைக்குறார். 

அழகர்சாமியின் குதிரை படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற அப்புக்குட்டியா இது? ஒட்டுமீசை வைத்துக்கொள்கிறார், பணியாளர்களை அதட்டுகிறார், தாயிடம் பாசம் காண்பிக்கார், மனைவியுடன் கொஞ்சுகிறார், நீச்சல் குளத்தில் கும்மாளமிடுகிறார், நடிக்கத் தெரியாத மாதிரி நடிக்கிறார், நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என ஹீரோ ஆசையில் களமிறங்கியவரை இப்படத்தில்....! சரி விடுங்க பாஸ் சும்மா எரியுற பல்பை எதுக்கு உடைச்சுக்கிட்டு! 

தில்லிஜாவின் தந்தை என்ன தப்பு செய்ததற்காக ஜெயிலுக்கு போனார்?  சுங்க இலாகாவிலிருந்து ஏன் அப்புக்குட்டியை அழைத்துச் சென்றார்கள்?  தில்லிஜா எதற்காக கோவப்பட்டு அப்புகுட்டி வீட்டிற்கு வந்தாள்  என்பதெல்லாம் லாஜிக்கே இல்லாத சிதம்பர ரகசியம். , ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் தான் படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும். ஆனால், க்ளைமேக்ஸில் தில்லிஜாவிற்கு என்ன ஆனது, என்பதற்கான சரியான விளக்கம் தராமல் விட்டது படத்தின் மிகப்பெரிய தவறாகி போனது.

எம்.எஸ்.பாஸ்கரைத் தவிர படத்தில் நேர்த்தியான நடிப்பை எவரும் தரவில்லை என்பதே உண்மை. சாதாரண அறையை, மருத்துவமணை என்று நம்பவைப்பதெல்லாம், வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள் சனிக்கிழமை என்று சொல்வது போலவே இருக்கிறது.  

ரொம்ப கஷ்டப்பட்டு, உழைச்சி பணம் சம்பாதிக்கும் அப்புகுட்டி, அசால்ட்டாக ஹீரோவாக நடிக்க தயாராவது எப்படி, அம்மாவுக்காக வீடு வாங்க விருப்பப்படும் அப்புகுட்டி, தன் மனைவியுடன் ஜாலியாக புதுவீட்டில் இருக்கிறார்.. அப்போ அவ்வளவு தான் அம்மா பாசமா ? .  கலக்கிவிட்ட நீரோடை போல படம் முழுவதும்  அவ்வளவு குழப்பம். 

தலை வணங்கும் அஜித்திற்கு நன்றிகடனாக ஒரு பாடலையும் சேர்த்திருக்கிறார்கள். பொதுவாக அஜித் பெயரைச் சொன்னால் திரையரங்கம் அதிரும். ஆனால் வேதாளம் பட காட்சிகள் வந்துமே, திரையரங்கில் மயான அமைதி. படம் முழுவதும் ரெட் டீ ஷர்ட் மோடிலேயே ரசிகர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். 

”எல்லா இயக்குநர்களும் படத்தை பிழையா எடுக்குறது கிடையாது. என் கதை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. துணிந்து தயாரிக்கலாம்” என படத்தில் இயக்குனராக வரும் எம்.எஸ். பாஸ்கர் சொல்கிறார். டயலாக்குலாம் வச்சீங்க. ஆனா நீங்க கடைபிடிச்சீங்களா டைரக்டர் ?  

படம் முழுவதிலும் நிறைய இடங்களில் கத்திரியிட தவறியிருக்கும் எடிட்டிங், மனதில் நிற்காத இசை, நம்பகத்தன்மையற்ற கலை இயக்கம் என்று படத்தில் ரசிக்க விஷயங்களை தேட வேண்டியிருக்கிறது.

முதல் பாதியில் ஒரு கதை நடக்கிறது, அதையே இரண்டாவது பாதியில் சினிமாவுக்குள் சினிமாவாக சொல்கிறோம் என வித்தியாச லைன்  பிடித்த வரை சரி, ஆனால் அதற்கு மெனக்கெடல்? அந்த ஒன் லைனை டெவலப் செய்து வெள்ளித்திரையில் பார்வையாளனை பரவசப்படுத்த தவறியிருக்கிறார் இயக்குனர் சிவராமன்.

 இடைவேளையில் வரும் விளம்பரங்களே, முதன்முறையாக ரசித்துப் பார்க்கவைத்து, இன்னும் நாளு விளம்பரம் கூட போடலாமே? ப்ளீஸ் படம் வேணாமே மொமண்டுக்குள் நம்மை தள்ளி தத்தளிக்க வைக்கிறது இந்த காகித கப்பல். 

உறுதியான கட்டுமானம், அனுபவமிக்க கேப்டன், அழகியலான தோற்றம் எதுவுமே இல்லாமல், கடமைக்கு உருவாக்கப்பட்ட போலி கப்பலாகத்தான்  பயணிக்கிறது இந்த காகிதகப்பல்.