Published:Updated:

’டூ--பீஸ்’ கார்த்தி... வாள் வீச்சு நயன்தாரா... காஷ்மோரா மேஜிக் பலித்ததா? - காஷ்மோரா விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
’டூ--பீஸ்’ கார்த்தி... வாள் வீச்சு நயன்தாரா... காஷ்மோரா மேஜிக் பலித்ததா? - காஷ்மோரா விமர்சனம்
’டூ--பீஸ்’ கார்த்தி... வாள் வீச்சு நயன்தாரா... காஷ்மோரா மேஜிக் பலித்ததா? - காஷ்மோரா விமர்சனம்

பில்லி சூனியம், ஆவி விரட்டுதல் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கார்த்தியும் அவர் குடும்பமும் ஒரிஜினல் ஆவியிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்...? 

படம் பற்றிய வீடியோ விமர்சனத்தைக் காண

    ஊருக்குள் பில்லி சூனியம் (வைத்துவிட்டு) எடுப்பது, ஆவி விரட்டுவது என்று பிரபலமான ஆள் காஷ்மோரா கார்த்தி. அப்பா, தங்கை, அம்மா, பாட்டி என மொத்தக் குடும்பமும் ஃப்ராடு. ‘எங்க ஊர்ல ஒரு பங்களால ஆவிகள் தொந்தரவு தாங்கலை” என்று கார்த்தியை அழைக்கிறார்கள். பங்களாவுக்குள் நுழையும் இவரால் வெளியில் வரமுடியவில்லை. காரணம்...? ஃப்ளாஷ்பேக்கில் ராஜ்நாயக்- ரத்தினமகா தேவி இடையில் சில சம்பவங்கள் நிகழ்கின்றன. அது என்ன? ஆவியை விரட்டப்போன கார்த்தி குடும்பத்துக்கு என்ன ஆனது...? ‘ஆவி’ பறக்கும் க்ளைமாக்ஸ்! 

    துர்சக்திகளை விரட்டுவது, ஆவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது என பக்தர்கள் முதல் அமைச்சர்கள் வரை தன் மாயாஜாலம் மூலம் வசியம் செய்கிறார் கார்த்தி. இந்நிலையில்,  ஆவியை விரட்ட கார்த்தியை அழைக்கிறார்கள். பங்களாவுக்குள் நுழையும் அவரால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. காரணம் உள்ளே காலங்காலமாக இருக்கும் ’ராஜ்நாயக்’கின் (கார்த்தி) ஆவி. பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன் இறந்த ராஜ்நாயக்கும், அவரது படையினரும் ரத்தினமகாதேவி (நயன்தாரா) இட்ட சாபம் காரணமாக எந்த உலகத்துக்கும் போக முடியாமல் தவிக்கிறார்கள். அந்த சாபம் கார்த்தி குடும்பத்தால்தான் விமோசனம் அடையுமென்பதால் காஷ்மோராவுக்கு பங்களா அரெஸ்ட். ஆவியை விரட்டப்போன கார்த்தி குடும்பம், ’ஆவி’ கார்த்தியிடம் இருந்து தப்பிக்கிறதா என்பது க்ளைமாக்ஸ்.

    கார்த்திக்கு காஷ்மோரா, ராஜ்நாயக் என்று இரட்டை வேடம். காஷ்மோராவாக கலகல, ராஜ்நாயக்காக லகலக என வெரைட்டி வித்தியாசம் காட்டுகிறார். பேய் பங்களாவில் ‘இந்த செட்டப் நல்லால்ல... டைமிங் மிஸ் ஆகுது’ என்று புலம்பும் போது செம்ம. மொட்டைத் தலையுடன் வில்லங்கச் சிரிப்புடன் வாள் வீசும் காட்சிகள்... செம கெத்து. ஆனால், பிளாக் மேஜிசியனாக காட்டும் அதட்டல்... இன்னும் மிரட்டியிருக்கலாம் பங்கு!


    ஃப்ளாஷ்பேக் இளவரசியாக நயன்தாரா. வாள் வீச்சிலும் விழி வீச்சிலும்... வாவ். ஸ்ரீதிவ்யா இந்தப் படத்துக்கு ஏன்? இந்தக் கேள்விக்கு பதில் யோசிப்பது போலவே அவர் படம் முழுக்க உலாத்திக் கொண்டே இருக்கிறார். ‘ஃப்ரெண்டு ஃபீல் ஆய்டாப்ல’ வசனத்தில் ஃபீல் ஃப்ரெண்டு, ஆவி பங்களா புராணம் சொல்வதும் ஒரு குவளை தண்ணீர் குடிப்பதும்... சூப்பர்ஜி... சூப்பர்ஜி! மற்றபடி... படத்தில் அனைவரும் வருகிறார்கள்... நடிக்கிறார்கள்... செல்கிறார்கள்.  

    ராஜ்நாயக் கார்த்தி ‘டூ-பீஸ்’ உரையாடல் நடத்துவதும், மோசடி குடும்பம் அத்தனை வழிகளிலும் ஏமாற்றுவதும் படத்தின் ‘லைக்கோ லைக்’ அத்தியாயங்கள்.  கார்த்தி குடும்பம் மற்றும் அமைச்சரின் ஆஸ்தான சாமியார் மூலம் பிரபல ஆன்மீக மையங்களை குறீயீட்டால் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் கோகுல். 

    கார்த்தி காமெடியில் இறங்குகிற காட்சிகள் அட போட வைக்கிறதென்றால்.. அந்தக் கலகலப்பை தொடராமல் ’ஆ....வ்’ சொல்ல வைக்கிறது அமைச்சர் சம்பந்தப்பட்ட காட்சிகள்.     படத்தின் பெரிய மைனஸ்... இருவரில் ஒரு கார்த்தி ஜெயிக்க வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு ஒரு பதட்டம் வேண்டுமே... அது ம்ஹ்ம்! காஷ்மோரா ஊரை ஏமாற்றும் பித்தலாட்டகாரன் என்றால், ராஜ்நாயக் காமாந்தக வில்லன். இதனாலேயே யார் ஜெயித்தால் என்னவென்று தேமேவென காத்திருக்கிறோம். 

    பழக்க வழக்கமான காட்சிகள் கொண்ட படத்தில் ஃப்ளாஷ்பேக்கின் சில பகுதிகளுக்கு மட்டும் வந்தனம் சொல்லலாம். மலை முகட்டில் நயன்தாராவிடம் குதிரை மீது அமர்ந்தபடி கார்த்தி பேசும் காட்சி, இருவருக்குமிடையிலான சண்டையின் முடிவு என சில காட்சிகளில் விசேஷம். அரண்மனை பங்களாவை, ஆவியுலக பங்களாவாக மாற்றியதில் கலை இயக்கமும் அனிமேஷனும் கைகோர்த்து பளிச்சிடுகிறது. ஓம்பிரகாஷின் கேமரா காஷ்மோராவின் யானை பலம். அவ்வளவு உழைப்பும் திரையில் பளிச்சிடுகிறது. பாடல்களில் ஓயா ஓயா  மட்டும் ஓ.கே.  பின்னணி இசையில் என்னாச்சு சந்தோஷ்..? 

     ’தீய காற்று தூய தீபத்தை அவ்வளவு எளிதாக அணைத்துவிடமுடியாது’ என்று சீரியஸ் வசனங்களாகட்டும், ‘பயப்படாதீங்க. பயந்தா பயமாருக்கும்.. பயப்படலைன்னா பயமிருக்காது’ என்று ஆங்காங்கே வசனங்கள் செம.  ஆனால், அது ரொம்ப அரிதாகத்தான் வருகிறது. 

    ஆரம்பக் காட்சிகள் மிக சீரியஸ்.... சீரியஸாக இருக்க வேண்டிய காட்சிகளில் காமெடி கதம்பம் என படம் முழுக்க ஒரு நிலையில்லாமை நிலவுவது ஏனோ!?