Published:Updated:

ஹிருத்திக்கின் பலம் பலவீனமான கதை! காபில் படம் எப்படி? #Kaabil

முத்து பகவத்
ஹிருத்திக்கின் பலம் பலவீனமான கதை! காபில் படம் எப்படி? #Kaabil
ஹிருத்திக்கின் பலம் பலவீனமான கதை! காபில் படம் எப்படி? #Kaabil

பார்வையற்ற கதாநாயகன் ஹிருத்திக் ரோஷனின் காதலும், ஆக்‌ஷனும் தான் ‘காபில்’ இந்தித் திரைப்படம். ‘தங்கல்’ போலவே இப்படமும் டப்பிங் செய்யப்பட்டு ‘பலம்’ என்ற டைட்டிலுடன் தமிழில் ரிலீஸாகியிருகிறது. தமிழில் ரசிகர்கள் மத்தியில் அமீர்கானுக்கு கிடைத்த வரவேற்பை ஹிருத்திக்கும் பெற்றிருக்கிறாரா? 

கார்ட்டூன் கதாபாத்திங்களுக்கு வாய்ஸ் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹிருத்திக் ரோஷன், கீ போர்ட் ஆர்ட்டிஸ்ட் யாமி கெளதமை சந்திக்கிறார், காதலிலும் விழுகிறார். ஆனால் இருவருமே கண்பார்வையற்றவர்கள். யாமியை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் ஹிருத்திக். பல யோசனைகளுக்கு நடுவே ஹிருத்திக்கின் பேச்சினாலும் ரொமான்ஸினாலும் காதலில் விழுகிறார் யாமி. திருமணமும் முடிந்து, இருவருக்கும் லைஃப் ஜாலியாக போக ஒரு நாள்.... ஹிருத்திக் இல்லாத சமயத்தில் வீடு புகுந்து யாமியை பலாத்காரம் செய்துவிடுகிறார் வில்லன் ரோஹித் ராய். போலீஸில் புகார் கொடுத்தும் எந்த பலனுமில்லாமல் போக, யாமி எடுக்கும் திடீர் முடிவும், அதன்பிறகு  ஹிருத்திக் ஆக்‌ஷன் ‘பலி’வாங்கும் படலமும்  என்ற  அதர பழசான கதைக்கு புதுச்சாயம் பூசியிருக்கும் படமே ‘பலம்’ கதை. 

படத்திற்கான ஒட்டுமொத்த பலமும், பலவீனமும் ஹிருத்திக் ரோஷன் தான். ஆக்‌ஷன் ஹீரோவிற்காக உடல்மொழியுடன் இருக்கும் ஹிருத்திக் கண்பார்வையற்ற கதாபாத்திரத்தில் பொருந்துவத்தில் சிரமம் இருப்பது தெரிகிறது. இருந்தாலும் நடிப்பில் முடிந்த அளவிற்கு ஸ்கோர் செய்ய முயல்கிறார் ஹிருத்திக்.  

ஃபுல் மேக்கப்புடன் அழகாகவே வந்துசெல்கிறார் யாமி கெளதம். அழகிலும், ரொமான்ஸிலும் யாமிக்கு இந்தப் படத்தில் பாஸ் மார்க் கொடுக்கலாம். ஆனாலும் பார்வையற்றவராக நடிக்கும் போது சில இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் தெரிகிறது. இருப்பினும் ஹிருத்திக்கும், யாமியும் நடனமாடும் காட்சிகளும், இருவருக்குமான காதல் கெமிஸ்ட்ரியும் செம. 

ரியல் சகோதரர்களான ரோனிட் ராயும், ரோஹிட் ராயும் இப்படத்திலும் டெட்லி பிரதர்ஸாக மிரட்டுகிறார்கள். ஆனால் க்ளைமேக்ஸில் ‘திடீர்னு பஞ்சரான டயர் போல’ புஸ்னு பைசலாவது... அட போங்க பாஸ்! 

‘உன்னை போல் ஒருவன்’ மோகன்லால் போல வரும் நரேந்திரஜா, ஹிருத்திக்கின் நண்பன் சுரேஷ் மேனன், போலீஸ் அதிகாரி கிரிஷ் குல்கர்னி அனைவருமே நடிப்பில் கச்சிதம். ஆனால் எந்த கேரக்டருக்கும் முக்கியத்துவத்தைக் கொடுக்காமலே திரைக்கதை நகர்கிறது. படத்தோடு பொருந்தாமல் வந்தாலும் ஊர்வசி ரோட்டிலாவின் ‘சாரா சமானா..’ பாடல் கண்ணுக்கு செம ஜில்... வொர்த்து பாஸ்!  

சைக்கிள் சையின் மாட்டுவது, சமைப்பது என்று பார்வையற்றவர்களின் இயல்பு வாழ்க்கையும், அவர்களின் அசாதாரண திறமையும் எப்படி இருக்கும் என்பதை விஷுவலில் காட்டியவிதத்தில் ஈர்க்கிறார் இயக்குநர் சஞ்சய் குப்தா.

ராஜேஷ் ரோஷனின் இசை ஜாலி மூட். ஆனாலும் ஹிருத்திக்கை ஸ்லோ மோஷனில் காட்டுபோதெல்லாம் வரும் பின்னணி இசை கடுப்படிக்கிறது. அவிக் அலியின் எடிட்டிங்கும், சுதீப் மற்றும் அயனன்கா போஸின் ஒளிப்பதிவும் கண்ணிற்கு இதம்.  

பார்வையற்ற ஹீரோவின் ஆக்‌ஷன் தான் முழு படமுமே. ஆனால் பெரிய கட்டிடத்தின் விளிம்பில் ஹிருத்திக் நிற்கும் போது, நம்மையும் அங்கு நிற்க வைத்திருக்கவேண்டும். ஹிருத்திக் மீது ஒவ்வொரு அடி விழும் போதும், அந்த அதிர்வு நம்மிடையே கடந்திருக்கவேண்டும். ஆனால் எந்த வித உணர்வையும் அதிர்வையும் இந்தப் படம் நமக்கு கொடுக்கவில்லை.   

கவலை என்னவென்றால் 80களில் வெளியான பல படங்கள் தொடங்கி  ‘காசி’, ‘சபாஷ்’, ‘தாண்டவம்’ என சமீபத்திய’ படங்கள் வரையிலும் நினைவில் வந்துபோவதை தடுக்கமுடியவில்லை. கண் பார்வையற்ற ஹீரோவின் பழிவாங்கும் படலத்தையே இன்னும் எத்தனை வருடங்கள் இந்த திரையுலகம் எடுக்கப்போவதாக உத்தேசம்?   

இந்தியில் ஹிருத்திக்கின் கதாபாத்திரத்தின் பெயர் ரோஷன் பட்நாகர், ஆனால் தமிழ் டப்பிங்கில் ரோஷன் பாண்டியராஜ். வாய்ஸ் லிப்பிங் பிரச்னைக்காக ‘சக்கரை பொங்கலுக்கு வடகறி போல..’ காமெடியான பெயர்களும், பொருந்தாத டயலாக்கும் படத்தின் ஒரிஜினாலிட்டியை கெடுக்கிறது. “இதுக்குப் பேசாம பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கலாம்..” மொமன்ட்டில் ஒட்டுமொத்த படத்தையும் இந்தியிலேயே பார்ப்பது பெட்டர்.

பாலிவுட்டில் இந்த வாரத்திற்கான சினி ரேஸில் ஹிருத்திக்கின் காபிலும், ஷாருக்கானின் ரயீஸூம் தான் போட்டியிடுகிறது. இந்த இரண்டு படங்களில் ஷாருக்கின் ரயீஸ் ஜஸ்ட் லைக் தட் முந்திவிடுகிறது.