Published:Updated:

எல்லா ஹீரோயிஸமும் காட்டும் ‘காங்’ தப்பிக்கிறதா? Kong: Skull Island!- படம் எப்படி?

ப.சூரியராஜ்
எல்லா ஹீரோயிஸமும் காட்டும் ‘காங்’ தப்பிக்கிறதா? Kong: Skull Island!- படம் எப்படி?
எல்லா ஹீரோயிஸமும் காட்டும் ‘காங்’ தப்பிக்கிறதா? Kong: Skull Island!- படம் எப்படி?

`ஏரியா விட்டு ஏரியா வந்து பிரச்னை செய்தால் சாவடி உறுதி' என்பது தான் காங் : ஸ்கல் ஐலாண்ட் படத்தின் ஒன்-லைன். 

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு மர்ம தீவு தான் 'ஸ்கல் ஐலாண்ட்'. அந்த இடத்திற்கு சென்ற கப்பலும், விமானங்களும் மீண்டும் வீடு திரும்பியதாக சரித்திரமே கிடையாது. அப்படியொரு ஆபத்தான தீவை பற்றி ஆராய்ந்து, மர்மத்தின் பின்னால் உள்ள உண்மைகளை உலகிற்கு எடுத்துசொல்ல ஆசைப்படுகிறார் அரசு அதிகாரி ராண்டா. அவரின் ஆராய்ச்சிக்கு உதவி புரிய கால்னல் பிரெஸ்டன் பேக்கர்ட் ( சாமுவேல் ஜாக்சன் ), முன்னாள் விமான கேப்டன் ஜேம்ஸ் கான்ரட் ( டாம் ஹிட்டில்ஸ்டன் ) மற்றும் புகைப்பட கலைஞர் மேசன் வீவர் ( ப்ரீய் லார்ஸன் ) ஆகியோரும் கப்பலேறுகிறார்கள். பின்னர், பல தடைகளை கடந்து எப்படியோ அந்த தீவை அடைந்து விடுகிறார்கள். ஆராய்ச்சி என்ற பெயரில் ராண்டா குழுவினர் தீவில் நில அதிர்வை ஏற்படுத்தி காங்கை உசுப்பேற்றி விட, காங்கோ ஹெலிகாப்டர்களை துண்டு துண்டாய் உடைத்து தூக்கி வீசுகிறது. அந்த கொடூர தாக்குதலில் இருந்து கார்னல், முன்னாள் கேப்டன், புகைப்படக்கலைஞர் மற்றும் சிலர் தப்பிக்கிறார்கள். ராண்டாவின் ஆராய்ச்சி என்ன ஆனது? காங் அவர்களை கொன்றதா? அவர்கள் காங்கை கொன்றார்களா? என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் மக்களே...

ஹாலிவுட்டில் திடீர் திடீரென கிளம்பும் ராட்சத மிருகங்களின் வரிசையில் புதிதாக என்ட்ரி ஆகியிருக்கிறார் `ஸ்கல் ஐலாண்ட்' காங். ஆபத்தை கண்டால் பொங்குவது, அநியாத்தை கண்டால் அடித்து நொறுக்குவது, அடிமனதை டச் செய்வது என தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு தேவையான அத்தனை தகுதிகளையும் தன்னகத்தே கொண்டு சிங்கிளாக அந்த தீவில் திரிந்துகொண்டிருக்கிறது. இதுமட்டுல்லாமல் பெரிய சைஸ் எட்டுக்கால் பூச்சி, கொடூரமான இரண்டு கால் பல்லி, மெகா சைஸ் நான்கு கால் மான் என படம் முழுக்க பிரமாண்டமான விஷயங்கள் ஏராளம். அடுத்தடுத்த காட்சிகளில் ஏதாவதொரு  படா சைஸ் மிருகம் சீனுக்குள் என்ட்ரி ஆகிக்கொண்டேயிருப்பதால் 'அடுத்து ரசத்த ஊத்து பூனை கெடக்கான்னு பார்ப்போம்' என்கிற டயலாக் தான் மனதில் ஓடுகிறது.

அடுத்த சீன் இப்படியாகும் பாரேன், இப்போ இவன் செத்துருவான் பாரேன் என நமது மூளையே 'ஸ்பாய்லர்' கொடுக்கும் அளவிற்கு படத்தில் அவ்வளவு க்ளீசே காட்சிகள். சின்னக்குழந்தைகளுக்கான கதையில் கால் கூச்சறியும் ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து அடல்ட்ஸ் படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் 'காங்' சைஸிற்கு நிறைய பிரச்னைகள் இருந்தாலும், வில்லன் பல்லி சைஸிற்கு பாஸிடிவ் அம்சங்களும் இருக்கின்றன. அவெஞ்சர்ஸில் 'லோகி' கதாபாத்திரத்தில் நடித்த டாம் ஹிட்டில்ஸ்டன், சாமுவேல் ஜாக்ஸன் என எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ஒவ்வொரு பிரேமையும் ஸ்க்ரீன் ஷாட் அடித்து வால் பேப்பராக வைக்கலாம், அந்தளவிற்கு ஒளிப்பதிவு தாறுமாறாக இருக்கிறது. ஒரே ஃபிரேமில் ஹெலிகாப்டரும் தட்டான்பூச்சியும் பறப்பது, காங் ஒருவனை விழுங்குவதை கட் செய்து மறுபுறம் ஒருவர் பிரெட் விழுங்குவதை காட்டுவது என குறியீட்டு காட்சிகளும் நிறைய. 30 ஆண்டுகளாக அந்த தீவில் வாழும் அமெரிக்கராக வரும் ஹாங்க் மர்லோ, அவர் பங்கிற்கு சில காமெடி செய்து காட்சிகளை கலகலப்பாக நகர்த்துகிறார். படத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் , வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையால் போரால் பாதிக்கபட்டவர்களாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். அவை 'போர் அவசியமானது தானா?' என்ற கேள்வியை சைலன்டாக கேட்டுசெல்கிறது.மொத்தத்தில், இங்கேயே தங்கி விடலாம் என யோசிக்கவைக்கும் அளவிற்கு படம் இல்லாவிட்டாலும், ஒருமுறை ஜாலியாக போய்வரலாம் என்ற அளவிற்கு இருக்கிறது இந்த 'ஸ்கல் ஐலாண்ட்'. அப்படியே 'மாநகரம்' படத்தின் விமர்சனத்தையும் படிச்சுடுங்க மக்களே...