Published:Updated:

அஜித்துக்கும் பவன் கல்யாணுக்கும் என்ன வித்தியாசம்? - 'காட்டமராயுடு' படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
அஜித்துக்கும் பவன் கல்யாணுக்கும் என்ன வித்தியாசம்? - 'காட்டமராயுடு' படம் எப்படி?
அஜித்துக்கும் பவன் கல்யாணுக்கும் என்ன வித்தியாசம்? - 'காட்டமராயுடு' படம் எப்படி?

தபாங் இந்தியில் எடுக்கப்பட்டத் தெலுங்கு பாணியிலான படம், வீரம் தமிழில் எடுக்கப்பட்டத் தெலுங்கு பாணியினால படம். இந்த இரண்டையும் மீண்டும் தெலுங்கிற்கு அழைத்து வந்த பெருமை பவன் கல்யாணையே சேரும். வீரம் 'காட்டமராயுடு'வாக எப்படி இருக்கிறது? 

படத்தின் கதை அத்தனை பேரும் அறிந்ததே. ஒருவேளை இன்னும் வீரம் படம் பார்க்காதவர்கள் இருந்தால்... பாஸ் அஜித் + சிவா விவேகமே முடிச்சிட்டாங்க. இன்னுமா பார்க்காம இருப்பீங்க, விளையாடாதீங்க! படம் எப்படி இருக்குனு மட்டும் பார்க்கலாம். வீரம் 2.0வாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு வீரமே பெட்டர் என்கிற நினைப்பைத் தான் கொடுத்திருக்கிறது காட்டமராயுடு. ஆனாலும் அதை மீறி நம்மை பொறுமையாக உட்காரச் செய்வது பவன் கல்யாண் மட்டுமே. 

கமர்ஷியலுக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் இருக்கும் ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை இன்னும் பெரிய கேன்வாஸில், பெரிய ஹீரோவை வைத்துக் கொடுக்க நினைத்தது வரை சரி. ஆனால், கதைக்கு எவ்வளவு தேவை என முடிவெடுப்பதில் தடுமாறியிருக்கிறார் இயக்குநர் கிஷோர் குமார் பர்தசனி. வீரத்திலிருந்த நிறைய காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. சில கதாபாத்திரம் சேர்க்கவும், நீக்கவும் செய்திருக்கிறார்கள். மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் பல காட்சிகள் படத்திற்கு மைனஸ் ஆகவே அமைகிறது. குறிப்பாக நாசர் குடும்பத்துக்கும், தருண் அரோராவுக்கு இடையே உள்ள பிரச்னை, ராவ் ரமேஷ் கதாபாத்திரம், சின்னச் சின்ன சென்டிமென்ட்கள் சேர்த்திருப்பது என எதுவும் வேலைக்கு ஆகவில்லை. 

அதிகபட்சமாக பவனின் அரசியல் இமேஜை மெயின்டெய்ன் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார்கள். பவனும், ஊருக்கே உதவி செய்யும் நல்லவராக நடிப்பது, 'இது சீமா... ராயலசீமா', 'எத்தனை பேர் இருக்காங்கன்றது முக்கியம் இல்ல, யார் இருக்காங்கறது தான் முக்கியம்' என அரசியல், சினிமா இரண்டுக்கும் பொருந்தும்படி வசனம் பேசுவது வரை அத்தனையும் அரசியல் பயணத்துக்கான மைலேஜாக பயன்படுத்திக் கொள்கிறார். இதைத் தவிர படத்தின் என்னென்ன ப்ளஸ் ஆகிறது, என்னென்ன மிஸ் ஆகிறது என்பதை மிக எளிதாக அடுக்கிவிடலாம்.

ப்ளஸ்

பவன் கல்யாண்:

முன்பு சொன்னதைப் போல படம் முழுக்க பவன் பவன் பவன் மட்டும் தான். கையை மடித்துவிட்டால், வேஷ்ட்டியை மடித்துக் கட்டினால், நின்றால், நடந்தால், ஆடினால், சிரித்தால் என அத்தனைக்கும் அப்ளாஸ் அள்ளுகிறார் மனிதர். படத்தின் கதையும் அவரின் மாஸ் இமேஜுக்கு தகுந்த படி இருப்பதால், பக்காவாக பொருந்திப் போகிறார். கத்திக் கத்திப் பன்ச் பேசுவது தான் மாஸ் என்ற பாணியை முற்றிலும் தவிர்த்துவிட்டு, ஒரு மிதப்பான டோனில் பவன் பேசுவதே பவர் ஃபுல்லாக இருக்கிறது. 

காமெடி:

பவன் - ஸ்ருதிஹாசனுக்கு இடையில் காதலை வரவழைக்க, அலி அண்ட் கோ போடும் திட்டங்கள், ஸ்ருதிஹாசன் வீட்டில் பவன் செய்யும் சேட்டைகள் என எல்லா காமெடிகளும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. வீரம் படத்தில் அஜித்துக்கு செட்டாகாத காமெடிக்காட்சிகள் இந்த படத்தில் பவனுக்கு செட்டாகியிருப்பது 'காட்டமராயுடு'வின் ப்ளஸ்.

கதாபாத்திரத் தேர்வுகள்

ஸ்ருதிஹாசன் தவிர, மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வுகள் சரியாகவே இருந்தது. பவன் துவங்கி, காமெடிக்கு அலி, சென்டிமென்டுக்கு நாசர், வில்லன் தருண் அரோரா என அத்தனை பேரும் கச்சிதம். ஆனால், அவர்களை வைத்து வாங்கியிருக்கும் அவுட்புட் தான் பிரச்னையே.

மிஸ்

தேவி ஸ்ரீ பிரசாத்:

கத்தியில் அனிருத் கொடுத்திருந்த டெம்போவை கைதி நம்பர் 150யில் சொதப்பியிருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். கர்மா சும்மாவிடுமா, வீரத்தின் பெரிய ப்ளஸ் ஆக இருந்த பின்னணி இசையை, காட்டபராயுடுவில் பெரிய மைனஸ் ஆக மாற்றி கொடுத்திருக்கிறார் அனுப் ரூபன்ஸ். பாடல்களும் மிக ஆவரேஜ் தான். கர்மா இஸ் எ பூமராங் தேவி!

ஸ்ருதிஹாசன்:

கப்பர்சிங்கும் ரீமேக், காட்டமராயுடுவும் ரீமேக். கப்பர்சிங்கில் ஸ்ருதி தான் ஹீரோயின், இதிலும் ஸ்ருதியை நடிக்க வைத்தால் காட்டமராயுடுவும் ஹிட் ஆகும் என்கிற மூட நம்பிக்கை கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதாபாத்திரத்திற்கு ஸ்ருதி அவ்வளவு பொருத்தமாக இல்லை. 

சண்டைக்காட்சிகள்:

இதிலும் நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கிறது. ஆனால், அவ்வளவு பவர்புல்லாகவோ, நம்பும் படியோ இல்லை. பவன், காலால் தரையில் ஓங்கி மிதித்தால் சுத்தி இருக்கும் சுமோ பறக்கிறது. அடியில் வெடி வைத்திருப்பார்கள் என சமாதானம் ஆகலாம். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், ராக்கெட் லாஞ்சரே விட்டாலும் பவன் அதை முறைத்து பார்த்தே விரட்டிவிடுவார் என்கிற ரேன்ஜில் போவதால் பரபரப்பாக ஒன்றும் இல்லை. ஆனால், வீரம் படத்தில் அஜித்துக்கு சண்டைக்காட்சிகள் அத்தனையும் பக்காவாக பொருந்தியிருக்கும். தமிழ்ப்படத்தின் சண்டைக்காட்சிகளை விட தெலுங்கில் மிகைப்படுத்தி எடுக்க வேண்டும் என்று ரொம்பவே பில்டப் செய்துவிட்டார்கள். அது ஏனோ  'காட்டமராயுடு'வில் ஒர்க்-அவுட்டாகவில்லை.