Published:Updated:

தியேட்டர்ல ஏன் பாப்கார்ன் விக்கறாங்க தெரியுமா? - செஞ்சிட்டாளே என் காதல படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
தியேட்டர்ல ஏன் பாப்கார்ன் விக்கறாங்க தெரியுமா? - செஞ்சிட்டாளே என் காதல படம் எப்படி?
தியேட்டர்ல ஏன் பாப்கார்ன் விக்கறாங்க தெரியுமா? - செஞ்சிட்டாளே என் காதல படம் எப்படி?

காதலால் காணாமல் போகும் ஒருவனின் கதை பற்றிச் சொல்கிறது 'செஞ்சிட்டாளே என் காதல'

காதல் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் வீராவை (எழில் துரை) திடீரெனக் காணவில்லை. வீட்டில் தூக்கு மாட்டுவதற்காக புடவை சுருக்கு போட்டு ரெடியாக இருப்பதைப் பார்த்து அவனது நண்பர்களும், குடும்பத்தினரும் பயந்து போய்த் தேட ஆரம்பிக்கிறார்கள். அவரின் நண்பர்களை ஒவ்வொருவராக விசாரிக்க ஆரம்பிக்க, எழிலுக்கும் - அனுவுக்கும் (மதுமிலா) இடையேயான காதலும், அவர்களுக்குள் நடந்த சண்டைகளும் நான்-லீனியரில் தெரிய வருகிறது. இவர்கள் காதல் என்ன ஆகிறது, தியேட்டரில் பாப்கான் ஏன் கொடுக்கிறார்கள், இந்தப் படத்திற்கும் பாகுபலி 2, காற்று வெளியிடை, 8 தோட்டாக்கள் படங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை எல்லாம் சொல்லும் படம் தான் 'செஞ்சிட்டாளே என் காதல'

காதல், அதற்குள் இருக்கும் பொசசிவ், ஒரு பெண், தன் காதலை ப்ரேக்-அப் செய்துவிட்டு இன்னொரு காதலுக்குள் நுழைவது ஆகியவற்றை படம் பேசுகிறது. எனக்கு வாய்த்த அடிமைகள், காதல் கண்கட்டுதே என சமீபத்திலேயே இதே போன்ற விஷயத்தை சமீபத்தில் டீல் செய்திருந்தாலும், கொஞ்சம் நியாயமாக இருவருக்குள் நிகழும் புரிதல், அதில் தவறாக புரிந்து கொள்ளப்படும் வார்த்தைகள் என்கிற சில காரணங்களை முன் வைத்த விதத்திலும், அதை காமெடியாக சொல்ல முயன்ற விதத்திலும் கவனிக்க வைக்கிறார் இயக்குநரும் நடிகருமான எழில் துரை. 

படத்திற்கு என்ன மாதிரியான ட்ரீட்மென்ட் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கு தகுந்த உணர்வை படம் முழுக்க படர வைத்திருக்கிறார் எழில். முழுக்க காமெடியை வைத்துவிட்டு சில இடங்களில் எமோஷனலான விஷயங்களையும் லைட் மெசேஜாக சொல்லியிருக்கிறார். தன் படப்படப்பான பேச்சு, சின்ன கமென்ட்களில் சிரிக்க வைப்பதில் ஸ்கோர் செய்கிறார் எழில்.  நடுங்கிய படி கோபப்படுவது, சில முகபாவனைகளிலும் தடுமாறுவது, சில காட்சிகளில் 'அட்டக்கத்தி' தினேஷை நினைவுபடுத்துவது போன்றவை சின்ன உறுத்தல்கள். ஹீரோயின் மதுமிலா, தன் காதலை வெளிப்படுத்துவது, பின்பு அவரை விட்டு விலகும் போது நடக்கும் உரையாடல்கள், தோழிகள் கொடுக்கும் யோசனைகளைக் கேட்டு தடுமாறுவது என நடிக்க கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார். எழிலை ஒரு தலையாக காதலிக்கும் அபிநயா நன்றாக நடித்திருந்தாலும் கதாபாத்திரம் கொஞ்சம் செயற்கையாக இருந்தது. ஆனாலும், படத்தில் பெரிய தொந்தரவாக இல்லை. இவர்கள் தவிர மைம் கோபி, ரமா, வின்சென்ட், அர்ஜுனன், அஜய் ரத்னம், மகாநதி ஷங்கர், ஹீரோவின் தங்கையாக நடித்திருந்தவர் என அத்தனை பேரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். 

படத்தின் நான்-லீனியர் எடிட்டிங்கில் நிகழ்கால காட்சியில் பேசும் வசனத்துடன், ப்ளாஷ்பேக் காட்சியின் வசனத்தை கோர்த்திருந்த ஷார்ப் கட்கள் மூலம் கவரும் லாரன்ஸ் கிஷோர் பாரட்டுக்கு உரியவர். சாதாரணக் கதையை சுவாரஸ்யமாக சொல்ல நினைத்து நீளமாக்காமல், இரண்டு மணிநேரத்துக்குள் படத்தை கொண்டு வந்திருக்கிறார். மனீஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவு, ராஜ் பரத்தின் இசையும் படத்தில் எந்த அலுப்பும் உண்டாக்காமல் நகர வைத்திருக்கிறது. குறிப்பாக பாரதியின் ‘பின்நின்று கண் மறைத்தால்’ வரிகளை பாடலாக்கியிருந்தது அருமை.

ஒரு காதல் தோல்விக்கு இன்னொரு காதல் மருந்தாகாது, ஒண்ணு  பழைய காதல சுத்தமா மறந்திடணும், இல்ல அதையே பேசிப் பேசித் தீர்த்துடணும்  எனப் பேசுவது, க்ளைமாக்ஸுக்கு முன் நாயகியுடன் பேசி ஸ்மூத்தாகப் பிரிவது, காதல்ங்கறது என அட்வைஸ் பொழியாமல் கதை நகர்த்துவது என நிறைய விஷயங்களை மெச்சூராகக் கையாண்டிருக்கிறார் எழில். ஆனால், பெண்கள் தான் காதலில் ஏமாற்றுவார்கள், எளிதாக ஆளை மாற்றுவார்கள், அந்தப் பெண்ணின் தோழிகள் எல்லோரும் சகுனியாக இருந்து ஆலோசனைகளை வழங்கி காதலைப் பிரிப்பார்கள் என வழக்கமாக ரிலேஷன்ஷிப் பற்றிய படங்கள் சொல்லும் கருத்துகளையே மீண்டும் முன்வைத்து கதை சொல்வது ஆரோக்யமானது கிடையாது. என்டர்டெய்ன்மென்ட் படம் என்றாலும், சொல்லும் விஷயங்களை ஒரு சார்பாக மட்டுமே டீல் செய்யாமல் இருந்தால் வரவேற்கப்பட வேண்டிய படம் ஆகியிருக்கும்.

சொல்ல மறந்தே போயிட்டேன். தியேட்டரில் ஏன் பாப்கார்ன் கொடுக்கறாங்க தெரியுமா?  பாகுபலி 2, காற்று வெளியிடை, 8 தோட்டாக்கள் படங்களுக்கும் என்ன சம்பந்தம்?

'8 தோட்டாக்கள்' படத்தில் தொலைந்து போகும் துப்பாக்கி போல இந்தப் படத்திலும் வீட்டில் வைத்திருந்த அஜய் ரத்னத்தின் துப்பாக்கி காணாமல் போகும், 'பாகுபலி 2' பட ஹீரோயின் அனுஷ்கா, அது தான் இந்தப் படத்தில் மதுமிலாவின் கதாபாத்திரப் பெயர். 'காற்று வெளியிடை' படம் மாதிரி இதிலும் ஹீரோவும் ஹீரோயினும் சண்டை போட்டுகிட்டே இருப்பாங்க. மூணுமே சுமார் காரணமா இருக்கா, சரி பாப்கார்ன் காரணத்தைக் கேளுங்க.

இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் வட அமெரிக்காவில் பஞ்சம் வந்தது. மக்களுக்கு சாப்பிடவே எதுவும் கிடைக்கலையாம். அப்போ சோளம் மட்டும் தான் மலிவாக கிடைச்சுது. அதைப் பொரிச்சு சாப்டாங்களாம். அப்பறமா பஞ்சமெல்லாம் முடிஞ்சதும் கூட அந்த பொரித்த சோளத்துடைய ருசி பிடிச்சுப் போச்சாம். ஆனா, அது பஞ்சத்தில் இருக்கறவங்க சாப்பிடற பொருள்னு பொது இடத்தில் சாப்பிட கூச்சப்பட்டவங்களுக்காக இருட்டான இடத்தில் விற்பனை செய்தாங்களாம். அந்த இருட்டான இடம் தான் தியேட்டர். இப்படி தான் தியேட்டரில் பாப்கார்ன் விற்பனை துவங்கியது என்பது படத்தில் சொல்லப்படும் வரலாறு. இது மாதிரி பார்க்கிங்கிற்கு கூட ஒரு வரலாறு இருக்கு. இந்தப் படத்தின் அடுத்த பார்ட் வரும் போது அதனுடைய விமர்சனத்தில் எழுதறோம்.